குமாரபாளையம், JKKN கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம்
இரத்த தான முகாமில் இரத்தம் வழங்கும் ஒருவர்.
குமாரபாளையம் JKKN கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கொடை வள்ளல்.JKK நடராஜா அவர்களின் 97வது பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக கடந்த ஒரு வாரகாலமாக JKKN கல்வி நிறுவனம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. அதன் ஒரு பகுதியாக மாபெரும் இரத்த தான முகாம் கல்லூரி வளாகத்தில் 10ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை நடைபெற்றது.
இந்த மாபெரும் இரத்ததான முகாமினை JKKN கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ஓம்சரவணா, பவானி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கலைசெல்வி, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் டாக்டர்.சசிகலா ஆகியோர் இணைந்து இந்த மாபெரும் இரத்ததான முகாமினை துவக்கி வைத்தனர்.
இரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து டாக்டர் சசிகலா பேசினார். அவர் பேசும்போது,
'1901ம் ஆண்டில் கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் என்பவர் ரத்தத்திலுள்ள A, B, AB, O வகைகளை முதன் முதலில் கண்டறிந்தார். அவ்வாறு அவர் ரத்த வகைகளை கண்டறிந்ததன் மூலம் ஒருவரது ரத்தத்தை மற்றொருவருக்கு மாற்றிச் செலுத்துவது சாத்தியமானது.
இரத்த தானம் செய்பவரின் வயது 18 வயது நிரம்பியவராகவும், 60 வயது மிகாதவராகவும் இருத்தல் அவசியம். இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும் 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
ஒருவர் தன் வாழ்நாளில் ஒருமுறை இரத்ததானம் செய்வதன் மூலம் நான்கு உயிர்களை காப்பாற்ற முடியும். ஒரு மனிதரின் உடலில் 4 முதல் 6 லிட்டர் வரை இரத்தம் உள்ளது. உலக அளவில் ஆண்டுதோறும் 6.8 மில்லியன் மக்கள் ரத்தத்தை கொடையாக வழங்குகின்றனர். பல சமூக வலைதளங்களில் குழுக்கள், ரத்த வங்கிகள் உதவியோடு தானமாக பெறப்பட்ட ரத்தம் உரிய முறையில் ரத்த வங்கிகளில் சேமிக்கப்படுகின்றது.
18 முதல் 60 வயதுக்குட்பட்ட 45 கிலோ உடல் எடைக்கு மேல் உள்ளவர்கள் தாராளமாக இரத்த தானம் வழங்க முடியும். மருத்துவமனைகளில் ரத்தம் பெறப்படும் முன்னர் சில பரிசோதனைகள் எடுக்கப்பட்ட பின்னரே தானமாக இரத்தம் கொடுக்க கொடையாளர் அனுமதிக்கப்படுவார். ஒருவர் உடலில் இருந்து 350 மில்லி லிட்டர் ரத்தம் மட்டுமே எடுக்கப்படும்.
கொடையாக வழங்கிய 24 மணி நேரத்திற்குள்ளாக நமது உடலில் மீண்டும் ரத்தம் ஈடு செய்யப்பட்டு விடும். ஆண்கள் வருடத்தில் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒருமுறையும் தாராளமாக இரத்த தானம் செய்யலாம் என்றார்.
மேலும் தற்போதைய காலக்கட்டத்தில் நோயாளிகளுக்கான ரத்த தேவை அதிகரித்துள்ளது. இரத்தம் கிடைக்காமல் பலர் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து உயிர் காக்க, இரத்த தானம் செய்யுமாறு மாணவ, மாணவியர்களையும், தன்னார்வலர்களையும், ஊக்கப்படுத்தினார்.
ஸ்ரீ சக்திமயில் செவிலியர் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த இரத்ததான முகாமில் JKKN கல்வி நிறுவன கல்லூரிகளின், முதல்வர்கள், பேராசிரியர்கள் மாணவ,மாணவியர்கள் பலர் ஆர்வமுடன் பங்கேற்று இரத்த தானம் செய்தனர். இந்த மாபெரும் இரத்த தான முகாமில் 59 பேர் இரத்ததானம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu