வாகன சோதனையில் ரூ.8கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்
முத்துப்பேட்டை அருகே போலீசாரின் வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட சுமார் ரூ. 8 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியில் எஸ்.பி., கயல்விழி நடத்திய திடீர் வாகன சோதனையின் போது காரைக்காலில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக பட்டுக்கோட்டை நோக்கி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் வந்த சேலத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரிடம் விசாரணை நடத்திய போது அவர்களிடம் 18 கிலோ 331 கிராம் தங்க நகை கொண்டு சென்றது தெரிய வந்தது. அந்த நகைகளை நகை கடைகளுக்கு கொடுப்பதற்காக எடுத்துச் சென்றதாக கூறினார். அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவைகள் சம்பந்தப்பட்ட தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் பல்வேறு சோதனைசாவடிகளில் நடைபெற்ற வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட சுமார் ரூ.20,127- மதிப்பிலான 9 தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், 600 டிபன் பாக்ஸ்கள், ரொக்கம் ரூ. 67,77,498 ஆகியவை கைப்பற்றப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ. 9,13,89,490 - ஆகும். மற்றும் திருச்சிக்கு சென்ற ஏடிஎம் பணம் நிரப்பும் வாகனத்தை மறித்து சோதித்த போது உரிய ஆவணங்கள் இன்றி 17 லட்ச ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் திருத்துறைப்பூண்டி தாசில்தார் ஜெகதீசனுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu