இன்று தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஏற்பாடுகள் தயார்
கோப்பு படம்
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று தொடங்கி, மே 28 ஆம் தேதி வரை நடைபெறும் தேர்வில், 8 லட்சத்து 60 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுத இருக்கின்றனர். காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடைகிறது.
எனினும், மாணவர்கள் காலை 9.45 மணிக்குள் தேர்வறையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், தேர்வு மையங்களில் காலை 9.45 மணிக்கு முதல் மணி அடிக்கப்படும். பின்னர், 9.55 மணிக்கு 2-வது மணி 2 முறை அடிக்கப்படும். அப்போது அறை கண்காணிப்பாளர் வினாத்தாள் உறைகளைப் பிரிப்பார். காலை 10 மணிக்கு 3-வது மணி 3 முறை அடிக்கப்படும் போது, மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும்.
தேர்வறையில், வினாத்தாளை மாணவர்கள் காலை 10 மணியில் இருந்து 10.10 மணி வரை படித்து பார்க்கவேண்டும். அதை தொடர்ந்து, காலை 10.10 மணிக்கு 4-வது மணி 4 முறை அடிக்கப்படும்போது, மாணவர்களுக்கு விடைத்தாள்கள் வழங்கப்படும். தொடர்ந்து 10.15 மணிக்கு 5-வது மணி 5 முறை அடிக்கப்படும். அந்த நேரத்தில் தேர்வு எழுத தொடங்கலாம்.
பிற்பகல் 1.10 மணிக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்படும். அப்போது விடைத்தாள்களை நூல் கொண்டு கட்டவேண்டும். பிற்பகல் 1.15 மணிக்கு தேர்வு நிறைவுபெற்றதற்கான நீண்ட மணி அடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் டூ பொதுத்தேர்வில், 3,638 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர்கள் மற்றும் 73 சிறை கைதிகள் என மொத்தம் 8.60 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். கொரோனா தொற்று பரவலுக்கு பின்னர் தேர்வு நடப்பதால், மாணவர்கள், பெற்றோர் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தேர்வறையில் ஒழுங்கீனங்களில் ஈடுபடக்கூடாது என்று மாணவர்களுக்கு கல்வித்துறை எச்சரித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu