எது உண்மையான கல்வி ? அதில் வாழ்க்கை வெளிச்சமாகும்..!
உண்மையான கல்வி.(மாதிரி படம்)
வாழ்க்கையின் மதிப்பு எவ்வாறு கூடமுடியும் என்பதை இந்த சிறிய கதை மூலம் அழகாக விளக்கப்பட்டுள்ளது. நீங்களும் பயன் அடையுங்கள்.
கரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, திரும்பியபோது தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்த அந்த கணித ஆசிரியர், "இது எவ்வளவு?" என்று அந்த மாணவனிடம் கேட்டார்.
அவன் நம்பிக்கையுடன் இருந்தாலும், இந்த எளிமையான கேள்வியைக்கேட்டு என்னை அவமானப்படுத்த ஆசிரியர் நினைக்கிறாரோ என்று சற்று அவமானமாக உணர்ந்து, "ஓராயிரம்," என்று அவன் பதிலளித்தான்.
ஆசிரியர் புன்னகைத்தவாறே கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் சேர்த்து '10000' என எழுதிவிட்டு, இது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார்.
"பத்தாயிரம்," என்று உடனடியாக அவனிடம் இருந்து பதில் வந்தது.
இப்போது இன்னொரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம் சேர்த்து எழுதிவிட்டு '010000' இது எவ்வளவு என்று கேட்டார்.
"அதே பத்தாயிரம்தான் " என்று மாணவன் பதில் கூறினான்.
ஆசிரியர் அவனைப் பார்த்து கண் சிமிட்டிப் புன்னகைத்தவாறே, "ஒரு முக்கியத்துவமற்ற எண் ஒரு முக்கியம் வாய்ந்த எண்ணைப் பின்தொடர்ந்து செல்லும்போது, அதன் மதிப்பு கூடுகிறது.
ஆனால், அதே எண் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு முன்னால் செல்ல முயற்சிக்கும்போது, அதற்கு மதிப்பேதும் இல்லை. அதைப் போன்றதுதான் ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவும். ஒரு மாணவன் தன் ஆசிரியரைப் பின்தொடர்ந்து சென்றால், அவனது மதிப்பு கூடுகிறது.
அதுவே தலைகீழாக அமைந்தால்... பதில் உனக்கே தெரிந்திருக்கும் என்று முடித்துக்கொண்டார். அந்த மாணவன் தலைகுனிந்து நின்றான். இனிமேல் அவனிடம் மாறுதல் இருக்கும் என்பதால் மீண்டும் ஆசிரியர் அவனது சரியான பதிலுக்காக பாராட்டிவிட்டு அமரச் சொன்னார்.
எது வாழ்க்கையின் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை மாணவர்கள் உணர்தல் அவசியம். பெரியோரை மரியாதை செய்து பணிவுடன் நடப்பது ஒரு மாணவனின் வளர்ச்சியைக் காட்டுகிறது. மாணவனிடம் சகிப்புத்தன்மை இருந்துவிட்டால், தலைமைத்துவம் அந்த மாணவனிடம் இருப்பது உறுதியாகிறது. அவன் சிறந்த மனிதனாக உருவாவான் என்பதில் ஐயமில்லை. அதனால், கற்றவரை பின் தொடருங்கள்; வாழ்க்கை வெளிச்சமாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu