முதுமையில் மூளை சிறப்பாக இயங்க மூளை நரம்பியல் நிபுணர் கூறும் யோசனைகள்
எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம். நமது உடலில் உள்ள முக்கிய பகுதி தலை என்றால் அந்த தலை உட்பட உடலின் அனைத்து பாகங்களையும் கண்ட்ரோல் செய்வது மூளை. மூளை சரியாக செயல்பட்டால் தான் நமது உடலின் இயக்கம் மற்றும் அனைத்து உறுப்புகளின் இயக்கமும் சிறப்பாக இருக்கும். ஆதலால் மூளையை பாதுகாக்க வேண்டியது மனிதனாக பிறந்த நமது ஒவ்வொருவருடைய கடமை ஆகும்.
வயது ஆக ஆக நாம் முதுமை அடைகிறோம். இளமையில் துள்ளாட்டம் போட்ட நாம் முதுமையையும் அனுபவித்து தான் ஆக வேண்டும். முதுமையில் நமது நடையில் தளர்ச்சி, முகத்தில் சுருக்கம், முடி நரைத்து போகுதல் அல்லது கொட்டி விடுதல், பார்வையில் குறைபாடு, பற்கள் விழுதல் போன்றவை வெளிப்படையாக நமக்கு தெரியும். ஆனால் நமது உடலின் அனைத்து பாகங்களையும் இயக்க கூடிய கண்ட்ரோல் போர்டு போல் உள்ள மூளையும் முதுமை காலத்தில் அதன் செயல் திறனை இழக்க தொடங்கும் அதன் காரணமாக தான் நமக்கு ஞாபக மறதி ஏற்படுகிறது.
ஞாபக மறதியோடு மூளையின் செயல்பாட்டு திறன் நின்று விடுவது இல்லை. மூளையின் செல்கள் இறக்க தொடங்கினால் என்ன நடக்கும் தெரியுமா? பக்கவாதம் கூட ஏற்பட்டு விடும்.
எனவே முதுமை காலத்தில் மூளையின் செல்களை இறக்க விடாமல் பாதுகாப்பது எப்படி என்பது பற்றி திருச்சி ஏபிசி மருத்துவமனையின் மூளை நரம்பியல் துறை நிபுணரும், திருச்சி கிஆபெ விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரியின் முன்னாள் துணை முதல்வருமான டாக்டர் எம்ஏ அலீம் என்ன கூறுகிறார் என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போமா?
டாக்டர் அலீம் பேட்டி இதோ...
மூளையை எவ்வாறு சிறப்பாக செயல்பட வைப்பது? மூளையின் செல்கள் இறந்து விட்டால் அவற்றை திரும்ப வளர வைப்பது மிகவும் கடினம். எனவே சரியான நேரத்தில் மூளையின் செல்கள் என்ன நிலையில் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து அவற்றுக்கு உரிய சிகிச்சை பெற வேண்டும். மூளையை வளர்ப்பதற்கு அதனை பாதுகாக்கவேண்டும்.
அதாவது மூளை நல்ல முறையில் செயல்பட வேண்டுமானால் தினமும் நிறைய நூல்கள் படிக்க வேண்டும். நூல்கள் படிக்க முடியவில்லை என்றால் என்றால் டிஜிட்டல் முறையில் கூட படிக்கலாம். மூளையின் கனெக்டிவிட்டியானது சமூக சேவையுடன் இருக்கவேண்டும். மரம் வளர்ப்பது நல்லது.
உணவே மருந்து உணவே நஞ்சு என்கிற நிலை தான் தற்போது உள்ளது. நாம் எப்போதும் சாப்பிடும் உணவில் நஞ்சு நிறைந்து இருக்கிறது. காய்கறிகள் பழங்கள் ஆகியவற்றை அதிக அளவில் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். உணவு பழக்க வழக்கங்கள் நோய்களை கட்டுப்படுத்தும். என் வி எனப்படும் இறைச்சி வகைகளை விட காய்கறிகளில் சத்துக்கள் அதிகம் உள்ளது.
இலை தழைகளை சாப்பிடுகிறது ஆடு. ஆனால் அந்த ஆட்டுக்கறியில் கொழுப்பு அதிகம் உள்ளது. ஆதலால் அவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது. சர்க்கரை மற்றும் கொழுப்சத்து குறைந்த அதே நேரத்தில் நார்ச்சத்து புரோட்டின் சத்து நிறைய எடுத்துக் கொண்டால் மூளையை நல்ல முறையில் பராமரிக்க முடியும் .
அதே போல சிறு தானியங்களை நமது உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை வயதானால் ஏற்படக்கூடிய ஞாபகம் மறதியை குறைக்க உதவும். இன்னொரு முக்கியமான விஷயம் மூளையை பாதுகாக்க உடற்பயிற்சி தினமும் செய்ய வேண்டும். வாரத்திற்கு 150 நிமிடம் வாக்கிங் செல்ல வேண்டும். வாக்கிங் சைக்கிளிங், நீச்சல் பயிற்சி மிகவநல்லது. நாம் வாழும் இடத்தில் பசுமையான சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும் மூளை எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். மன அழுத்தம் என்பது ஒரு சைலன்ட் கில்லர் என மருத்துவ துறையில் கூறுவது உண்டு. ஆதலால் மன அழுத்தம் ஏற்படாதவாறு இசை கேட்பது, இறை நூல்களை படிப்பது ,யோகா செய்வது மன அழுத்தத்தை குறைக்கும். இதன் மூலம் வயதானாலும் நம் மூளையின் செயல்பாடு சுறுசுறுப்பாக இருக்கும்.
இன்னொரு முக்கியமான விஷயம் உறக்கம். உறக்கம் என்பது மன அழுத்தத்தை குறைக்க கூடியது. தூங்கப் போகும் போதுடென்ஷன் ஆக இருக்க கூடாது. தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களைசெல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை அணைத்து வைப்பது மிகவும் நல்லது. புகைப்பிடிப்பது மது பழக்கங்களில் இருந்து விடுபட வேண்டும். தண்ணீர் நிறையகுடிக்க வேண்டும். வருடம் ஒரு முறை மருத்துவரிடம் சென்று முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நோய்களின் அறிகுறிகளை அறிந்து கொள்வதற்கு இது உதவும்
மூளைக்கு செல்லக்கூடிய நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டால் பக்கவாதம் ஏற்படும். எனவே அது போன்ற நிலை வராமல் இருக்கஉரிய பயிற்சிகள் எடுத்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும்.
இவ்வாறு டாக்டர் அலீம் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu