மருத்துவ மாணவர்களுக்கு தமிழில் பாடபுத்தகங்கள்-திண்டுக்கல் லியோனி தகவல்

மருத்துவ மாணவர்களுக்கு தமிழில் பாடபுத்தகங்கள்-திண்டுக்கல் லியோனி தகவல்
X

திண்டுக்கல் லியோனி 

விரைவில் மருத்துவம், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தமிழில் பாடபுத்தகங்கள் வழங்கப்படும் என திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி விரைவில் மருத்துவம், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தமிழில் பாட புத்தகங்கள் வழங்கப்படும் என திருவள்ளூரில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் இன்று தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வினியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை நேரில் சென்று பார்வையிட்டு அதன் விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது.,

தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாறில் உள்ள தமிழகம் முழுவதும் புத்தகம் சேமிப்பு மையத்திற்கு ஆய்வு மேற்கொண்டேன். அதைத்தொடர்ந்து திருவள்ளூரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கே புத்தகங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 860 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 400 பள்ளிகளுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 460 பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறக்கப்படும் நாளை தமிழக முதலமைச்சர்,கல்வி அமைச்சர் ஆகியோர் முடிவு செய்த பிறகு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு கல்விப் பணி சிறப்பாக செயல்படும். தமிழக முதலமைச்சர் தேர்தலில் வாக்குறுதிகளாக கொடுத்த அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செய்து வருகிறார்.

முதலமைச்சரின் கனவு திட்டங்கள் அனைத்தையும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்.குறிப்பாக அரசு மருத்துவக்கல்லூரி கட்டும் பணி திருவள்ளூரில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.விரைவில் திருவள்ளூரில் அரசு மருத்துவக்கல்லூரி செயல்படும். இது அரசின் மிகப்பெரிய சாதனையாகும். தமிழக முதலமைச்சர்களின் தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு ஒரு பணியை தந்துள்ளார்.

பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு புத்தகம் அச்சடிக்கும் பணியை வழங்கி உள்ளார்.இது எங்களுக்கு மிகப் பெரிய பொறுப்பாக ஏற்றுக்கொண்டு கிராமப்புற மாணவர்கள் ஆங்கில வழியில் மருத்துவம், பொறியியல் படிக்க மிகவும் சிரமப்படுகிறார்கள்.

தாய்மொழியில் பொறியியல் கல்வியை மருத்துவக் கல்வியை புத்தகங்களை அச்சிட்டு வழங்கி அண்ணா கலைஞர் கண்ட கனவை நனவாக்கி தாய்மொழியில் உயர்கல்வி படித்தல் என்ற முதல்வரின் உயரிய லட்சியத்தை பாடநூல் கழகம் விரைவில் நிறைவேற்றும். தமிழ் வழியில் புத்தகங்கள் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளுக்கு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். அவருடன் திருவள்ளூர் தொகுதி எம் எல் ஏ வி.ஜி. ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!