கொட்டும் தேள்களின் அற்புதங்கள்..! தேள் கண்டேன் தேளே கண்டேன்..!

கொட்டும் தேள்களின் அற்புதங்கள்..! தேள் கண்டேன் தேளே கண்டேன்..!
X

தேள் 

தேளினை பார்க்கும் போதே உடம்பெல்லாம் ஒருவித அச்சம் பரவும். எது கிடைக்கிறதோ அதை எடுத்து ஒரேபோடு போட்டு கொன்றுவிடுகிறோம். தேளுக்கு அவ்வளவு பயம்.

பார்ப்பவர்களுக்கு ஒரு வகை அருவருப்புடன் கூடிய பயம் ஆட்கொள்ளும். காரணம் அவற்றின் தோற்றம் பார்க்க பயங்கரமாக இருப்பதால் தான். Scorpion என்றழைக்கப்படும் தேள்கள் கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். ஊர் வழக்கத்தில் நட்டுவாக் காலி என்றும் கூறுவார்கள்.

தேள் இரண்டு பக்கங்களிலும் மூன்று விகிதம் ஆறு கால்களையும் முன்பக்கமாக கைகள் போன்று இரண்டு பிடிப்பான்களையும் கொண்டிருக்கும். இந்தக் கால்கள் மிக வேகமாக அவற்றுக்கு நகர உதவுகின்றன. இரைகளை லாவகமாகப் பற்றிப் பிடிப்பதும் சண்டையிடும் போது எதிரியை மடக்குவதும் முன்பக்கமாக உள்ள இரண்டு பிடிப்பான்களால் தான். பின்பக்கமாக நீண்ட வால் ஒன்று உண்டு.

அதன் நுனியில் நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கு ஒன்றும் காணப்படுகின்றது. இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கு இந்தக் கொடுக்கு உதவுகின்றது. அத்தோடு உடல் பூராகவும் நமது கண்களுக்கு தெளிவாகத் தென்படாதிருக்கும் நுண்ணிய மயிர்கள் தான் இவற்றின் உணர் கொம்புகள். சூழலை உணர்ந்து செயற்பட இம்மயிர்கள் இவற்றுக்கு உதவுகின்றன.

குளிர் பிரதேசங்கள் தவிர்ந்த மற்றைய எல்லாப் பகுதிகளிலும் தேள்களைக் காணலாம். அடர் காடுகள், மழைக் காடுகள், பாலைவன நிலங்கள், புதர்கள், பொந்துகள், மறைவான பகுதிகள் என எல்லா இடங்களிலும் இவை வாழ்கின்றன. மழை காலங்களில் தமது இருப்பிடங்களில் இருந்து வெளியேறுகின்றன. உலகில் வாழும் மிகப் பெரிய மற்றும் மிகச்சிறிய தேள் இனங்கள் இலங்கையில் தான் காணப்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் விலங்கியல் விஞ்ஞானப் பிரிவைச் சேர்ந்த குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியொன்றில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் 18 வகையான தேள் இனங்கள் காணப்படுவதாகவும் அவற்றில் 14 வகையான தேள் இனங்கள் இந்நாட்டுக்கே உரித்தானவை எனவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். பேராதனை பல்கலைக்கழக விலங்கியல் விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் கீர்த்தி சிரீ ரணவக மற்றும் தேள்கள் தொடர்பாக உலகிலேயே அதிகளவான பரிசோதனை மேற்கொண்டுவரும் ஆராய்ச்சியாளருமான குவாரிக் என்பவரும் சேர்ந்து இவ்வாராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.


உலகில் வாழும் மிகப்பெரிய தேள் இனமாக, 9 அங்குல நீளமான ஹொடொரொடெட்ரிஸ் ஸ்வடாம் மற்றும் மிகச் சிறிய தேள் இனமாக ஒரு சென்டி மீட்டர் நீளமான சாமுஸ் சரதியெல் என்ற எமது நாட்டுக்கு உரித்தான தேளினங்களும் ஆராய்சியின் போது இனங்காணப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

பாதுகாப்பான சூழலில் வாழும் ஒரு தேள் 4 ஆண்டுகள் வரை உயிர் வாழும். பிறந்து ஒரு வருடமாவதற்குள் அவை இனப்பெருக்கத்திற்குத் தயாராகி விடுகின்றன. ஆண் பெண் தேள்கள் இனப்பெருக்க காலத்தில் ஒன்று சேர்ந்து விட்டு மீண்டும் பிரிந்து தனித்தனியாக வாழ ஆரம்பிக்கின்றன. அதற்குள் பெண் தேள் தனது உடலில் முட்டைகளைச் சுமக்கும். இதில் உள்ள ஆச்சரியம் என்னவென்றால். மற்றைய பூச்சிகள் போன்று முட்டைகளை ஒரு இடத்தில் வைத்து விட்டு சென்று விடாமல் தமது வயிற்றிலேயே முட்டைகளை அடைகாத்து குஞ்சுகளைப் பொறிக்கும்.

தாயின் வயிற்றிலிருந்து வெளியேறும் குஞ்சுகள் தரையிறங்காது தாயின் முதுகிலேயே அவற்றின் ஆரம்ப மாதங்களைக் கழிக்கும். இது பார்ப்பதற்கு அற்புதமாயிருக்கும். தாய் தன் குஞ்சுகளைத் தியாகத்துடன் முதுகில் சுமந்து கொண்டு வளர்க்கும். குஞ்சுகளைத் தூக்கிக்கொண்டு நகரும். அவற்றுக்கு இரைகளைப் பற்றி உண்ணக் கொடுக்கும். இவ்வாறு அழகானதொரு வாழ்க்கை முறை அவற்றிடம் உண்டு.

இவை சிறிய புழுக்களையும் பூச்சிகளையும் பிற சிறிய உயிரினங்களையும் உண்டு வாழ்கின்றன. பூரான்கள், வண்டுகள், நண்டுகள் இவற்றின் உணவுப் பட்டியலில் அடங்கும். சிலநேரங்களில் ஒரு தேள் மற்றொரு தேளைக் கூட கொன்று வேட்டையாடி உண்டு விடும். ஒரு சமயத்தில் அதிகப்படியான உணவை உட்கொண்டு சேமித்துக்கொள்ளும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு. எனவே ’ஆறு மாதங்கள் வரைக்கும் உணவுண்ணாமல் இவற்றால் வாழலாம்.

தேள்களின் வால் நுணியில் கூர்மையான ஊசிபோன்ற ஒரு கொட்டு காணப்படுகின்றது. அதில் ஒருவகை விஷத் திரவம் இருக்கின்றது. இரையைப் பற்றிக் கொண்டதும் அல்லது எதிரியுடன் சண்டையிடும்போதும் முன்னால் இருக்கும் கைகளால் அதனைப் பற்றிக் கொண்டு பின்னாலுள்ள வாலை முன்பக்கம் மடித்து சட்டென்று கொட்டிவிடும். இது பலத்த வலியையும் சிலபோது ஆபத்தான தேள் வகையாயின் மரணத்தையும் ஏற்படுத்தி விடும். இதுவரை கண்டறியப்பட்டவற்றில் சுமார் 25 வகையான தேள்கள்தான் மரணத்தை ஏற்படுத்துமளவு விஷமுள்ளவை.

அவற்றின் பாதுகாப்புக்கு அவை விஷமாக இருந்தாலும் அதிலும் இயற்கை மனிதனுக்குப் பலனை வைத்துள்ளது. தேள் கொட்டினால் ஆயுள் முழுவதும் மாரடைப்பு ஏற்படாது என இங்கிலாந்தை சேர்ந்த லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதியதொரு ஆய்வு தெரிவிக்கின்றது. இதய நரம்புக் குழாய்களில் தேவைக்கதிகமாக இரத்தக் கலங்கள் விருத்தியடைவதால் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றது. உயிருக்கு ஆபத்தான இந்த பிரச்னையை சரி செய்ய, இதய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால், இந்த பிரச்னையே வாழ்நாளில் ஏற்படாமல் இருக்க தேள் உதவுகிறது.

தேள் கொட்டும்போது அதன் கொடுக்கில் இருந்து விஷம் வெளியாகிறது. அந்த விஷத்தில் மார்கடாக்சின் என்ற பொருள் இருக்கிறது. அது இதயத் தமனியில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா உருவாவதை தடுக்கிறது. அதன்மூலம், புதிய செல்கள் உருவாவது தடுக்கப்பட்டு, இதயத்தில் அடைப்பு, செயலிழப்பு தவிர்க்கப்படும்.

இதயத் தமனிகளில் புதிய செல்கள் உருவாவதை மார்கடாக்சினில் உள்ள கேவி 1.3 என்ற பொட்டாசியம் தடுத்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் என அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது. பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின் (BHF) இயக்குனர் கூறுகையில், தேளின் விஷத்தில் உள்ள மார்கடாக்சினை முறையாக பயன்படுத்தினால், ஆபத்தான இதய நோய்களுக்கு மருத்துவப் பயன்களைப் பெறலாம் என்பது உறுதி என்கிறார்.

தேளின் விஷம் மிகக் கொடியதாக இருந்தாலும் அதையும் சிறந்த வலி நிவாரணியாகப் பயன்படுத்தலாம் என இஸ்ரேல் நாட்டின் ஆய்வாளர் மைக்கல் குர்விட்ஸூம், அவரது ஆய்வுக் குழுவும் கூறுகின்றனர். இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழக தாவர அறிவியல் துறை பேராசிரியர் மைக்கேல் குர்விட்ஸ் கூறுகையில், தேளின் விஷத்திலிருந்து சிறந்த வலி நிவாரணியை உருவாக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளன.

இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்து வருகிறோம். எந்தவித பக்க விளைவையும் தேளின் விஷத்திலிருந்து உருவாக்கப்படும் வலி நிவாரணி ஏற்படுத்தாது. தேளின் விஷத்தில் உள்ள பெப்டைட் டாக்சின்கள், நமது நரம்பு மண்டலம் மற்றும் சதைப் பகுதிகளில் ஊடுறுவி வலியை முற்றிலுமாக அகற்ற உதவும். அறுவை சிகிச்சைகளின்போது இதனை அதிக அளவில் பயன்படுத்தலாம் என அவர் தெரிவிக்கின்றார்.

பாலூட்டிகளின் உடல்களில் ஒன்பது வகையான சோடியம் வழிகள் (sodium channels) காணப்படுகிறன. இவற்றில் சிலதான், வலியை உருவாக்கி அதை மூளைக்கு தெரிவிக்கிறது. இந்த சோடியம் சேனல்களில் பெப்டைட் டாக்சின்கள் எவ்வாறு செயல்பட முடியும் என்பதை ஆராய்ந்து வருகிறோம். இதை சரி செய்து விட்டால் நிச்சயம் இந்த வலி நிவாரணியை வெற்றிகரமாக உருவாக்க முடியும். மேலும் வலி உருவாகும் இடத்தையும் துல்லியமாக கண்டறிந்து அந்த இடத்தில் மட்டும் மருந்து செயலாற்றும் வகையில் செய்ய முடியும். இதன் மூலம் பல்வேறு பக்க விளைவுகளை நாம் தவிர்க்கலாம் என்கிறார் குர்விட்ஸ்.

காகம், பருந்து, கோழி, பூனை என தேள்களுக்கு எதிரிகள் நிறையவே இருக்கின்றன. அதற்கும் அப்பால் அவற்றின் பெரும் எதிரி மனிதன் தான். தேள்களைக் கண்டதும் அவற்றின் மீதுள்ள பயத்தில் உடனே அடித்துக் கொன்று விடுகின்றோம். அத்தோடு பயிர் நிலங்களுக்கு அடிக்கும் பூச்சுக் கொல்லி மருந்துகளாலும் தேள்கள் அழிந்து வருகின்றன. முன்பெல்லாம் சாதாரணமாக்க் காணக்கூடிய தேள்களை இன்று பார்ப்பது மிகவும் அரிது.

புராண பிரமிட் காலம் முதல் தேள்கள் அடையாளப்படுத்தப்பட்டு வந்துள்ளன. எகிப்தில் தேள் கடவுளாக வணங்கப்பட்டும் வந்துள்ளது. இப்போதும் தேளின் உருவத்தை பாதுகாப்புக் கருதி உடம்பில் பச்சை குத்துபவர்களைப் பார்க்கிறோம். விருச்சிக ராசி என்பது தேளைவைத்து பார்க்கப்படும் ஜோதிட முறையாகும்.

சீனர்களின் உணவு வகைகளில் தேளும் உண்டு. பொறித்து, வருத்து சமைத்து உண்பார்கள். Scorpion King திரைப்படம் போன்று தேளை சம்பந்தப்படுத்தி ஹாலிவுட் திரைப்படங்கள்கூட எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தேளுக்கும் மனிதனுக்கும் இடையில் வரலாற்று ரீதியான தொடர்புகள் இருக்கின்றன.

Tags

Next Story