Aathisudi Tamil-ஒளவையின் ஆத்திசூடி அறிவோமா?
aathisudi tamil-ஒளவையாரின் ஆத்திசூடி (கோப்பு படம்)
Aathisudi Tamil
ஆத்திச்சூடி என்பது 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே மனதில் இலகுவாக நிறுத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி.
Aathisudi Tamil
தமிழ்ச் சமுதாயம் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை உணர்த்தும் விதமாகவும் அன்று வழக்கத்திலிருந்த திண்ணைப் பள்ளிகள், குருகுலங்கள் முதல், இன்று பின்பற்றப் படுகிற மெக்காலே கல்வி முறை வரை, தமிழ் கற்கும் போது தமிழின் உயிரெழுத்துகளைச் சொல்லித் தரும் பொருட்டு ஔவையின் ஆத்திசூடியைக் கொண்டு கற்பிப்பதை ஆசிரியர்கள் கடைப்பிடித்து வருகின்றார்கள்.
ஔவையார் எழுதிய ஆத்திசூடி வரிகள் அதன் பொருள் விளக்கம் குறித்து பார்ப்போம் வாங்க.
Aathisudi Tamil
உயிர் வருக்கம்
1. அறம் செய விரும்பு
தருமம் செய்ய ஆசைப்படு.
2. ஆறுவது சினம்
கோபம் தணிய வேண்டியதாகும்.
3. இயல்வது கரவேல்
உன்னால் கொடுக்கமுடிந்த பொருளை மறைத்து வைக்காமல் வறியவர்க்கு கொடு.
4. ஈவது விலக்கேல்
தருமத்தின் பொருட்டு ஒருவர் மற்றோருவருக்கு கொடுப்பதை தடுக்காதே
5. உடையது விளம்பேல்
உன்னுடைய பொருளையோ அல்லது இரகசியங்களையோ பிறர் அறியுமாறு சொல்லாதே.
6. ஊக்கமது கைவிடேல்
முயற்சியை எப்போதும் கைவிடக்கூடாது.
7. எண் எழுத்து இகழேல்
கணித நூல்களையும் அற நூல்களையும் இலக்கண நூலையும் இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.
8. ஏற்பது இகழ்ச்சி
யாரிடமும் எதையும் யாசிக்க கூடாது அது இகழ்ச்சி ஆகும்.
9. ஐயம் இட்டு உண்
யாசிப்பவருக்கு(ஊனமுற்றோர்) கொடுத்து பிறகு உண்ண வேண்டும்.
10. ஒப்புரவு ஒழுகு
உலக நடைமுறையை அறிந்துகொண்டு, அதனுடன் வாழ கற்றுக்கொள்.
11. ஓதுவது ஒழியேல்
நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
12. ஔவியம் பேசேல்
ஒருவரிடமும் பொறாமைக் கொண்டு பேசாதே.
13. அஃகம் சுருக்கேல்
அதிக இலாபத்துக்காக தானியங்களின் எடையை, குறைத்து விற்காதே.
Aathisudi Tamil
உயிர்மெய் வருக்கம்
14. கண்டொன்று சொல்லேல்.
பொய் சாட்சி சொல்லாதே.
15. ஙப் போல் வளை.
‘ங’ என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க ‘ஙா’ வரிசை எழுத்துக்களை தழுவுகிறதோ! அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்.
16. சனி நீராடு.
சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து நீராடு.
17. ஞயம்பட உரை.
கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு.
18. இடம்பட வீடு எடேல்.
தேவைக்கேற்ப வீட்டை கட்டிக்கொள்.
19. இணக்கம் அறிந்து இணங்கு.
ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்பு அவர் நல்ல குணங்கள் உள்ளவரா எனத்தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்.
Aathisudi Tamil
20. தந்தை தாய்ப் பேண்.
உன் தந்தையையும் தாயையும் இறுதிக்காலம் வரை அன்புடன் இருந்து காப்பாற்று.
21. நன்றி மறவேல்.
ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறந்து விடாதே.
22. பருவத்தே பயிர் செய்.
ஒரு செயலை செய்யும்பொழுது அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.
23. மண் பறித்து உண்ணேல்.
பிறர் நிலத்தை ஏமாற்றி கவர்ந்து அதன் மூலம் வாழாதே.
24. இயல்பு அலாதன செய்யேல்.
நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.
25. அரவம் ஆட்டேல்.
பாம்புகளை பிடித்து விளையாடாதே.
26. இலவம் பஞ்சில் துயில்.
‘இலவம் பஞ்சு’ எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு
27. வஞ்சகம் பேசேல்.
உண்மைக்கு புறம்பான கவர்ச்சிகரமான சொற்களை பேசாதே.
Aathisudi Tamil
28. அழகு அலாதன செய்யேல்.
இழிவான செயல்களை செய்யாதே.
29. இளமையில் கல்.
இளம்பருவத்திலே கற்க வேண்டியவைகளை தவறாமல் கற்றுக்கொள்.
30. அறனை மறவேல்.
தருமத்தை எப்பொழுதும் மனதில் நினைக்கவேண்டும்.
31. அனந்தல் ஆடேல்.
மிகுதியாக தூங்காதே.
ககர வருக்கம்
32. கடிவது மற
யாரையும் கோபத்தில் கடிந்து பேசாதே.
33. காப்பது விரதம்
தான் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும்.
34. கிழமை பட வாழ்
பிறருக்கு நன்மை செய்து வாழ்.
Aathisudi Tamil
35. கீழ்மை அகற்று
இழிவான குணஞ் செயல்களை நீக்கு.
36. குணமது கைவிடேல்
நன்மை தரக்கூடிய குணங்களை கைவிடாதே.
37. கூடிப் பிரியேல்
நல்லவரோடு நட்பு செய்து பழகி பின் அவரை விட்டு பிரியாதே.
38. கெடுப்ப தொழி
பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.
39. கேள்வி முயல்
கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய்.
40. கைவினை கரவேல்
தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.
Aathisudi Tamil
41. கொள்ளை விரும்பேல்
பிறர் பொருளை கவருவதற்கு ஆசைப்படாதே.
42. கோதாட்டு ஒழி
குற்றமான விளையாட்டை விட்டு விடு.
43. கௌவை அகற்று
வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு.
Aathisudi Tamil
சகர வருக்கம்
44. சக்கர நெறி நில்
தர்மசக்கர நெறிப்படி வாழ வேண்டும்.
45. சான்றோர் இனத்து இரு
அறிவு ஒழுக்கங்கள் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.
46. சித்திரம் பேசேல்
பொய்யான வார்த்தைகளை மெய் போலப் பேசாதே.
47. சீர்மை மறவேல்
புகழுக்குக் காரணமான குணங்களை மறந்து விடாதே.
48. சுளிக்கச் சொல்லேல்
கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும்படி பேசாதே.
49. சூது விரும்பேல்
ஒருபொழுதும் சூதாட்டத்தை விரும்பாதே.
50. செய்வன திருந்தச் செய்
செய்யும் செயல்களை தவறும் குறையும் இல்லாமல் செய்யவும்.
Aathisudi Tamil
51. சேரிடமறிந்து சேர்
நீ பழகுபவர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என ஆராய்ந்து பின்பு பழகு.
52. சையெனத் திரியேல்
பெரியோர்கள் நம்மை வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே
53. சொற்சோர்வு படேல்
பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே
54. சோம்பித் திரியேல்
சோம்பேறியாகத் திரியாதே.
தகர வருக்கம்
55. தக்கோன் எனத் திரி
பெரியோர்கள் உன்னைத் யோக்கியன், நல்லவன் என்று புகழும்படி நடந்துக்கொள்.
56. தானமது விரும்பு
வேண்டுபவருக்கு தானம் செய்.
57. திருமாலுக்கு அடிமை செய்
நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்
Aathisudi Tamil
58. தீவினை யகற்று
பாவச் செயல்களை இருந்து விலகி இரு.
59. துன்பத்திற்கு இடங்கோடேல்
முயற்சி செய்யும் பொழுது வரும் துன்பத்திற்காக அஞ்சி அதனை விட்டு விடாதே.
60. தூக்கி வினைசெய்
உபாயம் அறிந்த பின் காரியத்தை தொடங்கு.
61. தெய்வம் இகழேல்
கடவுளை பழித்து பேசாதே.
62. தேசத்தோடு ஒட்டி வாழ்
நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் கூடி வாழ்.
63. தையல்சொல் கேளேல்
மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடக்காதே.
Aathisudi Tamil
64. தொன்மை மறவேல்
பழைமையை மறவாதிருக்க வேண்டும்.
65. தோற்பன தொடரேல்
தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்த செயலை தொடங்காதே.
நகர வருக்கம்
66. நன்மை கடைப்பிடி
நல்வினை செய்வதை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்.
67. நாடு ஒப்பனை செய்
நாட்டில்(சமுதாயத்தில்) உள்ள மக்கள் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்.
