எதிர்கால உலகத்தை தீர்மானிக்கும் ஆசிரியர்கள்..! (தன்னம்பிக்கை கட்டுரை)

எதிர்கால உலகத்தை தீர்மானிக்கும் ஆசிரியர்கள்..! (தன்னம்பிக்கை கட்டுரை)
X

தன்னம்பிக்கை (மாதிரி படம்)

ஒரு எதிர்கால சமூகத்தை, எதிர்கால உலகத்தை கட்டமைப்பதில் ஆசிரியர்களே முதன்மையான காரணிகளாக விளங்குகின்றனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தனது ஈரடிக் கூற்றில் கல்வியின் முக்கியத்துவத்தை வள்ளுவன் அழகாக வலியுறுத்தியுள்ளார். கல்வி கற்பதற்கு பயன்படாத கண்கள் இருந்தாலும் அது புண்ணுக்கு சமமானதே என்கிறார் வள்ளுவர்.

எது கல்வி?

கல்லூரிகளில் படித்து வாங்கும் பட்டங்கள் மட்டுமே கல்வி ஆகிவிடாது. அறிவு, சிந்தனை,நன்நடத்தை,சுய ஒழுக்கம், சமூகத்தின் மீதான அக்கறை இவையெல்லாம் ஒருங்கே அமையப்பெற்றவரே உண்மையான கல்வி கற்றவராவார். அவர் படிக்கும் கல்வி வெறும் ஏட்டுக்கல்வியாக மட்டும் இல்லாமல் அறிவுத்திறனை சமூக மாற்றத்திற்கு பயன்படும்படி செய்வதே ஆகும்.

கல்வி கற்க விரும்பாத ஒருவருக்கு எவரும் கல்வி கற்பித்துவிட முடியாது. அதேபோல கற்க வேண்டும் என்கிற வேட்கை உள்ளவரை கல்வி கற்பதிலிருந்து யாராலும் தடுத்து நிறுத்திவிடவும் முடியாது. தனியார் பள்ளிகளில், அதுவும் ஆங்கில வழிக்கல்வியில் படித்தால் மட்டுமே அறிவுள்ள மாணவர்கள் என்று நினைக்கும் இந்த சமூகத்தில், அரசுப்பள்ளிகளில் ஆர்வத்துடன் படித்து மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி போன்ற உயர் வகுப்புகளில் படிக்கும் எண்ணற்ற மாணவ, மாணவிகளை நாம் பார்க்கிறோம். அப்படி படித்து வெற்றிபெறுபவர்களே தன்னம்பிக்கைக்கு முன்னுதாரணமானவர்கள். அவர்களே எதிர்கால நிஜ ஹீரோக்கள். இந்த சமூகத்தை கட்டமைக்கும் தூண்கள்.

வாழ்க்கைக்கு வழிகாட்டாத கல்வி :

2014ம் ஆண்டில் டில்லி மிருகக்காட்சி சாலையில் விஜய் என்கிற 7 வயது புலியிடம் ஒரு இளைஞன் சிக்கிக்கொண்டான். அப்போது சுற்றி இருந்தவர்கள் அதை படம் பிடித்தனர். ஒருவர் கூட மிருக காட்சி சாலை காப்பாளர்களிடம் தகவல் தர முயற்சி செய்யவில்லை. சுமார் 10 நிமிடங்கள் அந்த புலி இளைஞன் முன்னால் கர்ஜித்து நின்றது. அந்த இளைஞன் பயத்தில் செய்வது அறியாது புலியை கையெடுத்துக் கும்பிட்ட வேதனையான சம்பவத்தை காண முடிந்தது. சுற்றி நின்றவர்கள் கூச்சல் இடாமல் இருந்திருந்தால் கூட புலி நகர்ந்து சென்றிருக்கும். ஆனால், நின்றவர்கள் காட்டுக்கூச்சல் இட்டதால் ஒரே பாய்ச்சலில் இளைஞனை கவ்விச்சென்று கொன்றது. இதில் குறிப்பிடவேண்டிய செய்தி, நாம் கற்ற கல்வியால் ஒரு புலியிடம் இருந்து கூட ஒரு உயிரை காப்பாற்ற கற்றுத்தரப்படவில்லை என்பதே. நன்றாக சிந்தித்துப்பாருங்கள். விலங்குகளுக்கு நெருப்பு என்றால் பயம். ஒருவரது சட்டையை கழட்டி தீயிட்டு புலிக்கு முன்னால் வீசி இருந்தால், புலி இளைஞனிடம் இருந்து விலகி ஓடியிருக்கும். இளைஞனை காப்பாற்றியிருக்கலாம். இப்போது தெரிகிறதா எது வாழ்க்கை கல்வி என்பது?

அறிவுத்திறனுக்கு சுய கற்றல் :

பல்கலைக்கழகத்தில் நல்ல மதிப்பெண் பெற்றுவிட்டோம். எனவே, நாம் படித்த துறையில் வல்லுநர் ஆகிவிட்டோம் என்ற எண்ணம் வந்துவிடக்கூடாது. நாம் படித்தது கடுகளவே. கணிதம், அறிவியல், பொறியியல் எனப் பல துறைகளில் நிபுணர்கள் உள்ளனர். ஆனால், எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. நமது கல்வி நிலையங்கள் இன்னும் உலகத் தரத்திற்கு உச்சம் எட்டவேண்டும். ஆனால், மாணவர்கள் தங்கள் அறிவில் உலகத் தரத்தை எட்டலாம். அதற்கு சுயமாக கற்பது ஒன்றே வழி. தேடுதல் இருப்பின் அறிவு விருட்சமாகும். சுயமாக கற்பதற்கு எல்லைகள் கிடையாது.

ஏகலைவர்கள் :

தங்களை தாங்களாவே மெருகேற்றி கல்வி கற்று உயர்ந்த அறிஞர்களை Autodidact என்று கூறுவது வழக்கம். அதாவது தங்களை தாங்களே வடிவமைத்துக்கொண்டவர்கள். நமது நாட்டின் தலைசிறந்த கணித மேதை சீனிவாச ராமனுஜனும், அமெரிக்க அறிவியல் அறிஞர் வால்டர் பிட்ஸ் போன்றோர் தாமாகக் கற்று வளர்ந்த ஏகலைவர்கள்.

பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்காத வால்டர் பிட்ஸ், அவரது 12 வயதில் 'கணித தத்துவம்' என்ற நூலை மூன்று நாட்கள் நூலகம் சென்று படித்து முடித்தார். அடுத்த நாளே அந்த கணித நூலாசிரியருக்குக் கடிதம் எழுதி, நூலின் குறைகளை எடுத்துக் கூறினார். அந்தச் சிறுவனின் கடிதத்தைப் படித்த பெர்ட்ரண்டு ரசல், அசந்து போனார். அந்த சிறுவனை இங்கிலாந்துக்கு வரவைத்து படிக்க வைத்தார். சுய கல்வியாலேயே உளவியல், நரம்பியல், அறிவியல், கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற பிட்ஸ், சாதனைகள் பல புரிந்த வல்லுனராக உருவெடுத்தார். அவரது சுய முயற்சியால் கிடைத்த கல்வியாலேயே அதை அவரால் சாதிக்கமுடிந்தது.

வாழ்க்கைக்கு தயார்படுத்தல் :

கல்வி என்பது வேலை பெறுவதற்கு அல்ல. அது இளைஞர்களை வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்துவது என்று கூறலாம். இளைஞர்களை திறன் மிக்கவர்களாகவும், சட்டத்தை மதிப்பவர்களாகவும், சுயகட்டுப்பாடு உள்ளவர்களாகவும், நேர்மறை சிந்தனை உடையவர்களாகவும், ஒழுக்கமானவர்களாகவும், சமூக சிந்தனை உடையவர்களாகவும் மாற்றுவதே கல்வியின் நோக்கம். இவற்றை வளர்க்கும் இடம் தான் கல்விச்சாலை எனப்படுகிறது. அது பள்ளி,கல்லூரி மற்றும் பல்கலைக்கழமாகவும் இருக்கலாம். கல்வியறிவை வளர்க்க உதவுபவர்கள்தான் ஆசிரியர்கள். அவர்கள்தான் எதிர்கால சமூகத்தை, எதிர்கால உலகத்தை தீர்மானிக்கும் வல்லமை படைத்தவர்களாக விளங்குகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!