தீபாவளிக்காக சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம் இன்று தொடக்கம்
சிறப்பு பஸ்கள். கோப்பு படம்.
தீபாவளி பண்டிகைக்காக சென்னை இருந்து தமிழகத்தின் முக்கிய ஊர்களுக்கு பொதுமக்கள் செல்ல வருடம் தோறும் சிறப்பு பஸ்கள் அரசு சார்பில் இயக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு முந்தைய நாட்களான சனி, ஞாயிறு (22, 23-ந்தேதி) விடுமுறை நாட்களாகும். இந்த வருடம் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை வருவதால் சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களின் எண்ணிக்கை உயர வாய்ப்பு இருக்கிறது.
சிறப்பு பஸ்கள்
தீபாவளி பண்டிகைக்கு இன்று முதல் வருகிற 23-ந்தேதி வரையிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வழக்கமாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு தினமும் இயக்கப்படும் 2,100 பஸ்களுடன், 4,218 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கும் சேர்த்து மொத்தம் 10,518 பஸ்களும்,மேலும் வெளி ஊர்களில் இருந்து இந்த 3 நாட்களுக்கு 6,370 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதால் இந்த தீபாவளிக்கு மொத்தமாக 16,888 பஸ்கள் தீபாவளிக்காக இயக்கப்பட உள்ளன.
அடுத்ததாக தீபாவளி முடிந்த பிறகு வெளி ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பி வர வருகிற 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதன்படி தினமும் இயக்கக் கூடிய 2,100 பஸ்களுடன், 3,062 சிறப்பு பஸ்களும், மற்ற முக்கிய முக்கிய ஊர்களுக்கு இயக்கப்படும் 3,790 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 13,152 பஸ்கள் தீபாவளிக்கு இயக்கப்படும்.
சென்னையில் கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், பூவிருந்தவல்லி பைபாஸ் பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ் நிலையங்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்து பயணிகள் வந்து செல்வதற்காக 24 மணி நேரமும் மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஆம்னி பஸ்கள்
ஆம்னி பஸ்களும் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. 21, 22, 23 ஆகிய நாட்களில் மட்டும் 2 ஆயிரம் ஆம்னி பஸ்களில் பயணிகள் செல்ல முன்பதிவு முடிந்த விட்டன. இந்த ஆம்னிபஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகின்றதா? என்பதை கண்காணிக்க மண்டலம்தோறும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இந்தக் குழுக்கள் சாலைகளில் ஆங்காங்கே ஆம்னி பஸ்களை நிறுத்தி திடீர் சோதனை நடத்துவார்கள். அதிக கட்டணம் உள்ளிட்ட விதிமீறல்கள் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.
சென்னையில் இருந்து வெளி ஊர்களுக்கு சொந்த வாகனங்களில் செல்பவர்கள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருப்போரூர் - செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu