முகம் நல்லா கலரா பளபளக்கணுமா ? முடி வளர்ச்சிய அதிகரிக்கணுமா ?அப்ப அரிசிய இப்டி யூஸ் பண்ணுங்க !...
நீளமான தலைமுடி இருப்பது யாருக்குதான் பிடிக்காது. சீனா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பெண்கள் பல நூற்றாண்டுகளாக அரிசி ஊறவைத்த நீரை சருமத்துக்கும் தலைமுடிக்கும் பயன்படுத்தி வருகின்றனர். அரிசி நீர் தலைமுறைகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு இயற்கை பராமரிப்பு முறையாகும். இதில் உடல் மற்றும் தோல் நலன்களுக்கான பல நன்மைகள் உள்ளன. அரிசி நீரில் உள்ள அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உடல் பராமரிப்புக்கு மிகவும் உதவியாகக் காணப்படுகின்றன.
அரிசி கழுவிய தண்ணீர், அரிசி மாவில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளன. இவற்றை பயன்படுத்துவதன் மூலம் சருமப் பொலிவு மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும். அதனைக் கொண்டு இயற்கையான முறையில் உங்களின் சருமம் மற்றும் தலை முடியை சிறப்பாக பராமரிக்க முடியும்.
அரிசி உணவுக்கு மட்டுமின்றி சருமப் பராமரிப்பு, தலைமுடி பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். ரைஸ் வாட்டர் மற்றும் அரிசி தயாரிப்புகள் தலைமுடிக்கு மட்டுமின்றி, சருமத்துக்கும் நல்லது. அரிசி தயாரிப்புகளை தலைமுடியில் பயன்படுத்துவதால் சேதமடைந்த முடியை மீட்கவும், முடியின் நுனியில் ஏற்படும் பிளவுகளைக் கட்டுப்படுத்தவும், முடி உடைவதை எதிர்த்துப் போராடவும் பயன்படுத்தலாம்.
சருமத்தில் அரிசி சார்ந்த பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தை ஹைட்ரேட் செய்யவும், சூரியனால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவும் அல்லது குறைக்கவும் முடியும். அதோடு சருமத்துக்கு இயற்கையான பளபளப்பை கொடுக்கவும் அரிசி தயாரிப்புகள் உதவும்.
அரிசியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
அரிசியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்வோம் வாங்க.
1.கலோரிகள்
2.நிறைவுற்ற கொழுப்பு
3.சோடியம்
4.பொட்டாசியம்
5.கார்போஹைட்ரேட்
6.நார்ச்சத்து
7.சர்க்கரை
8.புரதம்
9.கால்சியம்
10.இரும்புச் சத்து
11.வைட்டமின் பி6
12.மெக்னீசியம்
சருமத்துக்கு அரிசி பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்
தோல் பிரகாசத்தை அதிகரிக்கும்:
- அரிசியில் உள்ள வைட்டமின் B மற்றும் E தோலின் சுருக்கங்களை குறைத்து, தோலை மென்மையாக்கி, பிரகாசத்தை அதிகரிக்க உதவுகிறது.
- அரிசி பவுடரை முகத்திற்கு மாக்ஸாக பயன்படுத்துவதன் மூலம், சருமத்தின் இயல்பான ஒளிர்ச்சியைப் பெற்றுக்கொள்ளலாம்.
சருமத்தை ஈரமாக வைத்திருக்கும்:
- அரிசி மாய்ஸ்சரைசர் போன்று செயல்பட்டு, சருமத்தை நன்கு ஈரமாக வைத்திருக்க உதவுகிறது. தினசரி அரிசி பவுடர் அல்லது அரிசி நீரை முகத்தில் பயன்படுத்துவதன் மூலம், சருமத்தில் உள்ள ஈரப்பதம் நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.
வயதான அறிகுறிகளை குறைக்க :
- அரிசி மாவில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் சருமத்தை மென்மையாக்கவும், முன்கூட்டிய வயது முதிர்வை தவிர்க்கவும், அதன் அறிகுறிகளைக் குறைக்கவும், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், ஹைப்பர் பிக்மென்டேஷனை குறைக்கவும் உதவும்.
தலைமுடிக்கு அரிசியின் நன்மைகள்
முடி வளர்ச்சியை மேம்படுத்தும்: அரிசி நீர், இனோசிடால் (Inositol) எனும் கார்போஹைட்ரேட்டைக் கொண்டிருப்பதால், முடியின் வேர்களை வலுப்படுத்தி, கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
முடி முறிவைத் தடுக்கும்: அரிசி நீர் கூந்தலின் நார்களை (Hair Cuticles) மிருதுவாகச் செய்து, கூந்தல் முறிவையும், முடி உதிர்தலையும் தடுக்கிறது.
தலைமுடியை மென்மையாக்கும்: அரிசி நீரை தலைக்கு பயன்படுத்துவதன் மூலம் முடி கூந்தலின் மிருதுவும், ஒட்டுமொத்த அழகும் அதிகரிக்கின்றன.
சருமத்துக்கு அரிசி தயாரிப்புகளை எப்படி உபயோகிக்கலாம்?
ரைஸ் வாட்டர் டோனர் : ரைஸ் வாட்டர் சருமத்துக்கு சிறந்த இயற்கை டோனராக செயல்படுகிறது. முகத்தை நன்றாக கழுவிய பின், ரைஸ் வாட்டரில் பஞ்சை நனைத்து முகம் மற்றும் கழுத்தில் தடவி அப்படியே காயவிட்டால் போதும். இது உங்கள் சருமத்தின் pH- ஐ சமப்படுத்தவும், அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கவும் செய்யும்.
ரைஸ் வாட்டர் மாஸ்க் : மாஸ்க் ஷீட்டை ரைஸ் வாட்டரில் நன்றாக ஊற வைத்து, அதனை முகத்தில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை அப்படியே வைக்கவும். இதன் மூலம் சருமத்தை நீரேற்றமாக வைத்துக் கொள்ளவும், பளபளப்பாகவும் வைத்துக் கொள்ளலாம்.
அரிசி மாவு, வெள்ளரிக்காய் பேஸ்பேக் :
இந்த பேஸ்பேக் சருமத்தை சுத்தமாகவும், முகப்பருக்கள் இல்லாமல் வைத்திருக்கவும் உதவும்.
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
வெள்ளரிச் சாறு - 1 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - சில துளிகள்
செய்முறை :
மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாகக் கலந்து பேஸ்ட் போல் ஆக்கிக் கொள்ளவும். அதனை அப்படியே முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை காய விடவும். நன்றாக காய்ந்த பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும்.
அரிசி மாவு, தயிர் பேஸ்பேக் :
சருமத்தை சுத்தப்படுத்தி இறந்த செல்களை அகற்ற இந்த பேஸ்பேக் உதவும்.
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
தயிர் - 2 டீஸ்பூன்
செய்முறை :
அரிசி மாவு மற்றும் தயிரை ஒன்றாகக் கலந்து பேஸ்ட் செய்யவும். அதனை முகத்தில் தடவி காயவிட்டு 20 நிமிடங்களுக்குப் பின் குளிர்ந்த நீரில் கழுவவும்.
முட்டை, அரிசி மாவு பேஸ்பேக் :
முன்கூட்டியே வயது முதிர்வான தோற்றம் மற்றும் வயதான அறிகுறிகளைக் குறைக்கவும், முகப்பருக்களை தவிர்க்கவும், பளபளப்பான சருமத்தைப் பெறவும் இந்த பேஸ்பேக் உதவும்.
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
முட்டையின் வெள்ளைக்கரு - ஒன்று
கிளிசரின் - 2 அல்லது 3 சொட்டுகள்
செய்முறை :
அனைத்து பொருட்களையும் ஒன்றாகக் கலந்து கெட்டியான பேஸ்ட் தயாரிக்கவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே விட்டு, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். சிறப்பான முடிவுகளை பெற நீங்கள் இருந்த பேஸ்பேக்கை வாரத்திற்கு ஒருமுறை முயற்சி செய்யவும்.
அரிசி மாவு, கற்றாழை பேஸ்பேக் :
இந்த பேஸ்பேக் எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு அடிக்கடி முகத்தில் உண்டாகும் முகப்பருவைக் குறைக்கவும், தடுக்கவும் உதவுகிறது. கற்றாழையில் உள்ள குளிர்ச்சி மற்றும் குணப்படுத்தும் பண்புகள், சருமம் இழந்த பளபளப்பை மீண்டும் பெற உதவும்.
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - ௧ டீஸ்பூன்
கற்றாழை ஜெல் - 1 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
ரோஸ் வாட்டர் - சில துளிகள்
செய்முறை :
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து பேஸ்ட் உருவாக்கவும். அதனை முகத்தில் மெதுவாக தடவி 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து, பின்னர் காய விடவும். நன்றாக காய்ந்த உடன் அதனை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த பேஸ்பேக்கை வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம்.
அரிசி மாவு, தேன் ஸ்கிரப் :
இந்த ஸ்கிரப் சருமத்தின் பொலிவு, பளபளப்பு மற்றும் பிரகாசத்துக்கு உதவுவதோடு, சருமத்தின் இறந்த செல்களை நீக்கவும் உதவும்.
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - 3 டீஸ்பூன்
தேன் - 2 ஸ்பூன்
செய்முறை :
அரிசி மாவு மற்றும் தேனை ஒன்றாகக் கலந்து கொள்ளவும். அந்தக் கலவையை கைகளால் எடுத்து கன்னம், நெற்றி, மூக்கு மற்றும் கழுத்துப் பகுதியில் ஸ்கிரப் செய்யலாம். இந்த ஸ்கிரப்பால் சருமத்தின் அழுக்குகள் நீங்கும்.
தலைமுடிக்கு அரிசி தயாரிப்புகளை எப்படி உபயோகிக்கலாம் ?
ரைஸ் வாட்டர் டோனர் : ஷாம்பு செய்த பின் அரிசி கழுவிய தண்ணீரைக் கொண்டு தலைமுடியை அலசலாம். இல்லையெனில் ரைஸ் வாட்டரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வைத்து, தலைக்கு குளித்தவுடன் தலைமுடியில், அதனை ஸ்ப்ரே செய்து கொள்ளலாம்.
ரைஸ் வாட்டரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலை முடியை வலுப்படுத்தவும், முடியின் நுனியில் உண்டாகும் பிளவுகளை குறைக்கவும், பளபளப்பான தலைமுடிக்கும், உச்சந்தலை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
ஆளி விதை, அரிசி மாவு மற்றும் தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க் :
தேவையான பொருட்கள் :
ஆளி விதை - 2 டீஸ்பூன்
அரிசி மாவு - 3 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - முடியின் நீளத்துக்கு ஏற்ப
செய்முறை :
ஆளி விதையை ஊறவைத்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன், அரிசி மாவு, தேங்காய் எண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் கலந்து, அந்தக் கலவையை 5-ல் இருந்து 7 நிமிடங்கள் வரை அடுப்பில் கொதிக்க வைக்கவும். பேஸ்ட் போல் கலவை வந்தவுடன் அடுப்பை அணைத்து அதனை வடிகட்டிக் கொள்ளவும்.
வடிகட்டிய பேஸ்ட்டை தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவி சுமார் 30 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு, பின்னர் வெதுவெதுப்பான நீர் மற்றும் ஷாம்பூ கொண்டு அலசவும். வாரத்துக்கு ஒருமுறை இந்த ஹேர்மாஸ்க்கை பயன்படுத்தலாம்.
அரிசி மாவு, கற்றாழை மற்றும் நெய் ஹேர்மாஸ்க் :
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - 3 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
கற்றாழை ஜெல் - 2 டீஸ்பூன்
நெய் - சிறிதளவு
செய்முறை :
மேலே உள்ள பொருட்கள் அனைத்தையும் நன்கு, தலைமுடியின் அடியில் இருந்து நுனி வரை நன்றாக தடவவும். அதனை அப்படியே ஒரு மணி நேரம் வரை விட்டுவிட்டு, பின் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு தலைமுடியை அலசினால் போதும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu