இதயத்தில் அடைப்பு ஏற்படாமல் தடுக்க செய்ய வேண்டியது என்ன?
கோப்புப்படம்
சமீப காலமாக உலகளவில் இதய நோயால் நிறைய பேர் இறந்து வருகிறார்கள். இப்படி இதய நோயால் மக்கள் இறப்பதற்கு காரணம் தற்போதைய மோசமான உணவுப் பழக்கமும், வாழ்க்கை முறையும் தான். குறிப்பாக ஜங்க் உணவுகள் எங்கும் இருப்பதோடு, அதன் சுவை மக்களை அடிமையாக்கி, அடிக்கடி வாங்கி சாப்பிட வைக்கிறது.
இந்த ஜங்க் உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளன. இந்த கொலஸ்ட்ராலை தினமும் எடுக்கும் போது, அது இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்தி, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற உயிரைப் பறிக்கும் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
நமது பாரம்பரிய இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் இதயத்தை நல்ல வடிவில் வைத்துக் கொள்ளவும் உதவும் பல்வேறு ஆயுர்வேத பானங்கள் உள்ளன. ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் பானங்களை குடித்து வந்தால், இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்கள் சுத்தமாக இருப்பதோடு, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றின் அபாயமும் குறையும். கீழே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில ஆயுர்வேத பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
எலுமிச்சை நீர்: காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி உடலினுள் உள்ள வீக்கத்தைக் குறைப்பதோடு, உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும்.
அதோடு உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்த கட்டிகள் உருவாவதைத் தடுக்கும். எனவே நீங்கள் இதயத்தில் அடைப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க வேண்டுமென விரும்பினால், காலையில் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக, எலுமிச்சை நீரைக் குடித்து வாருங்கள்.
அர்ஜுனா மர பட்டை டீ: இதயம் தொடர்பான எந்த பிரச்சனையும் வரக்கூடாதெனில், ஒரு டம்ளர் அர்ஜுனா மரப்பட்டை டீயை குடித்து வாருங்கள். ஏனெனில் இந்த மரப்பட்டையில் இதயத்திற்கு நன்மை விளைவிக்கும் ஏராளமான சத்துக்கள் உள்ளன.
இந்த டீயை தயாரிப்பதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் அர்ஜுனா மரப்பட்டை பொடியை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி சூடாக குடிக்க வேண்டும். இப்படி குடித்து வந்தால், இதய தசைகள் வலுவடையும், இரத்த ஓட்டம் மேம்படும் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும்.
இஞ்சி மற்றும் மஞ்சள் டீ: ஆயுர்வேதத்தில் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க இஞ்சி மற்றும் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இவ்விரண்டிலும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. இப்படிப்பட்ட இஞ்சி மற்றும் மஞ்சளைக் கொண்டு டீ தயாரித்து குடிக்கும் போது, இதய ஆரோக்கியம் மேம்படும்.
அதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி, அதில் இஞ்சியை துருவிப் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து 5-10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இந்த டீயை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம், இரத்தக் குழாய்களில் உள்ள வீக்கம் குறைவதோடு, கொழுப்புக்கள் படிவதும் தடுக்கப்படும்.
நெல்லிக்காய் ஜூஸ்: நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. இந்த நெல்லிக்காயை அரைத்து வடிகட்டி, ஜூஸ் எடுத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், இதய தசைகள் வலுவடையும், இரத்த ஓட்டம் மேம்படும் மற்றும் உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறையும்.
பீட்ரூட் ஜூஸ்: பீட்ரூட்டில் இரத்த நாளங்களை தளர்த்தவும், விரிவுபடுத்தவும் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும் நைட்ரேட்டுகள் காணப்படுகின்றன. இந்த பீட்ரூட்டை அரைத்து சாறு எடுத்து, காலையில் குடித்து வந்தால், அது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu