உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் குரங்கம்மை: உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை!

உலகம் முழுவதும்  வேகமாக பரவி வரும் குரங்கம்மை: உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை!
X
உலகம் முழுவதும் குரங்கம்மை நோய் வேகமாக பரவி வருவதாகவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த நாடுகள் எடுக்க வேண்டும் எனவும் உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆப்பிரிக்காவில் அதிகரித்துவரும் குரங்கு அம்மை நோய் பாதிப்பால், உலகளாவிய சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை அறிவித்தது. இந்த வைரஸ் சர்வதேச எல்லைகள் மூலம் பல நாடுகளில் பரவக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.

ஐநா சபையின் உலக சுகாதார அமைப்பின் அவசரக்குழுக் கூட்டத்திற்குப் பிறகு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

காங்கோ நாட்டிலிருந்து சுமார் 10 நாடுகளுக்கு குறுகிய காலத்திலேயே குரங்கம்மை நோய் பரவியுள்ளது. இதுவரை மெல்ல மெல்ல சுமார் 100 நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனையடுத்து உலகம் முழுவதும் இந்த வைரஸ் வேகமாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக உலக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்த குரங்கம்மை நோயினால் பாதிக்கப்படுவது மட்டுமல்ல, உயிர்சேதமும் நிகழும் என்பதால், அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரங்கம்மை நோயினால், இந்த ஆண்டு மட்டும் 13 நாடுகளில் 14 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 524 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதுவரை காங்கோவில் 96%-க்கும் அதிகமாக நோய் பாதிப்புகளும், இறப்புகளும் ஒரே நாட்டில் பதிவாகியுள்ளது. இந்த புதிய வகை நோய் பாதிப்பு மக்கள் மத்தியில் விரைவாகப் பரவி வருவதால் விஞ்ஞானிகள் கவலையடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்தாண்டு 160% இந்த நோய் தொற்றின் பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில், கேரளாவில் மூவருக்கு குரங்கு அம்மை சமீபத்தில் உறுதியானது. இதற்கிடையே, மேற்கு டில்லியைச் சேர்ந்த 34 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டது.

குரங்கு அம்மை நோய் ஒரு அரிய வகை நோயாகும். இந்த நோய் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியது. இந்த நோய் கடந்த 1958 ஆம் ஆண்டு முதன் முதலில் ஆய்வகத்தில் உள்ள குரங்குகளிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதன் காரணத்தினாலேயே இந்த நோய் குரங்கு அம்மை என அழைக்கப்படுகிறது.

குரங்கு அம்மையின் அறிகுறிகள்:

குரங்கு அம்மையால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவருக்கு 5-லிருந்து 21 நாள்களுக்குள்ளாக நோயின் முதல் அறிகுறி தென்படும். குறிப்பாக, சுகாதாரமின்றி இருப்பவர்களுக்கும், அந்த இடங்களில் வசிப்பவர்களுக்கும் எளிதாக இந்தத் தொற்று ஏற்படும்.

காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம் மற்றும் சோர்வடைதல் போன்றன அறிகுறிகளாக தோன்றும். இந்த அறிகுறிகள் தோன்றிய 5 நாள்களுக்குள் உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு சிகப்பு நிற புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்புளங்களாக மாறும். அடுத்த 2-4 வாரங்களில் இந்த கொப்புளங்கள் மறைந்து உதிர்ந்து விடும்.

காய்ச்சல், தோலில் சிறு கொப்புளங்கள், தலைவலி, உடல் சோர்வு, தொண்டை புண் மற்றும் இருமல் ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள் என்று கூறப்படுகிறது.

ஐரோப்பிய நாடான டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரிக்கும், 'இமான்வேக்ஸ்' தடுப்பூசி பெரியம்மை நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இதே தடுப்பூசியை குரங்கு அம்மை நோய்க்கும் பயன்படுத்த ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்திருந்தது.

கொரோனாவை போல் இது அதிகளவு பரவி உயிர்சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்படுகிறது. இதனை அடுத்து அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்