/* */

டெல்லி அலுவலக திறப்பு: ஸ்டாலின் அழைத்தும் வராத 2 தலைவர்கள் -காரணம் இதுதான்..!

டெல்லியில் நடந்த திமுக அலுவலக திறப்பு விழாவில், திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தும் 2 தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை

HIGHLIGHTS

டெல்லி அலுவலக திறப்பு: ஸ்டாலின் அழைத்தும் வராத  2 தலைவர்கள் -காரணம் இதுதான்..!
X

டெல்லியில் நடந்த திமுக அலுவலக திறப்பு விழாவில் பல்வேறு முக்கிய தேசிய தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமான இரண்டு தலைவர்கள் கலந்து கொள்ளாதது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா கருணாநிதி அறிவாலயம் டெல்லியில் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை திறந்து வைக்க முதல்வர் ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றார். அன்று டெல்லியில் நடந்த பிரம்மாண்ட விழாவில் இந்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், இடதுசாரி தலைவர்களான சீதாராம் யெச்சூரி, டி ராஜா, விசிக தலைவர் எம்பி திருமாவளவன், திமுக அமைச்சர்கள், காங்கிரஸ் எம்பிக்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு முதல்வர் ஸ்டாலின் சார்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தெலுங்கானா முதல்வர் கே சி சந்திரசேகர ராவ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இவர்கள் இருவரும் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. தனிப்பட்ட காரணங்களை, நிகழ்வுகளை காரணம் காட்டி இவர்கள் இந்த நிகழ்விற்கு வரவில்லை. முதல்வர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக பார்க்கப்பட்ட மம்தா, கேசிஆர் இருவரும் இந்த நிகழ்விற்கு வராதது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கும் முனைப்பில் உள்ளது. இதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட கடந்த சில வாரங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் மற்றும் கேசிஆர் ஆகியோருக்கு போன் செய்து இருந்தார். மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டிற்கு இவர்களை அழைத்து இருந்தார். இதையடுத்து டெல்லியில் நடந்த நிகழ்வில் கேசிஆர்., மம்தா ஆகியோர் வருவார்கள், இவர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து கூட்டணி குறித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அகிலேஷ், சோனியா ஆகியோர் வந்த நிலையில் கேசிஆர், மம்தா ஆகியோர் வரவில்லை.

இதற்கு முன்பே முதல்வர் ஸ்டாலினின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா, தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. அப்போது அலுவலக காரணங்களை இருவரும் குறிப்பிட்டதாக தெரிகிறது. இதன் மூலம் இரண்டாவது முறையாக முதல்வர் ஸ்டாலின் விடுக்கும் அழைப்பு ஒன்றிற்கு வராமல் இரண்டு தலைவர்களும் புறக்கணித்து உள்ளனர். ஆனால் திறப்பு விழாவில் கலந்து கொள்ள முடியாத நிலை குறித்து மம்தா, கேசிஆர் இருவரும் ஸ்டாலினிடம் முன்பே தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிகழ்வை இருவரும் புறக்கணிக்க காங்கிரஸ் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தேசிய அளவில் பெரிய கூட்டணியை உருவாக்க, மம்தா, கேசிஆர் முயன்று வருகிறார்கள். முதலில் இந்த கூட்டணியில் காங்கிரசை சேர்க்க மம்தா விரும்பவில்லை. காங்கிரஸ் தனி வழியில் போகலாம், நாங்கள் தனி வழியில் போகிறோம் என்று வெளிப்படையாக மம்தா கூட குறிப்பிட்டு இருந்தார். ஆனால் 5 மாநில தேர்தலுக்கு பின் காங்கிரஸ் கட்சி மாநில கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று மம்தா இறங்கி வந்தார்.

எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிய கூடாது. எல்லா எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக மம்தா இப்படி குறிப்பிட்டு இருந்தார். ஆனால் மம்தாவிற்கு காங்கிரஸ் சார்பில் பதில் அளிக்கப்படவில்லை. அதோடு, காங்கிரஸ் எம்பி ஆதிர்ரஞ்சன் சவுத்திரி மம்தாவை கடுமையாக விமர்சனமும் செய்து இருந்தார். மம்தா இறங்கி வந்தும் கூட காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் வாய்ப்பினை நழுவ விட்டது. இந்த நிலையில்தான் சோனியாவுடன் ஒரே மேடையில் தோன்றுவதை மம்தா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

முக்கியமாக சோனியா தலைமை வகிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள மம்தா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. கேசிஆரும் இதே காரணத்திற்காக இந்த நிகழ்வை புறக்கணித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அகிலேஷ் யாதவ் வந்தது முக்கியமான விஷயமாக பார்க்கப்பட்டது. உத்தர பிரதேசத்தில் காங்கிரசுடன் சமாஜ் வாதி கடுமையாக மோதிய பின் நேற்று நடந்த இந்த சந்திப்பு ஒரு விதமான நட்பை மீண்டும் இரண்டு தரப்பிற்கும் இடையில் நேற்று ஏற்படுத்தி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மம்தா, கேசிஆர் வராதது கூட ஒரு வகையில் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருந்தாலும் ராகுல் காந்தி வராததுதான் சர்ச்சையாகி உள்ளது. ராகுல் டெல்லியில் இருந்தும் வரவில்லை. அதேபோல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் முதல்நாள்தான் சந்தித்தார். ஆனாலும் கெஜ்ரிவால் இந்த நிகழ்விற்கு வரவில்லை. அதேபோல் எதிர்பார்த்தபடியே பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் யாரும் இந்த நிகழ்விற்கு வரவில்லை.

Updated On: 6 April 2022 12:29 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  4. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  5. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  10. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!