நீட் தேர்வு எழுத 13 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் விண்ணப்பம்

நீட் தேர்வு எழுத 13 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் விண்ணப்பம்
X

பைல் படம்

நீட் தேர்வு எழுத தமிழ்நாட்டின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 13 ஆயிரத்து 200 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்த ஆண்டு நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 13 ஆயிரத்து 200 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்த நிலையில், விண்ணப்பம் செய்துள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 25ஆம் தேதி முதல் நேரடியாக இலவச நீட் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் 969 மாணவர்களும், சென்னை மாவட்டத்தில் 827 மாணவர்களும், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா 730 மாணவர்களும் என 13 ஆயிரத்து 200 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை செய்து உள்ளது. 2023-2024 கல்வியாண்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு நீட் நுழைவு தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்களுக்கு, பள்ளியிலேயே ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, ‌நவம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை பள்ளி அளவில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் சார்ந்த பயிற்சிகள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 12ஆம் வகுப்பு அரசு பொதுதேர்வுகள் முடிந்த பின்னர், மார்ச் 25ஆம் தேதி முதல் மே 2ஆம் தேதி வரை நீட் தேர்வு சார்ந்த பயிற்சிகள் மற்றும் தேர்வுகள் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி மாவட்ட அளவில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு கல்வி மாவட்டத்திற்கு, அதிகபட்சம் இரண்டு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட வேண்டும். ஒரு மையத்திற்கு 40 மாணவர்கள் என, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம். இணையதள வசதி மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் வசதி உடைய பள்ளிகளை பயிற்சி மையங்களாக தேர்வு செய்ய வேண்டும்.

பயிற்சி மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிற்சிகள் மற்றும் தேர்வுகள் நடைபெறும். ஒரு மையத்திற்கு இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் என ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியே திறமையும், ஆர்வமும், விருப்பமும் உடைய ஆசிரியர் குழுவினை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.

ஏற்கனவே, நீட் தேர்வு சார்ந்த பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கலாம். ஒவ்வொரு மையத்திற்கும் நாள் ஒன்றுக்கு 4 ஆசிரியர்கள் விலங்கியல், வேதியியல், தாவரவியல் மற்றும் இயற்பியல் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பயிற்சி அளிக்க உள்ளனர்.

பயிற்சி வகுப்புகளின்போது காலை சிற்றுண்டி, தேநீர் மற்றும் மதிய உணவு மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும், பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று வருவதற்கான பேருந்து கட்டணத் தொகை மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படும். பயிற்சி மையங்கள் திங்கள் முதல் சனி வரை காலை 9.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை செயல்படும். காலை சிற்றுண்டி 8.30 மணி முதல் 9.00 மணி வரை வழங்கப்படும்.

ஒவ்வெரு சனிக்கிழமை அன்றும், காலை 9.15 மணி முதல் 10.45 மணி வரை திருப்புதலும், அதைத் தொடர்ந்து 11 மணி முதல் 12.40 மணி வரை வாராந்திரத் தேர்வுகளும் நடைபெறும். பயிற்சியின் இறுதியில் மொத்தம் 3 திருப்புதல் தேர்வுகள் நடைபெற உள்ளது.

Tags

Next Story
கேன்சர்க்கு இனி குட் பை.. புதிய தடுப்பூசி உருவாக்கி உலகையே அதிர வைத்த ரஷ்யா !