Aathisudi Tamil
68. நிலையிற் பிரியேல்
உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.
69. நீர்விளை யாடேல்
வெள்ளபெருக்கில் நீந்தி விளையாடாதே.
70. நுண்மை நுகரேல்
நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே.
71. நூல்பல கல்
அறிவை வளர்க்கும் நூல்களைப் படி.
72. நெற்பயிர் விளை
நெற்பயிரை விளையச் செய்.
73. நேர்பட ஒழுகு
ஒழுக்கம் தவறாமல் நேர்மையான வழியில் வாழ்.
Aathisudi Tamil
74. நைவினை நணுகேல்
பிறர் வருந்தத் தரும் தீவினைகளைச் செய்யாதே.
75. நொய்ய உரையேல்
அற்பமான வார்த்தைகளைப் பேசாதே.
76. நோய்க்கு இடம் கொடேல்
உணவு மற்றும் உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே.
Aathisudi Tamil
பகர வருக்கம்
77. பழிப்பன பகரேல்
பொய், கடுஞ்சொல், பயனில்லாத சொற்களை பேசாதே.
78. பாம்பொடு பழகேல்
பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்களுடன் பழகாதே.
79. பிழைபடச் சொல்லேல்
குற்றம் உண்டாகும்படி எதையும் பேசாதே.
80. பீடு பெறநில்
பெருமையை அடையும் படியான நல்ல நிலையிலே இரு.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
நம்பியவர்களை ஆதரித்து வாழ்.
82. பூமி திருத்தியுண்
நிலத்தை உழுது பயிர்செய்து உண்.
Aathisudi Tamil
83. பெரியாரைத் துணைக்கொள்
அறிவிலே சிறந்த சான்றோர்களை உனக்குத் துணையாக கொள்.
84. பேதைமை யகற்று
அறியாமையைப் போக்கு
85. பையலோடு இணங்கேல்
அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.
86. பொருள்தனைப் போற்றிவாழ்
பொருள்களை வீண் செலவு செய்யாமல் பாதுகாத்து வாழ்.
87. போர்த்தொழில் புரியேல்
யாருடனும் கலகம் செய்யாதே.
Aathisudi Tamil
மகர வருக்கம்
88. மனந்தடு மாறேல்
எந்த சூழ்நிலையிலும் மனக்கலக்கம் அடையாதே
89. மாற்றானுக்கு இடம்கொடேல்
பகைவன் உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே.
90. மிகைபடச் சொல்லேல்
சாதாரணமான விஷயத்தை உயர்ந்த வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.
91. மீதூண் விரும்பேல்
மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.
92. முனைமுகத்து நில்லேல்
போர் முனையிலே நிற்காதே
93. மூர்க்கரோடு இணங்கேல்
மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.
94. மெல்லி நல்லாள் தோள்சேர்
பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.
Aathisudi Tamil
95. மேன்மக்கள் சொற்கேள்
நல்லொழுக்கம் உடைய சான்றோர்கள் சொல்வதைக் கேட்டு நட.
96. மைவிழியார் மனையகல்
விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்.
97. மொழிவது அறமொழி
சொல்லுவதை ஐயமின்றித் திருத்தமுறச் சொல்
98. மோகத்தை முனி
வாழ்வில் நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை முறித்துவிடு.
Aathisudi Tamil
வகர வருக்கம்
99. வல்லமை பேசேல்
உன்னுடைய சாமர்த்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே.
100. வாதுமுற் கூறேல்
பெரியோர்களிடத்தில் முற்பட்டு வாதிடாதே.
101. வித்தை விரும்பு
கல்வியாகிய நற்பொருளை விரும்பு.
102. வீடு பெறநில்
முக்தியை பெறுவதற்கான சன்மார்கத்திலே நடந்து கொள்.
103. உத்தமனாய் இரு
உயர்ந்த குணங்கள் கொண்டவனாக வாழ்.
104. ஊருடன் கூடிவாழ்
ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்.
Aathisudi Tamil
105. வெட்டெனப் பேசேல்
யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே.
106. வேண்டி வினைசெயேல்
வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே.
107. வைகறை துயில் எழு
நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு.
108. ஒன்னாரைத் தேறேல்
பகைவரை நம்பாதே.
109. ஓரஞ் சொல்லேல்
எந்த வழக்கிலும் ஒரு பக்கம் மட்டும் பேசாமல் நடுநிலையுடன் பேசு.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu