கணையத்தின் வேலை என்னன்னு தெரிஞ்சுக்கங்க..! மதுவை தொட மாட்டீங்க..!

Pancreas in Tamil Meaning
X

Pancreas in Tamil Meaning

Pancreas in Tamil Meaning-கணையம் ரொம்ப அமைதியான உறுப்பு. ஆனால், சீறினால் சிங்கம். பாத்து நடந்துக்கோங்க.

Pancreas in Tamil Meaning-'கணையம் எங்கே இருக்கிறது?' என்று கேட்டால், பலருக்கு தெரியுமோ தெரியாதோ நானறியேன். ஆனால் கணையம் என்ன வேலை செய்யிது என்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.காரணம், கணையம் குறித்த விழிப்புணர்வு படித்தவர்களிடம் கூட இன்று இல்லை. மது குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிற இந்த கால கட்டத்தில் கணையத்தை பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பயன்பாடு என்ன? அது என்னென்ன வேலைகளைச் செய்கிறது என்பதெல்லாம் தெரியவேண்டியது அவசியம்.

கணையம் என்பது ஒரு கலப்பட சுரப்பி

வயிற்றுப்பகுதியில், இரைப்பைக்குக் கீழே கொஞ்சம் பின்புறமாக முன்சிறுகுடலுக்கு இடது பக்கமாக ஒரு மா இலை வடிவத்தில் ஊதா கலரும், மஞ்சள் கலரும் சேர்ந்த ஒரு கலவை நிறத்தில் கணையம் இருக்கும். இது ஒரு தட்டையான நீளமான உறுப்பு. அதுதான் 'கணையம்' (Pancreas). இதன் நீளம் அதிகபட்சமாக 20 செ.மீ. இருக்கும். எடை சுமாராக 100 கிராம் வரை இருக்கும். இது ஒரு கலப்படச் சுரப்பி (Dual Gland).

கணையத்தில் நாளமுள்ள சுரப்பிகளும் உள்ளன. நாளமில்லா சுரப்பிகளும் உள்ளன. இந்த சிறப்பு இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு வெள்ளிகளி கணையத்தால் செய்ய முடிகிறது. நாளமுள்ள சுரப்பிகள், என்சைம்கள் அடங்கிய உணவுச் செரிமான நொதிகளைச் சுரக்கின்றன. இந்தச் செரிமான நொதிகள் கணைய நாளம் வழியாக முன்சிறுகுடலுக்குள் சென்று, கொழுப்பு, புரதம், மாவுப்பொருள் ஆகிய உணவுச்சத்துகள் செரிப்பதற்கு உதவுகின்றன. கணையத்தில் 'லாங்கர்ஹான்ஸ் திட்டுகள்' (Islets Of Langerhans) எனும் சிறப்புத் திசுக்கள் ஆங்காங்கே பரவிக்கிடக்கின்றன. இந்த திசுக்கள் ஆரோக்யமான ஒருவரிடம் சுமார் 10 லட்சம் வரையிலான திட்டுகள் இருக்கும்.

ஒவ்வொரு திட்டிலும் 3000 முதல் 4000 வரையிலான செல்கள் உள்ளன. இந்த செல்கள் ஆல்பா, பீட்டா, டெல்டா என்று 3 வகைப்படும். இவற்றில் பீட்டா செல்கள் இன்சுலினையும், ஆல்பா செல்கள் குளுக்ககான் ஹார்மோனையும், டெல்டா செல்கள் சொமோட்டோஸ்டேடின் ஹார்மோனையும் சுரக்கின்றன. இவை நாளமில்லா சுரப்பிகள் என்பதால், கணையம் சுரக்கின்ற ஹார்மோன்களை ரத்தத்தில் நேரடியாகவே சேர்த்துவிடுகின்றன. இப்படி ஒரே நேரத்தில் இரு வேலைகளைச் செய்கிற உறுப்பு கணையத்தைத்தவிர உடலில் வேறு எந்த உறுப்பும் இல்லை.

கணைய நொதிகள் என்னென்ன வேலை செய்யுது?

கணையம், புரத உணவின் செரிமானத்துக்கு டிரிப்சின், கைமோடிரிப்சின், கார்பாக்சிபெப்டிடேஸ் ஆகிய 3 வித நொதிகளை சுரக்கிறது. டிரிப்சின், கைமோடிரிப்சின் - இரண்டும் உணவிலுள்ள புரத மூலக்கூறுகளை உடைத்து பெப்டைடுகளாக மாற்றுகின்றன. இந்த பெப்டைடுகளை கார்பாக்சிபெப்டிடேஸ் உடைத்து அமினோ அமிலங்களாக மாற்றி ரத்தம் வழியாக கல்லீரலுக்கு அனுப்புகிறது. கணையநீர்ச் சுரப்பியில் அமிலேஸ் எனும் நொதி உள்ளது. இது உணவில் உள்ள ஸ்டார்ச்சை மால்ட்டோஸாக மாற்றுகிறது. லைப்பேஸ் என்னும் நொதி கொழுப்பு உணவை கொழுப்பு அமிலமாகவும் கிளிசரலாகவும் மாற்றுகிறது. இவை அனைத்தும் குடலில் உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் கலக்கின்றன.

இரைப்பையிலிருந்து சிறுகுடலுக்கு வரும் உணவுக்கூழில் உள்ள அமிலத்தன்மையை நீக்கி சரிசெய்ய கணையம் 'பைகார்பனேட் அயனிகளைச் சுரந்து சிறுகுடலுக்கு அனுப்பி வைக்கிறது. இவ்வாறு கணையம் உணவு செரிமானத்தில் முக்கியப் பங்கெடுக்கிறது.

கணையம் பாதிக்கப்படுவது எப்படி?

சிலருக்கு முக்கியமாக குழந்தைகளுக்கு காக்காக்ஸி, மஞ்சள் காமாலை, அம்மைக்கட்டு, ருபெல்லா முதலிய வைரஸ்களில் ஏதாவது ஒன்று கணையத்தை நேரடியாகத் தாக்கும்போது, பீட்டா செல்கள் முழுவதுமாக அழிந்துபோகின்றன. அதனால் இன்சுலின் சுரப்பு அறவே இல்லாமல் நின்று போய்விடுகிறது. இதனால், அவர்களுக்கு டைப் 1 சர்க்கரை நோய் தாக்கும் அபாயம் ஏற்படுகிறது.

பொதுவாகவே உடலில் நோய்கள் வரும்போது, அந்த நோய்களிலிருந்து நம்மைக் பாதுகாப்பதற்காக, ஒரு தற்காப்புப்படை நம் உடலில் செயல்படுகிறது. இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எதிரிகளை இனம் கண்டு, 'எதிர் அணுக்கள்' (Antibodies) எனும் படை வீரர்களை அனுப்பி அந்த எதிரிகளை அழித்து நம்மைப் பாதுகாக்க முயற்சி எடுக்கும். சில வேளைகளில் கணையத் திசுக்களில் உண்டாகிற ஏதேனும் ஒரு பாதிப்புக்காக இவ்வாறு எதிர் அணுக்கள் உருவாகும்போது அவை தவறுதலாக கணையத்தில் உள்ள பீட்டா செல்களையும் எதிரிகளாக நினைத்துத் தாக்கிவிடுகின்றன. இதனால், பீட்டா செல்கள் அழிந்து விடுகின்றன. அந்த சூழலிலும் உடலில் இன்சுலின் அறவே இல்லாமல் போகிறது. இதனாலும் டைப் 1 சர்க்கரை நோய் பாதிப்பு வருகிறது.

பலருக்கு உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்புத்தன்மை, பரம்பரை போன்ற காரணங்களால் டைப் 2 சர்க்கரை நோய் வருகிறது. இவர்களுக்கு இன்சுலின் குறைந்த அளவில் சுரக்கலாம் அல்லது சுரக்கின்ற இன்சுலின் சரிவர வேலை செய்யாமல் இருக்கலாம். முப்பது அவர்களுக்கு வருவது டைப் 2 சர்க்கரை நோய்.

கணைய அழற்சி

கணையத்தில் சுரக்கும் செரிமான நொதிகள் மிகவும் வீரியம் மிக்கவை. கணையத்தின் இயல்பை மீறி கணையத்தில் இவை தேங்குமேயானால், அமிலம் பட்டாற்போல கணையம் அழிந்துபோகும் அளவுக்கு மோசமானவையும்கூட. ஆகவே தான் கணையத்தை மருத்துவத்துறையில் ஒரு எரிமலை என்று சொல்வார்கள். பல நேரங்களில் அமைதியாக,சாதுவாக இருக்கிற கணையம் திடீரென்று எரிமலையாக சீறி எழுந்துவிடும். எனவே, இச்சுரப்பு நொதிகள் கணையத்திலிருந்து உடனுக்குடன் முன்சிறுகுடலுக்கு முறையாக அவ்வப்போது கடத்தப்படவேண்டும். அவ்வாறு முறையான கடத்தல் நிகழ்வு நடக்கவில்லை என்றால் கணையத்துக்கே அது ஆபத்தாக முடிந்துவிடும். அவ்வாறான சில காரணங்களால் கணையம் திடீரென்றோ அல்லது நாள்பட்டோ பாதிக்கப்படலாம். அப்போது கணையம் வீங்கிப் பெருத்துவிடும். பின்னர் சிறிது சிறிதாக அழுகிவிடும். இறுதியாக கணையத்தில் ரத்தப்போக்கு ஏற்படும். அந்த நிலையைதான் `கணைய அழற்சி' (Pancreatitis) என்கிறோம். இது இரண்டு முக்கியமான காரணங்களால் ஏற்படுகிறது. முதல் காரணம் மிகையாக மது அருந்துவது , இரண்டாவது காரணம் பித்தப்பையில் கற்கள் உருவாவது.

அளவுக்கு அதிகமான மது

அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர்களுக்குக் கணையக்குழாயில் ஒருவகை புரதப்பொருள் படிந்து நாளடைவில் அந்தக் குழாயை அடைத்துவிடும். அப்போது கணையத்தில் சுரக்கும் செரிமான நீர்கள் போக்கிடம் இல்லாமல் அங்கேயே தங்கி, கணையத்தின் செல்களை அழித்துவிடும். இதனால் `கணைய அழற்சி' ஏற்படுகிறது. அடுத்து, மதுவானது புரோட்டியேஸ், லைப்பேஸ், அமைலேஸ் ஆகிய என்சைம்களின் உற்பத்தியைக் கூட்டுகிறது.

அதேநேரத்தில் 'ட்ரிப்சின்' எனும் நொதி சுரப்பைக் குறைக்கிறது. இதனாலும் கணையத்தில் அழற்சி ஏற்படுகிறது. இது பெரும்பாலும் ஆண்களுக்கே வருகிறது. 6 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து மது அருந்துபவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கிறது.

பித்தப்பைக் கற்கள்

பித்தப்பையில் கற்கள் உருவாகி பித்தக்குழாயை அடைத்துவிடுமானால், பித்தநீர் மற்றும் கணைய நொதிகள் முன்சிறுகுடலுக்குள் நுழைய முடியாமல், மீண்டும் கணையத்திற்கே திரும்பி வந்துவிடும். அதன் விளைவாக இந்த நொதிகள் கணையத்தின் செல்களை அரித்துவிடுவதால், கணையத்தில் அழற்சி தோன்றும்.

இதர காரணங்கள்

அதிகமாக மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுபவர்களுக்கு அதில் உள்ள 'கிளைக்கோசைட்' எனும் இரசாயனப்பொருள் காரணமாக கணைய அழற்சி ஏற்படுவதுண்டு. அசத்தியோபைரின், தயசைடு, சோடியம் வால்பிரவேட் போன்ற மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, அவற்றின் பின்விளைவாக கணைய அழற்சி ஏற்படலாம். சிறுநீரகம் செயல் இழந்த நிலையில் ரத்தத்தில் யூரியா அளவு அதிகரித்துவிடும். இதனாலும் கணையம் பாதிக்கப்படலாம். பரம்பரைக் கோளாறுகள், புற்றுநோய், ரத்த ஓட்டக் குறைபாடுகள், விஷக்கடிகள் மற்றும் ஒவ்வாமை போன்றவற்றாலும் கணையம் பாதிக்கப்படலாம்.

அறிகுறிகள்

கணையம் பாதிக்கப்பட்டஒருவருக்குக் கடுமையான வயிற்றுவலி ஏற்படும். இந்த வலி மேல் வயிற்றில் ஆரம்பிக்கும். பின்பு முதுகுப் பக்கத்துக்குப் பரவும். சிலருக்குத் தொப்புளைச் சுற்றி வலி இருக்கலாம். முன்பக்கமாக சாய்ந்து உட்கார்ந்தால் வலி சிறிது குறையும். படுத்தால் வலி அதிகரிக்கும். இந்த நோய்க்கு இது ஒரு முக்கிய அறிகுறி. குமட்டல், வாந்தி இருக்கும். வயிறு உப்பும். நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இது. இரைப்பைப் புண் உள்ளவர்களுக்கும் இதே போன்றுதான் வயிற்றுவலி இருக்கும். ஆனால், அவர்களுக்கு வாந்தி எடுத்த பின்னர் வயிற்று வலி குறைந்துவிடும். கணைய அழற்சி உள்ளவர்களுக்கு வாந்தி எடுத்தாலும் வயிற்றுவலி குறையாது. அடுத்து, மஞ்சள் காமாலை ஏற்படும். வயிற்றில் நீர் கோர்த்து வயிறு உப்பும். ரத்த வாந்தி வரும். மலத்தில் ரத்தம் போகும். இறுதியில் `கோமா' எனும் ஆழ்நிலை மயக்கத்துக்கு உள்ளாவார்கள்.

நோய் வகைகள்

1. திடீர் கணைய அழற்சி (Acute Pancreatitis)

இது திடீரென்று தோன்றும். இந்த நோயின் அடிப்படை காரணத்திற்கு சிகிச்சை பெற்றுவிட்டால் நோய் குணமாக வழியுண்டு.

2. நாள்பட்ட கணைய அழற்சி (Chronic Pancreatitis)

சிறிது சிறிதாக கணையம் பாதிக்கப்பட்டு, நாளடைவில் நோய் முற்றிய நிலை இது. இந்த நோயில் கணைய பாதிப்புகள் நிரந்தரமாகிவிடும் என்பதால் நோயைக் குணப்படுத்துவது மிகவும் சிரமம்.

பரிசோதனைகள்

ரத்தத்தில் அமைலேஸ் அளவு அதிகரித்தால் கணைய அழற்சி ஏற்பட்டுள்ளது என்பதை நிர்ணயித்துவிடலாம். இதன் இயல்பு அளவு 80லிருந்து 100 யூனிட். கணைய அழற்சியில் இதன் அளவு 1000 யூனிட்டுகளுக்கு மேல் அதிகரிக்கும். அடுத்து, ரத்தத்தில் லைப்பேஸ் அளவும் அதிகரிக்கும். வயிற்று எக்ஸ்-ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி. ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்றவையும் கணைய அழற்சியை உறுதி செய்ய உதவும்.

சிகிச்சை முறைகள்

கணைய அழற்சியை ஆரம்ப நிலையிலேயே கவனித்து விட்டால் மருந்துகள் மூலமே குணப்படுத்தி விடலாம். கணையம் அழுகி விட்டாலோ அல்லது அதில் ரத்தப்போக்கு ஏற்பட்டு விட்டாலோ அறுவை சிகிச்சை தேவைப்படும்.

கணையப் புற்றுநோய்

அதிகமாக மது அருந்துதல் மற்றும் புகைப்பழக்கம் காரணமாக கணையத்தில் புற்றுநோய் ஏற்படவும் அதிக வாய்ப்புண்டு. இதன் அறிகுறிகளும் கணைய அழற்சிக்குரிய அறிகுறிகளும் ஏறக்குறைய ஒன்றுபோலவே இருக்கும். இது ஒரு கொடுமையான புற்றுநோய். மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை கதிர்வீச்சு சிகிச்சை என்று எதற்கும் கட்டுப்படாது. நோயாளி சீக்கிரத்தில் உயிரிழப்பது உறுதி. இந்தப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 3 சதவிகிதம் பேர்தான் நோய் தாக்கிய பின்பு 5 ஆண்டுகள் வரை உயிரோடு இருந்திருக்கிறார்கள்.

உடல் பருமனைக் கட்டுப்படுத்துதல்

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு இன்சுலின் தேவை அதிகரிக்கிறது. கணையம் நிறைய இன்சுலினை சுரந்து சுரந்து நாளடைவில் களைத்துவிடுகிறது. இதன் விளைவாக, கணையத்தில் இன்சுலின் சுரப்பே இல்லாமல் போகிறது. இதன் காரணமாக இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வந்துவிடுகிறது.

கணையத்தைக் காப்பது எப்படி?

1. மது அருந்துவதை அறவே தவிர்த்தல்.

2. பித்தப்பையில் கற்கள் உருவானால் உடனே அறுவை சிகிச்சை செய்து கொள்ளல்.

3. மஞ்சள் காமாலை, அம்மைக்கட்டு, ருபெல்லா நோய்களுக்கு குழந்தைப் பருவத்திலேயே தடுப்பூசி போட்டுக்கொள்ளல்.

4. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துக்கடைகளில் மருந்து, மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவதை நிறுத்துதல்.

5. புகையில் வாட்டி தயாரிக்கப்படுகின்ற உணவுகளை ஒதுக்குதல்.

6. கலப்பட எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தாமல் இருத்தல்.

7. ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தாமல் இருத்தல்.

8. நாற்பது வயதுக்கு மேல் உள்ளவர்கள் கொழுப்புணவுகளைக் குறைத்துக் கொள்ளல்.

9. புகை பிடிப்பதை தவிர்த்தல்.

10. பழங்கள், காய்கறிகள் நிறைந்த ஆரோக்கிய உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுதல்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story