ஒரு நாட்டுக்கு கஜானாவை விட உயர்ந்தது எது? அசந்து போவீங்க..!

ஒரு நாட்டுக்கு கஜானாவை விட உயர்ந்தது எது? அசந்து போவீங்க..!
X

சரஸ்வதி மஹால் நூலகம் (கோப்பு படம்)

சரஸ்வதி மஹாலைப் பற்றி அனைவருக்கும் தெரியும். சோழ நாட்டின் அறிவுக் களஞ்சியம். இதைப் பற்றி சுவாரஸ்யமான ஒரு விஷயம் நினைவு வருகிறது.

பழைய காலத்தில் வெளிதேசத்திலிருந்து படையெடுக்கிறவர்கள், ஒரு தேசத்திற்கு விளைவிக்கிற மிகப் பெரிய கொடுமை, அந்த தேசத்தின் லைப்ரரியைக் கொளுத்தி விடுவது தான் என்று வைத்துக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், ஒரு தேசத்தின் பொருளாதாரத்துக்கு கஜானா எப்படியோ, அப்படி அதன் அறிவுக்குக் கஜானாவாக இருந்தது இந்த லைப்ரரிதான். கலாசார கஜானா என்று சொல்லலாம். இப்போது போல் அப்போது, பிரன்டிங் பிரஸ் இல்லாததால், பல பிரதிகள் கிடையாது. சில நூல்களில் ஒரே பிரதிதான் இருக்கும்.

இப்படிப்பட்ட சுவடிகள் கொண்ட லைப்ரரியைக் கொளுத்தி விட்டால், அது அந்த தேசத்தின் கஜானாவைக் கொள்ளையடிப்பதற்கு மேலே, அந்த தேசத்தின் பெண்களை, மானபங்கப்படுத்துவதற்கு மேலே, என்று இதர தேசத்தார் நினைத்தார்கள். எதிரி தேசத்து அறிவுச் செல்வங்களான புத்தகங்களைக் கொளுத்துவது, அவர்களுடைய கோயில்களை இடிப்பது, அந்த தேசத்து பெண்களை மானபங்கப்படுத்துவது, முதலானவற்றுக்கு, நம்முடைய பாரத தேசத்து இராஜநீதி சாஸ்திரங்களில், இடமே கிடையாது என்பதைப் பெருமையோடு சொல்லிக் கொள்ளவேண்டும்.

இதர தேசத்தவர்களுக்கோ, பண்பாட்டில் சிறந்த இன்னொரு ராஜ்ஜியத்தைப் பிடிக்கிற போது, அங்கேயுள்ள லைப்ரரியை கொளுத்துவது, பெரிய சொக்கப்பானை(பட்டாசுகளின் தொகுப்பு) வெடிப்பது போன்ற உற்சாக விளையாட்டு.

‘அறிவுச் செல்வம் எல்லாருக்கும் பொது, எதிரியுடைய ஊரைச் சேர்ந்ததானாலும், அதை நாமும் எடுத்துக் கொண்டு, பயனடையலாம்!’ என்ற விவேகமில்லாமல், தங்களைவிட அறிவாளிகளாக உள்ள விரோதிகளின் புத்தகங்களை, சாம்பலாக எரியவிட்டு, அவர்களை வயிறெரியச் செய்ய வேண்டும் என்று நினைத்து, இப்படிப்பட்ட பெரிய அக்கிரமத்தைச் செய்தார்கள்.

இப்படித்தான் ஈஜிப்டில் [எகிப்தில்] அலெக்ஸான்ட்ரியா என்ற இடத்தில், அலெக்ஸான்டர் காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட, அநேகத் துறைகளில் உயர்ந்த புத்தகங்களைக் கொண்ட லைப்ரரியையும்;துருக்கியில் இஸ்டான்புல் என்று இப்போது சொல்லப்படுகிற கான்ஸ்டான்டிநோபிளில், கிரேக்கர்கள், ரோமானியர்கள், ஆகியவர்கள் பல காலமாகப் பேணி வளர்த்த லைப்ரரியையும், பதினைந்து – பதினாறாம் நூற்றாண்டில், துருக்கியர்கள் படை எடுத்தபோது, இருந்த இடம் தெரியாமல் கொளுத்தி விட்டார்கள்.

இந்தியாவில் நாளந்தா பல்கலைக்கழகம், காஞ்சி பல்கலைக்கழகம், பனாரஸ் பல்கலைக்கழகம், போன்று சுமார் 450 பல்கலைக்கழகங்கள் எரிய விடப்பட்டன.

பழைய சங்க நூல்களை, சமுத்திரம்(கடல் கோள்) கொண்டு போய்விட்டது என்கிற மாதிரி, இயற்கை அழிவாக இல்லாமல், சத்துருக்களின் பண்பாட்டுக் குறைவால், அந்த தேசங்களில், பழைய அறிவு நூல்களில் பல, வீணாகி விட்டன.

இங்கே நம் தென்னிந்திய தேசத்திலும், கர்நாடக நவாப் முதலியவர்கள் கை ஓங்கித் தமிழ்நாடு முழுவதிலும் முஸ்லீம் படைகள் பரவின போது, தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலுக்கு ஆபத்து வந்து விட்டது. அதைக் கொளுத்தி விட்டால், தஞ்சாவூர் பெரிய கோவிலை இடிப்பதற்கு சமானம் என்று, ரொம்ப ஆவலாக எதிரிகள் வந்தார்கள்.


அப்போது டபீர் பந்த் என்ற மஹாராஷ்டிர பிராமணர், தஞ்சாவூர் ராஜாவுக்கு (சிவாஜி வம்சத்தவருக்கு), மந்திரியாக இருந்தார். அவருக்கு சமயோசித்தமாக ஒரு யுக்தி தோன்றிற்று. லைப்ரரியைக் கொளுத்த வேண்டும்; என்று வந்தவர்களிடம், “இதிலே எங்கள் இந்து புத்தகங்கள் மட்டும் இல்லை. குரான் பிரதிகளும் வைத்திருக்கிறோம்” என்றார்.

உடனே, வந்தவர்கள் “குரான் இருக்கிறதா? அப்படியானால் கொளுத்த மாட்டோம்!” என்று நமஸ்காரம் பண்ணிவிட்டுப் போய் விட்டார்கள். அப்புறம் இங்கிலீஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஜெர்மனியர்கள் எல்லோரும் வந்தார்கள். அவர்களுக்கு எதிலும் ஆராய்ச்சி புத்தி அதிகம். இன்னொரு தேசத்து விஷயமானாலும், கொளுத்துவது என்று இல்லாமல், அதனால் தாங்கள் பிரயோஜனம் அடைய முடியுமா? என்று பார்ப்பார்கள்.

ஜெர்மன் தேசத்தவர்களும், கலாசார ஆராய்ச்சி , மொழி ஆராய்ச்சிக்காக வந்து, நம் நாட்டுச் சுவடிகளை எல்லாம் தேடித் தேடிப் பார்த்தார்கள். இதனால், நமக்கே பல புது சாஸ்திரங்களை, இந்த அந்நிய தேசத்தவர்கள் தான் தேடிக் கண்டு பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.

அதற்காக நாம் நன்றி தெரிவிக்கவேண்டும். குறிப்பாக மெக்கென்ஸி என்பவர், ஸர்வேயர்-ஜெனரலாக இருந்தபோது, ஊர் ஊராகப் போய், கிடைக்கக்கூடிய சகல ஏட்டுச்சுவடிகளையும் கலெக்ட் பண்ணி, அப்போது இதற்காக அரசாங்க டிபார்ட்மென்ட் இல்லாவிட்டாலுங்கூட, அங்கங்கே படிக்கத் தெரிந்தவர்களைக் கொண்டு, படிக்கச் செய்து, எல்லாவற்றையும் ரிக்கார்டாக preserve பண்ணி வைத்ததைச் சொல்ல வேண்டும்!! மெக்கென்ஸியின் ஆள், ஆங்காங்கு உள்ள மடங்களுக்குக்கூட வந்து, விவரங்கள் சேகரித்துக் கொண்டு போயிருக்கிறார்கள்.

சரஸ்வதி மஹால் முதலிய இடங்களில் இருந்த, சயின்ஸ், குறிப்பாகத் தநுர்வேதம், சம்பந்தமான நம் பழைய சுவடிகளை, மேல் நாட்டுக்காரர்கள் எடுத்துக் கொண்டே போய் விட்டார்கள் என்று சொல்கிறார்கள். இப்படி எடுத்துக் கொண்டு போய்தான் ஹிட்லர் சில தினுசான குண்டுகள், ப்ளேன்கள் முதலியன செய்தார் என்கிறார்கள்.

இருந்தாலும் இன்னமும் போஜராஜாவின் ‘ஸமாராங்கண ஸூத்திரம்’ போன்ற, நம்மிடமே உள்ள சுவடிகளிலிருந்து, மந்திர பூர்வமான அஸ்திரங்கள் மட்டுமின்றி, விஞ்ஞான பூர்வமான ஆயுதங்களான, சஸ்திரங்களும் நம் தேசத்தில் நீண்ட காலத்துக்கு முன்பே, இருந்திருப்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. வராஹமித்திரரின் ப்ருஹத் ஸம்ஹிதை மாதிரியான ‘டைஜஸ்டுகள்’ நம் நாட்டின் அநேகத் துறை சாஸ்திரங்களையும், சயன்ஸ்களையும் சேர்த்துக் கொடுத்திருக்கின்றன.

சாஸ்திரங்கள், மற்ற வித்தைகள், நம்முடைய மருத்துவம், விஞ்ஞானம் எல்லவாற்றுக்கும், பழைய சுவடிகள் இருக்கின்றன. புராணங்களும் இவற்றில் இருக்கின்றன. இவைகளில் ஸ்தல புராணங்கள், மற்றவற்றை விடவும் ரொம்ப நாசப்பட்டிருக்கின்றன. எஞ்சியதை நாம் காப்பாற்ற வேண்டும். தேடித் தேடிப் புதுசாகக் கிடைப்பதைச் சேகரம் செய்ய வேண்டும்.

நமது நாட்டின் எல்லைகளை காப்பது; போலவும், நமது கலாச்சாரங்களை காப்பது; போலவும், முன்னோர்களின் அறிவு செல்வங்களைக் காப்பாற்றி, நம் அடுத்த சந்ததியினருக்குக் கொடுப்பதே, தற்போதைய தலையாய கடமையாகும். பித்ருதேவோ பவ என்று முன்னோர்களை வணங்குவதைக் காட்டிலும், அவைகளைப் படித்து உணர்வதே நம் முன்னோர்களுக்கு, நாம் செய்யும் உயர்ந்த கடமையாகும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!