அன்று 4 ஏக்கர், இன்று 36 ஏக்கர்... கோடிகளை குவிக்கும் விவசாயி!
கேரட் விவசாயத்தில் சாதித்தவிவசாயி பூமன்சிங்.
கடும் உழைப்பால் 4 ஏக்கரில் தொடங்கிய விவசாயத்தை, இன்று 36 ஏக்கருக்கு விரிவுபடுத்தி லாபமீட்டி வருகிறார். பஞ்சாப் மாநிலம், கபுர்தலா மாவட்டம், பரம்ஜித்புரா எனப்படும் அல்லுபூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பூமன் சிங். இப்போது இவருக்கு வயது 64. சிறு வயதிலிருந்தே தன் தந்தையுடன் வயல்களுக்கு சென்று வந்த பூமன் சிங், அங்கு தனது தந்தை காட்டிய கடும் உழைப்பை பார்த்து அதிசயித்துப் போனார். அதனால் தான் என்னவோ, பூமன்சிங்கிற்கு இயல்பாகவே விவசாயம் மீது ஆர்வம் இருந்தது.
இளங்கலை பி.ஏ. படித்துக் கொண்டிருந்த போது, 1979-ல் ஜெர்மனிக்கு செல்வதற்காக படிப்பை துறந்த பூமன் சிங்கிற்கு சில மாதங்களுக்கு மேல் அங்கு இருக்க முடியவில்லை. மீண்டும் பஞ்சாப் திரும்பிய பூமன், தனது இரு சகோதரர்களுடன் சேர்ந்து தந்தைக்கு விவசாயத்தில் உதவிகரமாக இருந்தார்.
1990-களில் தனது கிராமத்தில் சில விவசாயிகள் சிறிய நிலப்பரப்பில் கேரட் பயிரிடுவதைக் கவனித்த பூமன் சிங்கிற்கு தானும் சாகுபடி செய்யலாம் என்று நினைத்தார். கேரட் விவசாயிகளிடம் இதுபற்றி விவரங்களை கேட்டபோது, "ஐயோ கேரட் விவசாயம் அவ்வளவு எளிதல்ல; அதில் பெரிய லாபம் இல்லை" என்று சொன்னார்கள்.
ஆனால், பூமன் சிங்கிற்கு கேரட் சாகுபடியை சுற்றியே மனம் அலைந்தது. இதில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வேரோடியது. லாபமில்லை என்று கூறப்பட்ட கேரட் விவசாயத்தில் லாபமீட்டிக் காட்ட வேண்டுமென்ற வைராக்கியம் கொண்டார். கேரட் சாகுபடி பற்றிய நுணுக்கங்களை கேட்டறிந்தார்.
மண்ணின் நிலை, உகந்த விதைப்பு நேரம் மற்றும் அறுவடை நுட்பங்கள் பற்றி அறிந்து கொண்டார். கோதுமை மற்றும் நெல் போன்ற போன்ற பயிர்களைப் போலல்லாமல், கேரட் சாகுபடிக்கு மிகவும் நுணுக்கமான அணுகுமுறை தேவை. அதை செய்தால் கணிசமான வருமானம் கிடைக்கும் என்பதை பூமன் சிங் புரிந்து கொண்டார்.
இதை தொடர்ந்து தனது 4 ஏக்கர் நிலத்தில் கேரட் சாகுபடி செய்தார். கடுமையாக உழைத்ததோடு தான் கற்றறிந்த நுட்பங்களை செயல்படுத்தினார். இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. பூமன் சிங்கின் புதுமையான விவசாய நடைமுறைகள், ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கேரட் மற்றும் அதன் விதைகளை விற்க உதவியது.
அவரது பண்ணையில் இப்போது சுமார் 650 ஏக்கரில் சாகுபடிக்கு போதுமான விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு, பஞ்சாப் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு உயர்தர கேரட் பயிரிட உதவுகிறது. ஒவ்வோர் ஆண்டும் 16.50 குவிண்டால் கேரட் விதைகளை வெறும் 3 ஏக்கரில் உற்பத்தி செய்கிறார். சராசரியாக ஒரு கிலோ விதைகளை ரூ.1,200 முதல் 1,300 வரை விற்பனை செய்கிறார். இதன் மூலம் ஆண்டுக்கு 20 லட்சம் வருமானம் கிடைக்கிறது.
கேரட் சாகுபடி குறித்து தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட பூமன் சிங். "நானும் என் சகோதரர்களும் அயராது உழைத்தோம். கேரட் சாகுபடியை விரிவுபடுத்த கூடுதல் நிலத்தை குத்தகைக்கு எடுக்க ஆரம்பித்தோம். மற்ற விவசாயிகளுக்கு விற்க கேரட் விதைகளை உற்பத்தி செய்யத் தொடங்கினேன். இப்போது என்னிடம் 36 ஏக்கர் நிலம் உள்ளது" என்றார் பெருமிதத்துடன்.
அவர் மேலும் கூறுகையில், "செப்டம்பர் மாதத்திலிருந்து அக்டோபர் மாதத்துக்குள் விதைத்தால் நல்ல மகசூல் கிடைக்கும். ஒரு ஏக்கரில் விதைக்க 2.5 கிலோ விதைகள் தேவைப்படும். ஒரு ஏக்கரில் இருந்து 200 முதல் 250 குவிண்டால் கேரட் அறுவடை செய்யலாம்.
இப்போது விவசாயம் அழிந்து வருகிறது. வாழ்க்கை நடத்த விவசாயியால் சம்பாதிக்க முடியாது என்ற கருத்து உள்ளது. இதை சவாலாக எடுத்தேன். மற்ற வணிகத்தைப் போலவே, கவனத்துடன் மற்றும் சரியான நிர்வாகத்துடன் விவசாயத்தை அணுகினால் அது மிகவும் வெற்றிகரமாக இருக்கும்" என்றார்.
இவர் விளைவித்த கேரட்களின் தரம், வியாபாரிகளை பெரிதும் ஈர்த்தது. இப்போது பல வியாபாரிகள் நேரடியாக அவருடைய பண்ணையிலிருந்து கேரட்களை கொள்முதல் செய்கிறார்கள். அவருடைய 36 ஏக்கர் நிலத்தில் பலவகையான பண்ணை இயந்திரங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றை அவரது குடும்பம் நிர்வகிக்கிறது.
வெளிநாட்டில் தொழில் செய்து கொண்டிருந்த அவரது இரு மகன்களும் சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர். கேரட் விவசாயத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் பணியில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.
அர்ப்பணிப்பு உணர்வு, ஈடுபாடு, கடின உழைப்பு இருந்தால் விவசாயமும் வசப்படும்; அதில் லாபம் ஈட்டலாம் என்பதை நிரூபித்துள்ளார் பூமன் சிங். அவரது வெற்றி மற்றவர்களுக்கு ஒரு பாடம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu