இந்திய புகழ்பெற்ற தபேலா வித்துவான் ஜாகீர் உசேன் இறப்புக்கு காரணம் இந்த நுரையீரல் நோய் தான்..!
உலக புகழ்பெற்ற பழம்பெரும் தபேலா இசைக்கலைஞரான உஸ்தாத் ஜாகீர் உசேன் சான் பிரான்சிஸ்கோவில் டிசம்பர் 15 அன்று காலமானார். தபேலா வாசிப்பதில் வல்லவரான இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். 73 வயதான ஜாகீர் உசேன் தபேலாவில் அனைவரையும் மயக்கும் வகையில் இசைக்கும் வல்லமை படைத்தவர்.
இந்தியாவைச் சேர்ந்த தபேலா இசைக் கலைஞர் ஆவார். இவர் தபேலா இசைக் கலைஞர் அல்லா ரக்காவின் மகன்.இவர் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் அறியப்படுகிறார். இவர் மும்பையில் பிறந்தவர். தனது ஏழாவது வயதில் தபேலா வாசிக்கத் தொடங்கினார். இவர் ஆண்டிற்கு 150 இசை நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தியுள்ளார்.
இவர் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதுவும் அவர் மிகவும் மோசமான இடியோபாடிக் பல்மனரி ஃபைப்ரோசிஸ் (Idiopathic Pulmonary Fibrosis) என்னும் நுரையீரல் நோயின் காரணமாக இறந்ததாக தெரிவிக்கின்றனர்.
இந்த தகவலை அவரது புல்லாங்குழல் கலைஞர் ராகேஷ் சௌராசியா பகிர்ந்துள்ளார். கடந்த வாரம் ஜாகிருக்கு இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டது, அதன் பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.அவரது மறைவு இசை துறை, திரைப்படத் துறை மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தபேலா வித்துவான் ஜாகீர் உசேனின் இறப்புக்கு காரணமான இடியோபாடிக் பல்மனரி ஃபைப்ரோஸிஸ் பற்றி நாம் இப்போது விரிவாக காண்போம்.
இடியோபாடிக் பல்மனரி ஃபைப்ரோஸிஸ் என்றால் என்ன?
இடியோபாடிக் நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் என்பது ஒரு முற்போக்கான நோயாகும், அதாவது ஃபைப்ரோஸிஸ் காலப்போக்கில் உருவாகிறது, படிப்படியாக மூச்சுத் திணறல் அதிகரிக்கிறது மற்றும் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
இந்த நோயால் நுரையீரலில் உள்ள திசுக்கள் கடினமாவதோடு, வடுக்களை ஏற்படுத்தும். மேலும் இது நுரையீரலில் உள்ள இணைப்புத்திசுக்கள் மற்றும் காற்றுப்பைகளையும் பாதிக்கும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரலானது படிப்படியாக மோசமடையத் தொடங்கும். அப்போது நுரையீரலில் உள்ள திசுக்கள் இறுக்கமடைந்து, சுவாசிப்பதே கடினமாகி, தினசரி வேலையைக் கூட செய்ய முடியாத அளவில் மூச்சுத்திணறல் பிரச்சனையால் சிரமப்பட வேண்டியிருக்கும்.
இந்த நோய்க்கு எந்த சிகிச்சையும் இல்லாததால், காலப்போக்கில் இது மோசமாகி, இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கும். சில சமயங்களில் ஃபைப்ரோசிஸின் அளவைக் குறைக்க மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் இருந்தாலும், அவை அறிகுறிகளைக் குறைக்குமே தவிர, உயிரைக் காப்பாற்ற வேண்டுமானால், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை தான் ஒரே வழி.
பல்மனரி ஃபைப்ரோசிஸ் அறிகுறிகள் என்ன?
நுரையீரல் ஃபைப்ரோஸிஸை ஏற்படுத்தும் பல வகையான நுரையீரல் நோய்கள் உள்ளன. சிலருக்கு இந்த நோய் விரைவில் ஒருவரது நிலைமையை மோசமாக்கிவிடும். இன்னும் சிலருக்கு அறிகுறிகள் தெரியத் தொடங்கி மெல்ல மெல்ல அந்த அறிகுறிகள் தீவிரமாகும். அந்த அறிகுறிகள் பின்வருமாறு:
- மூச்சுத் திணறல் , குறிப்பாக உடற்பயிற்சியின் போது
- உலர், ஹேக்கிங் இருமல்
- வேகமான, ஆழமற்ற சுவாசம்
- படிப்படியாக திட்டமிடப்படாத எடை இழப்பு
- சோர்வு
- மூட்டுகள் மற்றும் தசைகள் வலிக்கிறது
- விரல்கள் அல்லது கால்விரல்களின் நுனிகளை கிளப்பிங் (விரிவாக்குதல் மற்றும் வட்டமிடுதல்).
யாருக்கு பல்மனரி ஃபைப்ரோசிஸ் வர வாய்ப்புகள் உள்ளன?
- பல்மனரி ஃபைப்ரோசிஸ் பெரும்பாலும் 50 முதல் 70 வயதிற்குட்பட்டவர்களுக்கு வருவதற்கான அபாயம் அதிகமாக உள்ளன.
- முக்கியமாக பல்மனரி ஃபைப்ரோசிஸ் பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிக்கும். இருப்பினும், சில ஆண்டுகளாக பெண்களும் இந்நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
- சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இந்நோய் வருவதற்கான அபாயம் அதிகமாகவே உள்ளன.
- தொடர்ந்து கெமிக்கல்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்களை சுவாசித்து வந்தால், அது நுரையீரலில் சேதத்தை ஏற்படுத்தும். எனவே உலோக தொழிலாளர்கள், கல் உடைப்பவர்கள், பாலிஷ் செய்பவர்கள், விவசாயிகள் போன்றோருக்கு இந்நோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளன.
- சில சமயங்களில் ஆட்டோ இம்யூன் நோய்கள், ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் அல்லது வைரஸ் தொற்றுகளாலும் பல்மனரி ஃபைப்ரோசிஸ் வருவதற்கான அபாயம் உள்ளன.
- புற்றுநோய் சிகிச்சைக்கான கதிர்வீச்சு சிகிச்சை போன்ற கதிர்வீச்சு வெளிப்பாடும் நுரையீரல் திசுக்களை சேதப்படுத்தி பல்மனரி ஃபைப்ரோசிஸ் வரும் அபாயத்தை அதிகரிக்கலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu