பள்ளி மாணவனை தேர்வு எழுதவைக்க படாத பாடு பட்ட காவலர்கள்
மாணவன் மோனிஷ் உடன் போலீஸ்காரர்கள் மணிகண்டன், மதன்.
பெற்றவர்களே தங்கள் குழந்தை தேர்வு எழுத செல்லவில்லை என்பது குறித்து கவலைப்படாமல் இருந்த நிலையில், பள்ளி தலைமை ஆசிரியரும், காவல்துறையினரும் அந்த மாணவன் தேர்வு எழுத எடுத்துக் கொண்ட முயற்சி பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் காவல் சரகம் கொந்தாமூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 தேர்வு நடைபெற்று வருகிறது. அரசு தேர்வு பணிக்கு சென்ற முதல்நிலை காவலர் மதன் என்பவரிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் சென்று, ‘‘பள்ளி தேர்வு 10:00 மணிக்கு துவங்க உள்ளது. தற்போது மணி 9:54 ஆகிறது. இந்நிலையில், பிளஸ் 1 இயற்பியல் படிக்கும் மோனிஷ் என்ற மாணவர் மட்டும் இதுவரை வரவில்லை. இன்னும் 6 நிமிடம் மட்டுமே இருக்கிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை’ என கூறினார்.
உடனே சமயோகிதமாக செயல்பட்ட காவலர் மதன், தேர்வு எழுத வேண்டிய மாணவர் அங்கிருந்து நான்கு கி.மீ., தொலைவில் உள்ள தென்கோடிபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் என்பதை தெரிந்து கொண்டார். அந்த ஊர் பக்கம் இன்றைய பகல் ரோந்து காவலர் யார் என்று காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளர், விஜயகுமாரிடம் கேட்டு விசாரித்து உடனே காவலர் மணிகண்டன் என்பவருக்கு போன் செய்து தகவல் கூறியுள்ளார்.
உடனே காவலர் மணிகண்டன், சிறிது தொலைவில் உள்ள மாணவரின் வீட்டிற்கு சென்று மாணவரை சந்தித்து ஏன் தேர்வு எழத செல்லவில்லை என கேட்டுள்ளார். அந்த மாணவர் தனது பெற்றோருடன் சண்டையிட்டு அழுதுகொண்டு தேர்வு எழுத செல்லாமல் இருந்துள்ளார்.
உடனே காவலர் மணிகண்டன் நேரமின்மையை கருத்தில் கொண்டு மாணவனை சமாதானப்படுத்தி, அறிவுரை கூறி தனது இருசக்கர வாகனத்தில் மிக வேகமாகவும் பாதுகாப்பாகவும் அழைத்து வந்து தலைமை ஆசிரியர் அனுமதியுடன் 10.10 க்கு தேர்வு அறைக்கு அனுப்பியுள்ளார்.
பின்னர் மாணவர் நல்ல முறையில் தேர்வு எழுதி முடிந்து விட்டார். பின்னர் தனது தவறை உணர்ந்த மாணவன், காவல் நிலையத்திற்கு சென்று ரோந்து காவலர் மணிகண்டன் இதற்கு காரணமாய் இருந்த முதல்நிலை காவலர் மதன் ஆகியோருக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து சென்றார்.
பெற்றவர்களுக்கு அக்கறை இல்லாதபோது, வாக்கு கற்ற வாத்தியாரும், போக்கு கற்ற போலீஸ்காரரும் மாணவனின் எதிர்காலத்தை குறித்து மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டது பாராட்டத் தக்கது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu