Teachers day speech in tamil-ஆசிரியர் தினம், எதுக்கு கொண்டாடறோம்..?

Teachers day speech in tamil-ஆசிரியர் தினம், எதுக்கு கொண்டாடறோம்..?
X

டாக்டர்.ராதாகிருஷ்ணன் (கோப்பு படம்)

ஆசிரியர் பணி அறப்பணி. மாணவர்களை அவையில் முந்தியிருப்பச் செய்யும் உன்னத பணி.

Teachers day speech in tamil

ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதிக் காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

வாழ்க்கையில் ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பிப்பது மட்டுமல்லாமல், மாணவர்களுக்கு ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்களே சிறந்த ஆசிரியர்கள்.

அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், செப்டம்பர் 5ம் தேதி ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடி வருகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் மட்டுமே உருவாக்க முடியும்.

எதிர்கால உலகினை, எதிர்கால நாட்டினை, எதிர்கால சந்ததியை உருவாக்கும் சிறந்த படைப்பாளிகள் ஆசிரியர்கள். உயர்ந்த சிந்தனையோடு உன்னத மனிதர்களாகத் திகழும் ஆசிரியர்களைப் போற்றும் ஆசிரியர் தினம் குறித்து விரிவாகப் பார்ப்போம்.


ஆசிரியர் தின வரலாறு

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கல்வியில் மிகப்பெரிய சாதனை படைத்த அல்லது அது தொடர்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ நினைவு கூரும் வகையில் ஆசிரியர் தினம் சிறப்பான நாளாக வலியுறுத்தப்பட்டு அந்த நாளை ஆசிரியர்களை போற்றும் உன்னத நாளாக ஆசிரியர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

ஆசிரியர் பணி என்பது என்ன?

ஒரு ஆசிரியரின் பணி வெறும் கல்வியை போதிப்பது மட்டும் இல்லை. பாடத்தோடு ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு கற்பித்தல் ஆகும். மாணவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.

Teachers day speech in tamil

ஒருபிடி களிமண்

மாணவப்பருவம் என்பது ஒரு ஈரமான களிமண் போன்றதாகும். அந்த ஈரம் இருக்கும்போதே ஆசிரியர்களால் அவர்கள் எப்படி உருவாக்கப்படுகிறார்களோ அதுதான் அந்த மாணவர்கள். அறிவும், சிந்தனையும், ஒழுக்கமும், பண்பும் நிறைந்த ஒரு சிறந்த குடிமகனாக உருவாக்கப்பட்டால் அவர்களே நாட்டின் சிறந்தவர்கள். ஈரமான களிமண் காய்ந்துவிட்டால் அவர்களை செதுக்கமுடியாது.

மாணவப்பருவத்தே தேவையானவை அத்தனையும் அவர்களுக்குள் உள்ளேற்றம் செய்யப்படவேண்டும். அதை செவ்வனே செய்வது ஆசிரியர்கள்.

ஆசிரியர் தினம்

தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி இந்தியாவில் 1962ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என இந்தியா முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு மரியாதை தரும் வகையில் சிறப்புகள் செய்யப்பட்டு வருகிறது.


சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பற்றிய சிறப்பு

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள்,1888ம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைத் துறையில் பி. ஏ. பட்டமும், பின்னர் முதுகலைத் துறையில் எம். ஏ. பட்டமும் பெற்றவர்.

சென்னையில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்த அவர், இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர், போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார்.

Teachers day speech in tamil

அதுமட்டுமல்லாமல், புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, அதன் சிறப்பைப் பற்றி நமது நாட்டில் எடுத்துரைத்தார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே அனைத்து சித்தாந்தங்களையும் படித்து, ஒரு தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தினார்.

1918ம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், 1921ல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். அதன் பிறகு 1923ம் ஆண்டில், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் அற்புதப் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்த படைப்பாகப் போற்றப்பட்டது.

இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார்.

மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாசாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று வாதிட்டார். இந்தியத் தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிப்பெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்று எடுத்துரைத்தார். இவ்வாறு இந்தியத் தத்துவத்தை, ‘உலக வரைபடத்தில் வைத்த ஒரு மாபெரும் தத்துவஞானி’ என டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களைக் கூறலாம்.

1931ம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1946ல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.

சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது.

Teachers day speech in tamil


ஆசிரியர் தினக் கொண்டாட்டம்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5ம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ‘ஆசிரியர் தின’ நன்னாளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி எனப் பல்வேறு போட்டிகளை நடத்தி, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி வருகின்றனர்.

மேலும், சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வண்ணமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கி அரசு அவர்களைப் பெருமைப்படுத்தும். மாணவர்களும், அந்நாளில் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி, வாழ்த்துக்கள் தெரிவிப்பர்.

ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர் தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது.

Tags

Next Story