அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
X

புதுச்சேரி சட்டமன்றம் - கோப்புப்படம் 

புதுச்சேரியில் 23 ஆயிரம் ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயத்தி வழங்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் 23 ஆயிரம் பேருக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு ரூ.60 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகும். பணவீக்கம் காரணமாக விலைவாசி ஏற்றம் தரும் சமயத்தில் அதை சமாளிக்கும் விதமாக நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதம் உயர்த்தி அவ்வப்போது அகவிலைப்படி அறிவிக்கப்படுகிறது, இது ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தினை கணக்கிட்டு ஆண்டிற்கு இருமுறை அறிவிக்கப்படுகிறது.

அகவிலைப்படி உயர்த்தப்படும்போது, அது அவர்களின் மாதச் சம்பளத்தை அதிகப்படுத்துகிறது. அதோடு, அவர்களின் அடிப்படை சம்பளத்தில் சேர்க்கிறது. அண்மையில், மத்திய அரசு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான அகவிலைப்படியை உயர்த்தியது. அதனடிப்படையில் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசின் நிதித் துறை சார்பு செயலர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் அனைத்து துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் 38 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 4 சதவீதம் உயர்த்தி, 42 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு, ஜனவரி 1ம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அகவிலைப்படி, ஏப்ரல் மாத சம்பளத்தில் 42 சதவீதமாக சரி செய்யப்படும். மூன்று மாத நிலுவைத் தொகை இரு வாரத்திற்குள் தரப்பட்டு விடும். இந்த அகவிலைபடி உயர்வு மூலம் மாநிலத்தில் 23 ஆயிரம் ஊழியர்கள் பயனடைய உள்ளனர். இதன் மூலம் அரசுக்கு மாதத்திற்கு ரூ.5 கோடி வீதம் ஆண்டிற்கு ரூ.60 கோடி கூடுதல் செலவாகும். இவ்வாறு கூறியுள்ளார்.

இருப்பினும், இந்த அகவிலைப்படி உயர்வு அனைத்து அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பகுதிநேர ஊழியர்களுக்கும் பொருந்துமா என இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் தற்போதுள்ள ஓய்வு பெற்ற ஊழியர்கள் 16 ஆயிரம் பேருக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

இது குறித்து நிதித் துறை அதிகாரிகள் கூறுகையில், 'பகுதி நேர ஊழியர்களுக்கான அகவிலைபடி உயர்வு தொடர்பாக இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்ததும், புதுச்சேரி அரசும் அறிவிக்கும். இதற்கான அறிவிப்பு தனியாக ஒரிரு வாரங்களில் வெளியாகும்' என்றனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!