சினிமா ஆர்வத்தில் உதயநிதி ஸ்டாலின்; ஏமாற்றத்தில் புலம்பும் திமுகவினர்

சினிமா ஆர்வத்தில் உதயநிதி ஸ்டாலின்; ஏமாற்றத்தில் புலம்பும் திமுகவினர்
X

சினிமாவை ஒதுக்கி விட்டு அரசியலில், முழு தீவிரம் காட்டுவாரா உதயநிதி ஸ்டாலின்? 

தந்தை ஸ்டாலின் தமிழக முதல்வராக ஆட்சி செய்யும் நிலையில், அரசியல் வாரிசான உதயநிதி ஆட்சி, அதிகாரத்தில் ஆர்வமின்றி சினிமாவில், முழு கவனத்தை செலுத்துவது திமுக வினரை புலம்ப வைத்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடிப்பதிலும், திரைப்படங்களை விநியோகம் செய்வதிலும் காட்டும் ஆர்வத்தை அரசியலும், ஆட்சி. நிர்வாகத்திலும் செலுத்த வேண்டும் என திமுகவினர் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ் சினிமாவில் கதாநாயகர்களில் ஒருவராக திகழும் உதயநிதி ஸ்டாலின், 'ரெட் ஜெயிண்ட் மூவிஸ்' என்னும் சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் உதயநிதி உள்ளிட்டோர் நடிக்கும் படங்களை தயாரிப்பதோடு மட்டுமின்றி, பிற நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களை விநியோகிக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறது.


நடிகர், தயாரிப்பாளர், லிநியோகிஸ்தர் என திரைத்துறையில் பன்முகத்துடன் இயங்கிவரும் உதயநிதி ஸ்டாலின், சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவாகவும் அரசியலில் தனது பங்களிப்பை செலுத்தி வருகிறார். நேற்று, அவர் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவரை அமைச்சராக்க வேண்டும் என, திமுக அமைச்சர் மா.சுப்ரமணியன் கருத்து தெரிவித்திருந்தார்.

நடிப்பு, அரசியல், சினிமா பட விநியோகம் என பம்பரமாய் சுழன்றுவரும் உதயநிதி, ஒப்பீட்டளவில் அரசியலைவிட சினிமாவில்தான் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டும், திமுகவின் எதிர்காலமே... வருங்கால முதல்வரே... என்றெல்லாம் உதயநிதியை உடன்பிறப்புகள் எதிர்பார்த்துவரும் நிலையில், அதற்கான தகுதியை அவர் நாளுக்கு நாள் வளர்த்து கொள்ளாமல், அதைவிடுத்து அவர் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்துவது சரியான அணுகுமுறை இல்லை என்ற கருத்து திமுக வினரிடையே பரவலாக எழுந்துள்ளது.

மேலும் உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயிண்ட் மூவிஸ்', பிற தயாரிப்பு நிறுவனங்களின் திரைப்படங்களின் விநியோக உரிமையை வாங்கி வெளியிடுவது திரைத்துறையை பொறுத்தவரை சரியாக இருக்கலாம் . திமுகவி்ன் கையி்ல் ஆட்சி, அதிகாரம் இருப்பதால் அக்கட்சியை சேர்ந்த முக்கிய நபரான உதயநிதிக்கு சொந்தமான நிறுவனம் திரைப்படங்களை வெளியிடும்போது, சினிமா விநியோகமும். அதுசார்ந்த வணிகமும் எந்தவித பிரச்னையும் இன்றி நடைபெறும் என்பது ஒருவிதத்தில் உண்மைதான்.


ஆனால், திமுகவின் எதிர்காலமே... வருங்கால முதல்வரே... என்றெல்லாம் உடன்பிறப்புகளால் எதிர்பார்க்கப்படும் உதயநிதி ஸ்டாலினின், திரைத்துறை மீதான ஆர்வம், அரசியல்ரீதியாக திமுக வினருக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இனி அவர் சினிமா துறையின் மீதான ஆர்வத்தை குறைத்துக் கொண்டு, ஒரு முதல்வராகவும், கட்சித் தலைவராகவும் ஸ்டாலின் எப்படி செயல்படுகிறார், மழை, வெள்ளம், கோவை குண்டுவெடிப்பு சம்பவம் என்று ஒவ்வொரு பிரச்னையையும் அவர் எவ்வாறு எதிர்கொள்கிறார்; எவ்வாறு சமாளிக்கின்றார் என்பதையெல்லாம் அவர் அருகில் இருந்து பார்த்து நிறைய அரசியல் பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், ஸ்டாலின் வாரிசாக அரசியல்வாதியாக, திமுக இளைஞரணி தலைவராக, கட்சி எம்எல்ஏ வாக இருக்கும் உதயநிதிதான், எதிர்காலத்தில் திமுக தலைவராக, தமிழக மக்களின் ஆதரவால் இதே வெற்றி திமுகவுக்கு நிலைத்தால், எதிர்காலத்தில் தமிழக முதல்வராகவும் ஆட்சி செய்ய உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு உள்ளது.


இத்தகைய சூழலில், சினிமா ஆர்வத்தை குறைத்துக்கொண்டு அரசியலில் தீவிர கவனம் செலுத்த உதயநிதி முன்வர வேண்டும். இதற்கு ஸ்டாலின் உள்பட, மூத்த அமைச்சர்களும், மூத்த கட்சி நிர்வாகிகளும் அறிவுறுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு திமுக வினரிடையே அதிகரித்து வருகிறது.

அதுமட்டுமின்றி சினிமாவில் உதயநிதி, பல நடிகைகளுடன் நடிப்பதை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள், மேடைகளில் இழிவாக பேசி கமெண்ட் செய்வதும் திமுக வினருக்கு, அதிருப்தியை ஏற்படுத்துகிறது. தவிர, அரசியல் வாரிசான உதயநிதி, அடுத்தடுத்த படங்களில் நடிப்பதை இலக்காக கொண்டிருப்பது, அரசியலில் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு அவர் ஆர்வம் காட்டாததையே வெளிப்படுத்துகிறது எனவும் திமுக வினர் புலம்பி வருகின்றனர்.

Next Story