மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....

மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....
X
பருவமழையின் போது, ​​பல வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் பிற நோய்களைப் பெறுவதற்கான ஆபத்து மற்ற பருவங்களைக் காட்டிலும் இரட்டிப்பாகும். மழைக் காலத்தை எப்படி எதிர்கொள்ள… என்பதிற்கான சில டிப்ஸ் உங்களுக்காக .…

மழைக் காலம் (rainy season) மனிதர்களுக்கு மட்டும் அல்ல. நுண்ணுயிர்கள் முதல் பேருயிர்கள் வரை அனைத்துக்குமே ஆரவாரமான, கொண்டாட்டமான காலம்தான். ஆனால் , மழைக்காலத்தில் வரும் நோய்களை பற்றிய கவலை அதிகம். மழைக்காலம் வந்தாலே சளி,இருமல் போன்ற அனைத்து பிரச்சனைகளும் வர ஆரம்பித்து விடும் .

பருவமழை (monsoon) வெப்பத்திலிருந்து நிவாரணம் அளித்தாலும், அடிக்கடி ஏற்படும் தொற்றுநோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது அவசியம்.

கோடை வெயிலில் இருந்து விடுபடும் வகையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பருவமழை வந்துவிட்டது. வெப்பமான மற்றும் ஈரப்பதமான நாளில் மழை அடிக்கடி இனிமையானதாக இருக்கும் அதே வேளையில், அது உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் கடுமையான உடல்நலக் கேடுகளை ஏற்படுத்தும் ஏராளமான வைரஸ்கள் மற்றும் நோய்களைக் கொண்டு வருகிறது.

கனமழை மற்றும் காற்று வீசும் சுற்றுப்புறங்கள் பல தொற்று நோய்களை பரப்புகின்றன. மழைக்காலத்தில், நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், தண்ணீரால் பரவும் நோய்கள் அதிகரிக்கின்றன. குளிர்ச்சியான, ஈரப்பதமான சூழ்நிலை நுண்ணுயிர்களுக்கு சாதகமானது என்பதால் அவை நன்கு பெருகும். ஆங்காங்கே நீர் தேங்குவதால், கொசு மற்றும் ஈக்கள் மூலம் பரவும் பாதிப்புகளும் அதிகரித்துவிடுகின்றன.

பருவமழையின் போது, ​​பல வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் பிற நோய்களைப் பெறுவதற்கான ஆபத்து மற்ற பருவங்களைக் காட்டிலும் இரட்டிப்பாகும். அதிகரித்த காற்றின் ஈரப்பதம், பூஞ்சை மற்றும் பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன, அத்துடன் ஆபத்தான கிருமிகள்,பல்வேறு நோய்களின் பரவலுக்கு வழிவகுக்கிறது. மழைக் காலத்தை எப்படி எதிர்கொள் என்பதிற்கான சில டிப்ஸ் உங்களுக்காக .

மலேரியா (Malaria) :

மலேரியா(Malaria) அனோபிலிஸ் எனப்படும் பெண் கொசுதான் மலேரியா காய்ச்சலுக்கு மிக முக்கியக் காரணம். இந்தக் கொசு ஒருவரைக் கடித்து, மற்றொருவரைக் கடிக்கும்போது, அதன் எச்சில் வழியாக கிருமிகள் பரவி, மலேரியா காய்ச்சல் ஏற்படுகிறது. மலேரியாவை உண்டாக்கும் ஒட்டுண்ணியான அனோபிலிஸ் மினிமஸ் மழைக்காலத்தில் இனப்பெருக்கம் செய்கிறது. நீர்நிலைகள் மற்றும் ஓடைகளில் கொசுக்கள் பெருகுவதால், நீர் தேங்குவதால் இந்த நோய் பெரும்பாலும் ஏற்படுகிறது, இதனால் கடுமையான காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இது பல நாட்கள் நீடிக்கும். மலேரியா அறிகுறிகளில் அதிக காய்ச்சல், உடல் அசௌகரியம், உடல் குளிர்ச்சி மற்றும் அதிக வியர்வை ஆகியவை அடங்கும்.

சளி, இருமல் (whooping cough) :

பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டு இதனால், சளி , இருமல் பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும். சிலருக்கு இன்ஃப்ளூயன்சா வைரஸ் காரணமாக சளி, இருமல் வரும். இந்தப் பிரச்சனைகள் வராமல் இருக்க வெளி இடங்களில் சுகாதாரமற்ற தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும் . அதே போல், ஐஸ்க்ரீம் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அடிக்கடி ஆவி பிடிப்பது, மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் சளி, இருமல் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். மழைக்காலத்தில் சுடு தண்ணீர் குடிப்பதன் மூலமும் சளி , இருமல் வராமல் தடுக்கலாம் .

டெங்கு (Dengue) :

டெங்குவைப் பரப்பும் கொசு ‘ஏடிஸ் எஜிப்டி’. இந்தக் கொசு,அசுத்தமான நீர் நிலைகளில் வாழாது. எனவே, சாக்கடைகளில் இந்தக் கொசு உற்பத்தி ஆவது இல்லை. வீட்டைச் சுற்றி இருக்கும் தேங்காய்ச் சரடுகள், ஓடுகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றில் தேங்கும் மழைத் தண்ணீரில் இருந்துதான் இந்தக் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொண்டாலே, டெங்கு காய்ச்சலைத் தவிர்க்க முடியும். டெங்கு காய்ச்சல் சரி ஆவதற்கு நான்கு முதல் ஏழு நாட்கள் வரை ஆகும். இது அதிக காய்ச்சல், சொறி, தலைவலி, குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை மற்றும் அதிக உணர்திறன் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.

சிக்குன்குனியா (Chikungunya) :

சிக்குன்குனியா என்பது தேங்கி நிற்கும் நீரில் குஞ்சு பொரிக்கும் கொசுக்களால் பரவும் கொடிய வைரஸ் நோயாகும். இந்த கொசுக்கள் தேங்கி நிற்கும் நீரில் இனப்பெருக்கம் செய்து இரவில் மட்டுமின்றி பகலில் கூட கடிக்கலாம். மேல்நிலைத் தொட்டிகள், செடிகள், பாத்திரங்கள், தண்ணீர் குழாய்கள் ஆகியவற்றில் இவற்றைக் காணலாம். தலைவலி, தசை வலி, கடுமையான மூட்டு வலி, அதிக காய்ச்சல், சோர்வு மற்றும் குளிர்ச்சி ஆகியவை சிக்குன்குனியாவின் அறிகுறிகளாகும்.

மெட்ராஸ் ஐ (Madras eye) :

‘மெட்ராஸ் ஐ’ என அழைக்கப்படும் கண்நோய் மழை சீசனில் அதிகமாகப் பரவும். கண்ணுக்குள் இருக்கும் ‘கஞ்சக்டைவா’ எனும் பகுதியை அடினோ வைரஸ் தாக்குவதால் கண் சிவந்துவிடும். இதனால், சில நேரங்களில் கண்ணீர் கசிந்துகொண்டே இருக்கும். அடினோ வைரஸ் எளிதில் மற்றவர்களுக்கும் பரவும்.ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மெட்ராஸ் ஐ பரவாமல் இருக்க கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். கண்களை அடிக்கடி தொடுவதை தவிர்க்கவும். கண்ணாடியைப் பயன்படுத்துவதன் மூலம் இவற்றை குறைக்கலாம் என்பதோடு இதுபோன்ற தொற்றுநோய்கள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.

வயிற்றுப்போக்கு (diarrhea) :

மழைக்காலத்தில் தண்ணீரில் கழிவுநீர் கலக்க வாய்ப்பு அதிகம். இதனால், காலரா போன்ற வயிற்றுப் போக்கைப் பரப்பும் கிருமிகள் இந்தப் பருவத்தில் வேகமாகப் பரவும். சுகாதாரம் அற்ற முறையில் தயாரித்து விற்கப்படும் உணவுப் பொருட்களை உண்பதன் மூலமும், ஈ மொய்த்த பொருட்களைச் சாப்பிடுவதன் மூலமும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு இந்தப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். தெருவோர உணவுகள் மட்டும் இன்றி வீட்டிலும் சுத்தமான உணவு, காய்ச்சி வடிகட்டிய சுத்தமான நீரைப் பருகவில்லை எனில், டைபாய்டு காய்ச்சல் வரலாம். அதனால் , மழைக்காலங்களில் வெளியில் அதிகமாக உணவுகளை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் .

மஞ்சள் காமாலை (Jaundice) :

மஞ்சள் காமாலை என்பது தண்ணீரால் பரவும் நோயாகும். இது அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரால் பரவுகிறது, அத்துடன் போதுமான சுகாதாரமின்மை மற்றும் கல்லீரல் செயலிழப்பை ஏற்படுத்துகிறது. உடல் பிலிரூபின் சரியாக வளர்சிதை மாற்றமடையாதபோது, ​​​​அது தோல், சளி சவ்வுகள் மற்றும் கண்களின் வெண்மை ஆகியவற்றின் மஞ்சள் நிறத்தை ஏற்படுத்துகிறது.மஞ்சள் காமாலை பலவீனம் மற்றும் சோர்வு, அத்துடன் மஞ்சள் சிறுநீர், கண்கள் மஞ்சள் மற்றும் வாந்தி ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

மழைக்காலத்தை எதிர்கொள்ள சில டிப்ஸ்..| Some tips to tackle the monsoon season

  • குளிர்ச்சியான தட்பவெப்பநிலை நிலவுவதால் முடிந்தவரை நாம் குடிக்கும், குளிக்கும் நீர் சூடானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது.
  • தலைவலி, மூக்கடைப்பு, தும்மல், இருமல், ஜலதோஷம், சளி போன்ற தொந்தரவுகள் இருந்தால் யூகலிப்டஸ் இலை, நொச்சி இலை போன்றவற்றை நீரில் போட்டுக் கொதிக்கவைத்து அதை இளஞ்சூடான நீரில் கலந்து குளிக்கலாம். உடல்வலி இருந்தால், இவற்றுடன் நுணா (மஞ்சணத்தி) இலையைச் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குளிக்கலாம்.
  • தலையை நன்றாக உலர்த்திவிட்டு, சாம்பிராணிப் புகை காட்டலாம். சாம்பிராணிப் புகையை மூக்கால் சுவாசிக்காமல் உச்சந்தலை, பின்னந்தலையில் படுமாறு காட்டவும்.
  • மழை மற்றும் குளிர்காலத்தில் செரிமானம் சற்று மந்தமாக இருக்கும். இதனால், காரம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
  • காய்கறி, பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம். பழங்களை பகல் வேளையில் சாப்பிட வேண்டும்.கொய்யா, மாதுளை, பப்பாளி, ஆப்பிள், அன்னாசி, பேரிக்காய், நெல்லிக்காய், ஆரஞ்சு முதலானவற்றில் வைட்டமின் சி நிறைவாக உள்ளன. இவை, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
  • நாம் உண்ணும் உணவு, பானங்கள் அனைத்துமே சூடாக இருந்தால் நல்லது, காலையில் அருந்தும் தேநீரில் இஞ்சி, துளசியைச் சேர்த்துக்கொள்ளலாம். இஞ்சித்துவையல், தூதுவளைச் சட்னி, சுக்குக் காபி, கற்பூரவல்லி பஜ்ஜி, கல்யாண முருங்கை வடை இவை அனைத்துமே சளித்தொல்லையில் இருந்து நிவாரணம் அளிக்கும் சிற்றுண்டிகள்.
  • ஆஸ்துமா நோயாளிகள் சங்குப்பூ இலையைத் துவையல் செய்து சாப்பிடுவதால் நிவாரணம் பெறலாம்.
  • காய்ச்சல் , சளி, இருமல், நுரையீரல் தொந்தரவுகள் இருப்பவர்களைத் தவிர, அனைவரும் கண்டிப்பாகக் குளிக்க வேண்டும்.ஆடையை நன்றாகத் துவைத்துப் பயன்படுத்துவது அவசியம்.
  • நார்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து, வைட்டமின்கள், தாதுஉப்பு, கொழுப்புச் சத்து என அனைத்தும் நிறைந்த சரிவிகித உணவைச் சாப்பிட வேண்டும்.மூலிகை சூப், ரசம், கிரீன் டீ முதலியவற்றை அருந்தலாம்.
  • உங்கள் வீட்டில் கொசு வலைகளைப் பயன்படுத்துவதன் மூலமும், வீட்டை விட்டு வெளியேறும் முன் பூச்சி விரட்டிகள்/கிரீம்களைப் பயன்படுத்துவதன் மூலமும் கொசுக்கள் இல்லாத சூழலைப் பராமரிக்கவும்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!