Ayutha Eluthu-'ஆயுத' எழுத்து என்பது சரியா? தெரிஞ்சுக்கங்க..!
ayutha eluthu-ஆய்த எழுத்து (கோப்பு படம்)
Ayutha Eluthu
முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியதில் முதன்மையானது - பலரும் குறிப்பிடுவது போல் 'ஃ' - என்பது ஆயுத எழுத்து அல்ல. ஆய்த எழுத்து என்பதே சரியான தமிழ்ச் சொல்.
ஆய்தம் - என்றால் நுணுகிய ஒலி என்று பொருள்.
ஃ - என்பது ஓர் நுணுகிய ஒலி. மெய்யெழுத்தாகக் கொள்ளப்படினும், மெய்க்கும் உயிர்க்கும் இடைப்பட்ட தன்மையால் அரை மாத்திரையில் நுணுகி ஒலிக்கிறது.
Ayutha Eluthu
'ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய், ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்' - தொல்காப்பியம்.
ஆய்தம் என்னும் சொல் ஒலியை நுண்மையாக்கி அதாவது மென்மையாக்கிக் காட்டுவது என்னும் பொருள்பட அமைந்ததாகும். ஒசையினிமை கருதி நுணுகி (அஃகி) ஒலித்தலால் ஆய்தம் எனப்பட்டது.
குறிப்பாக வல்லின எழுத்துக்களை நுண்மையாக்கிக் காட்டவே ஆய்த எழுத்து பயன்படுவதை நாம் காண முடிகிறது.
கீரை 'ஆய்தல்’ என்ற வழக்கை பாருங்கள். பெரிய கீரைக் கட்டினைச் சிறுசிறு இலைகளாகப் பிரித்தலே இதன் பொருள்.
இதே போலவே ‘ஃ’ என்கிற ஆய்த எழுத்தானது வல்லின எழுத்துகளுக்கு முன்பாக வரும்போது அதை நுணுகி மென்மையாக்கிவிடும்.
எஃகு, கஃசு, கஃடு, பஃது, பஃறி என்னும் சொற்களில் ஆய்த எழுத்து அடுத்துள்ள வல்லின எழுத்தை மென்மையாக்கிக் காட்டுவதை இவற்றை ஒலித்துப் பார்த்து உணர்ந்துகொள்ளலாம்.
Ayutha Eluthu
உதாரணமாக, இந்த இரண்டு சொற்களையும் சத்தமாகச் சொல்லிப் பாருங்கள்: அக்கு, எஃகு
இரு சொற்களிலும் ‘கு’ என்ற எழுத்து இருப்பினும் ‘அக்கு’வில் உள்ள ‘கு’வும், ‘எஃகு’வில் உள்ள ‘கு’வும் ஒரேமாதிரி ஒலிப்பதில்லை. என்பதை நீங்கள் சொல்லிப்பாருங்கள், புரியும்.
முதல் ‘கு’க்கும், இரண்டாவது ‘கு’க்கும் நம் வாய் திறந்து குவிகிற விதமும் , நாக்கு மடங்குகிற விதமும் மாறுபடுவதை தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். ‘எஃகு’ என்பதில் உள்ள ‘ஃ’ ஆனது ’கு’ என்ற வல்லின எழுத்தைக் கொஞ்சம் மாற்றி மெல்லினம்போல் ஒலிக்கச் செய்துவிடுகிறது.
நுட்பமான இந்தக் காரணத்தால் ஆய்கிற / மென்மையாக்குகிற எழுத்து என்ற பொருளில் அதனை ‘ஆய்த எழுத்து’ எனப் பெயரிடப்பட்டு அழைத்தனர் நம் முன்னோர்கள்.
Ayutha Eluthu
துக்கடா :
அஃகான், அஃகேனம், அஃகன்னா, தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி போன்ற பெயர்களாலும் ஆய்த எழுத்து அழைக்கப்படுகிறது.
ஆய்தல் = நுணுகுதல், சிறுத்தல், கூர்மையாதல். (ஆய்தல் = அக்குதல்) அக்கு = கூர்மை.
ஆய்தம் = நுணுகக் கூராக்கப்பட்ட கத்தி.
ஆய்தம் = நுணுகிய ஒலி.
ஆய்தல் = நுணுகிப் பார்ப்பது; ஆர ஆய்வது ஆராய்ச்சி.
அக்கு - என்ற சொல் கூர்மையைக் குறித்து பின்னர் கண்ணையும் குறித்ததை இங்கும் விளக்கியுள்ளேன்.
ஆய்தம் என்பது ஆய்தல் என்று பொருள். ஆய்தல் என்றால் ஆராய்ச்சி/நுணுக்குதல். ஏன் இந்தப் பேரென்றால்: ஒலியை ஆய்ந்து நுணுக்கல்.
தமிழில் வல்லினம் எனப்படும் கசடதபற கூட சற்றே மெலிதாகத் தான் ஒலிக்கிறது. அதற்குப் பெயர் வல்லினம் தான்; ஆனால் அதன் ஒலிப்பு சற்றுச் சன்னமே. சம்ஸ்கிருதம் போல் ka, kha, ga, gha என்றெல்லாம் மூச்சு வாங்க ஒலிக்கத் தேவையில்லை. வன்மையிலும் ஒரு மென்மை உண்டு.
அந்த வல்லினத்தையும் ஆய்ந்து நுணுக்க ஆய்த எழுத்து பயன்படுகிறது. அது என்று ஒலிக்கும் போது, "து" என்ற எழுத்தின் மேல் கொடுக்கப்படும் அழுத்தத்தை விட, அஃது (அhது) என்று ஒலிக்கும் பொழுது மென்மை ஆகிறது. இந்த நுணுக்கமே ஆய்தம்.
Ayutha Eluthu
உயிர் எழுத்துக்களை பழகும் போது இறுதியில் ஆய்த எழுத்தை சொல்லித் தருகிறோம். அப்போது அதனுடைய ஒலிப்பை "அக்கு" என்று சொல்கிறோம். ஆனால், அது பிழையான ஒலிப்பு. அதன் உண்மையான ஒலிப்பு "அh" என்பதே. அதனால் தான் எப்போதும் ஒலிப்பு பழகி, பின்பு எழுத்து பழக வேண்டும்.
எல்லா இடத்திலும் ஆய்த எழுத்தைப் பயன்படுத்த இயலாது. ஏனெனில், அது ஓர் ஓசை நுட்பத்திற்காக வந்த எழுத்து. எப்போதும் ஆய்த எழுத்திற்கு முன்பு குறிலும், பின்பு வல்லின உயிர்மெய்யும் வரவேண்டும். சான்று: எஃகு, கஃசு, அஃது, சிஃபு. இது அன்றாடப் பயன்பாட்டுக்கு உண்டான எழுத்து அல்ல. இது ஒரு சார்பெழுத்து, நுட்ப எழுத்து, மைய நீரோட்ட எழுத்து அல்ல!
இப்போது பலரும் ஃபேன் (fan) என்று எழுதுகிறார்கள். F எனும் ஆங்கிலத்தை ஒலிக்க, ஃ போட்டுக் கொள்கிறார்கள். ஆனால் ஆய்த எழுத்து, "ஹ்" என்ற ஒலியைத் தான் கொடுக்கும். f ஒலி கொடுக்காது. ஃபேன் என்று எழுதினால் "ஹ்பேன்" என்று தான் ஒலி வரும். அதனால் ஒன்று, பேன் என்று எழுத வேண்டும், அல்லது மின்விசிறி என்று எழுதவேண்டும். இல்லையேல் Fan என்று ஆங்கிலத்தை ஆங்கிலத்திலேயே எழுதி விடலாம்.
Ayutha Eluthu
"ஃப்ரெண்ட்" என்று எழுதும் போது "ஹ்ப்ரெண்ட்" என்று தான் ஒலி. அதனால் நீங்கள் friend என்று எழுத வேண்டியிருந்தால் "நண்பர்" என்று எழுதிவிடுங்களேன்? அல்லது ஆங்கிலத்திலேயே "friend" என்று எழுதி விடலாமே? எதற்கு பிரண்டு/ ஃபிரண்டு/ ஹ்ப்ரெண்டு? தயவு செய்து ஆய்த எழுத்தை (F) என்ற ஒலிப்புக்கு மாற்றாகப் பயன்படுத்தாதீர்கள்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu