MBA படிப்பு ஒரு கவுரவத்தின் அடையாளம்..! எம்பிஏ படிங்க..கை நிறைய சம்பாதிங்க
இன்று பொறியியல் படிக்கும் மாணவர்களாக இருந்தாலும் சரி கலை, வணிகவியல் மற்றும் அறிவியல் சார்ந்த மாணவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் உயர் பதவி நோக்கி பயணிக்க அடுத்து தேர்ந்தேடுக்க விரும்பும் கனவுமிகு மேற்படிப்பு Master Of Bussiness Administration (MBA).
உயர் அதிகாரி பதவி :
எம்.பி.ஏ. எனும் முதுநிலை படிப்புடன், சிறப்புப் பிரிவு ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ படித்தாலோ அல்லது சிறப்பு பிரிவை பட்ட மேற்படிப்பாக படித்தாலோ எளிதாக வேலைவாய்ப்பைப் பெறலாம். அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு நிறுவனங்களிலும் உயர்நிலை அதிகாரம் கொண்ட பதவிகளை பெற்றுத் தரக்கூடியது எம்.பி.ஏ. படிப்புகள். என்ஜினியரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள்கூட, முதுநிலை படிப்பில் எம்.பி.ஏ. தேர்வு செய்து படித்து சிறந்த வேலைவாய்ப்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
MBA வை பொருத்தவரை ஒரு ஒரு கடல், எம்.பி.ஏ. படிப்புகளில் ஏராளமான சிறப்பு பாடப்பிரிவுகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தியாவில் வணிக நிர்வாகத் துறையில் சிறப்பான வேலைவாய்ப்பையும், கவுரவத்தையும் பெற்றுத் தரும் சில எம்.பி.ஏ. பாடப்பிரிவுகளைப் பற்றி இங்கே காணலாம்.
எம்.பி.ஏ. (நிதி) பாடம் (Financial Management)
நிதி நிர்வாகம் எல்லாத் துறைகளுக்குமே அடிப்படையான ஒன்று என்பதால், நிதி சார்ந்த எம்.பி.ஏ. பட்டப்படிப்புகள், டிப்ளமோ படிப்புகள் எப்போதும் முன்னணி பெறும் பாடப் பிரிவாக உள்ளது. அதிகமானவர்கள் தேர்வு செய்து படிக்கும் ஒரு பாடப்பிரிவாகவும், எளிதில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரும் பாடப்பிரிவாகவும் இது திகழ்கிறது.
வணிக உலகின் அச்சாணி :
நிதி என்றதும் பலருக்கும் வங்கித் துறைதான் நினைவுக்கு வருகிறது. வங்கிகளில் மட்டும் நிதி நிர்வாகம் நடைபெறவில்லை. சின்னஞ்சிறு அலுவலகங்கள் முதல் பெரிய நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், பங்குச்சந்தை நிறுவனங்கள் என எந்தத் துறையைத் தொட்டாலும் நிதி நிர்வாகம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. வணிகம் உலகின் அச்சாணியாக இருக்கும் வரை நிதி நிர்வாகம் தன் மதிப்பை இழந்துவிடாது என்பது குறிப்பிடத்தக்கது.
வாய்ப்புகள் :
ஒவ்வொரு நிறுவனங்களிலும் கணக்கு அலுவலர்களின் மூலமாக அக்கவுண்ட் மேனேஜர், நிதி மேலாளர் போன்றவர்கள் அலுவலக வரவு செலவுகளை பட்டியலிடுகிறார்கள். இதில் நிதிநிலை ஆய்வு செய்பவர்கள் (பைனான்சியல் அனலிஸ்ட்) வழங்கும் ஆலோசனைகள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும். கேஷியர், அக்கவுண்ட் ஆஃபீசர், ரிஸ்க் அண்ட் இன்சூரன்ஸ் மேனேஜர், கிரெடிட் மேனேஜர், மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட், இன்வெஸ்ட்மன்ட் பேங்கிங் அசோசியேட்ஸ் அண்ட் லேட்டர் இன்வெஸ்ட்மென்ட், பேங்கர்ஸ், டிரெசர்ஸ் அண்ட் பினான்ஸ் ஆஃபீசர், பினான்ஸ் கண்ட்ரோலர், பினான்ஸ் ஆடிட்ஸ், சி.எஃப்.ஓ. (தலைமை நிதி அதிகாரி) போன்ற பிரிவில் இந்த படிப்பை படிப்பவர்களுக்கு வாய்ப்பு உண்டு. எம்.பி.ஏ. நிதி பாடப்பிரிவை சிறப்புப் பாடமாக எடுத்துப் படிப்பவர்கள் இவற்றில் ஏதேனும் ஒரு உயர் அதிகாரி பதவியை பெற்று சிறந்த வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ளலாம்.
எம்.பி.ஏ. மார்க்கெட்டிங் (Marketing Management) :
வணிக உலகில் நிதி நிர்வாகம் தலையைப் போன்றது என்றால் விற்பனைப் பிரிவு இதயம் போன்றது. மார்க்கெட்டிங் எனப்படும் விற்பனைப் பிரிவை அடிப்படையாகக் கொண்டே நிறுவனத்தின் வளர்ச்சி இருக்கும். எனவே விற்பனைப் பிரிவில் திறமையை வளர்த்துக் கொண்டவர்களை, எந்த நிறுவனமும், ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்றுக் கொள்ளும். அவ்வப்போது மாற்றங்களையும், போட்டிகளையும் சந்திக்கும் விற்பனைப் பிரிவில் நிலைத்து நிற்க நிறைய திறமைகள் வேண்டும். குறிப்பாக சிறந்த தகவல் தொடர்புத்திறன், ஆதாரம் பெருக்கும் ஆற்றல், குறையாத ஆர்வம் உள்ளிட்ட சிறப்புத் திறன் பெற்றவர்கள் விற்பனைப் பிரிவில் உயர உயர செல்ல முடியும்.
நிதிப்பிரிவைப் போலவே அனைத்து நிறுவனங்களிலும் விற்பனைப் பிரிவுகளும் செயல்படும். இங்கு பிராண்ட் மேனேஜர், பிராஜெக்ட் மேனேஜர், சேல்ஸ் மேனேஜர், மார்க்கெட்டிங் மேனேஜர், மார்க்கெட் ரிசர்ச் அனலிஸ்ட், ரீஜனல் மேனேஜர், சீஃப் மார்க்கெட்டிங் ஆபீசர் என ஏராளமான உயர் பதவிகள் உங்களுக்கு காத்திருக்கின்றன. எம்.பி.ஏ. மார்க்கெட்டிங் சிறப்பு பாடப்பிரிவில் தேர்ச்சி பெறுவதுடன், சி.ஏ., சி.எஸ். படிப்புகளையும் படித்து முடித்தவர்கள் வற்றாத வாய்ப்புகளைப் பெறலாம்.
எம்.பி.ஏ. ஆபரேஷன்ஸ் (Operations Management):
ஒவ்வொரு நிறுவனத்தின் தயாரிப்பு பிரிவு மற்றும் நிர்வாகப் பிரிவில் பராமரிப்பு மேலாளர், வளர்ச்சி அதிகாரி உள்ளிட்ட பணியிடங்கள் இருக்கும். இவர்கள் உற்பத்திப் பொருட்களின் தயாரிப்பு மற்றும் உற்பத்தி மேம்பாட்டு பணிகளையும், நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி பற்றிய திட்டமிடுதலிலும் முக்கிய பங்கு வகிப்பார்கள். இத்தகைய பணிவாய்ப்பு களைப் பெற்றுத் தரும் படிப்பாக எம்.பி.ஏ. ஆபரேஷன்ஸ் படிப்பு விளங்குகிறது. இவர்கள் புராடக்ட் மேனேஜர், டெக்னிக்கல் சூப்பர்வைசர் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளில் சேர்ந்து திறமையை வளர்த்துக் கொண்டால் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (சி.டி.ஓ.), மற்றும் பல்வேறு பிரிவுகளில் பொது மேலாளர் பதவி வரை உயர்வு காணலாம்.
எம்.பி.ஏ. (ஐ.டி.) (Information Management):
தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்பு பொறியியல் துறை சார்ந்தது என்றே எண்ணிக் கொண்டிருப்பவர்கள் பலர். வணிக நிர்வாகத்திலும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு, எந்திரங்கள், கருவிகளின் நிர்வாகம் (எம்.ஐ.எஸ்) போன்ற பிரிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவெடுத்துள்ளது. பி.இ., பி.டெக் படிப்புகளில் ஐ.டி. பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள், எம்.பி.ஏ. (ஐ.டி.) படிப்பை மேற்படிப்பாகவோ, முதுநிலை டிப்ளமோ படிப்பாகவோ தேர்வு செய்து படித்தால் சிஸ்டம் அனலிஸ்ட், டெக்னிக்கல் சிஸ்டம்ஸ் மேனேஜர், டெக்னிக்கல் கன்சல்டன்ட், பிசினஸ் டெவலப்மென்ட் மேனேஜர், சீஃப் இன்பர்மேசன் ஆஃபீசர், சீஃப் டெக்னாலஜி ஆபீசர் உள்ளிட்ட பதவிகளை அலங்கரிக்கலாம். தொழில்நுட்ப திறன் கொண்டவர்கள், புரோகிராம் சிறப்பாக எழுதுபவர்கள் இந்த பாடப்பிரிவை தேர்வு செய்து பயனடையலாம்.
எம்.பி.ஏ. (எச்.ஆர்.) (Human Resource Management) :
கார்பரேட் நிறுவனங்கள் பெருகிவரும் இந்தக் காலத்தில், எச்.ஆர். பணியிடங்கள் மதிப்புமிக்கதாகவும், வளமான வாய்ப்பு கொண்டதாகவும் விளங்குகிறது. தங்கள் நிறுவனத்திற்கு தகுதியான ஊழியர்களை தேர்வு செய்யும் அதிகாரியாக, அவர்களுக்கு பயிற்சி வழங்குபவராக, நிறுவன மேம்பாட்டில் பங்கெடுப்பவராக, வேலைவாய்ப்பு உலகத்தை மதிப்பிடுபவராக ஒரு எச்.ஆரின் பணிகள் விரிவடைந்து கொண்டே செல்கிறது. எம்.பி.ஏ. படிப்பில் எச்.ஆர். பாடப்பிரிவை தேர்வு செய்து படிப்பவர்கள் இண்டஸ்ட்ரியல் ரிலேசன்ஸ் மேனேஜர், டெவலப்மென்ட் மேனேஜர், எச்.ஆர். மேனேஜர் உள்ளிட்ட பதவிகளுக்கு செல்ல முடியும். பெருநிறுவனங்கள் பலவற்றில் பிரகாசமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
ஒரு நிர்வாகத்தை வெற்றிகரமாக நடத்த நினைத்தால் நிர்வாகத்தின் எல்லா நடவடிக்கைகளையும் எம்.பி.ஏ. சிறப்பு பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெறுவது உங்கள் கனவுகளை நனவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu