படுக்கைக்கு அடியில் கட்டு கட்டாகப் பணம்!

படுக்கைக்கு அடியில் கட்டு கட்டாகப் பணம்!
X
ஒரு மாநகராட்சியின் வருவாய் பொறுப்பாளர் வீட்டில் கட்டு, கட்டாக பணம் சிக்கியது.

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாநகராட்சியிலுள்ள வருவாய் பொறுப்பாளர் மற்றும் கண்காணிப்பாளர் வீட்டில், படுக்கைக்கு அடியில் காட்டுகட்டாக லஞ்ச ஒழிப்புத்துறை பணத்தைக் கைப்பற்றியிருக்கின்றனர். இந்த சம்பவத்தைப் பொறுத்தவரையில், வருவாய் பொறுப்பாளர் மற்றும் கண்காணிப்பாளர் தாசரி நரேந்தர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

அதன்படி, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், நரேந்தர் வீட்டில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வீட்டில் நரேந்தரின் படுக்கைக்கு அடியில் அட்டைப்பெட்டியில் கட்டுக்கட்டாக வைக்கப்பட்டிருந்த பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மொத்தமாக வீட்டில் ரொக்கமாக மட்டும் இரண்டு கோடியே 93 லட்ச ரூபாயை அதிகாரிகள் கைப்பற்றினர்.


அதோடு, நரேந்தரின் மனைவி மற்றும் தாயாரின் வாங்கிக் கணக்குகளில் ஒரு கோடியே பத்து லட்ச ரூபாய் இருப்பதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். இதுமட்டுமல்லாமல், ஆறு லட்ச ரூபாய் மதிப்பிலான 51 டோலா தங்கம் மற்றும் 17 அசையா சொத்து ஆவணங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை கைப்பற்றப்பட்ட ரொக்கம், தங்கம், அசையா சொத்துகளின் மொத்த மதிப்பு சுமார் ஆறு கோடியே ஏழு லட்ச ரூபாய் என கணக்கிடப்பட்டிருக்கிறது.

தனது தந்தையின் மரணத்துக்குப்பின் பிறகு கருணை அடிப்படையில் வேலை பெற்ற நரேந்தர், இந்த சோதனைக்குப் பின் கைதுசெய்யப்பட்டார். மேலும், கூடுதல் சொத்துகளை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை குறித்து ஐ.பி.எஸ் அதிகாரி சி.வி.ஆனந்த் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கும் வீடியோவில், நரேந்தரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றிய பணம் எண்ணப்படும் காட்சிகளும், அவற்றின் மதிப்பும் இடம்பெற்றிருக்கின்றன.

Next Story