களத்தில் குதித்தது தி.மு.க.,- பூத் கமிட்டி பணிகள் விறுவிறு

களத்தில் குதித்தது தி.மு.க.,- பூத் கமிட்டி பணிகள் விறுவிறு
X

பாஜக வை வளரவிட்டால், திமுகவுக்கு ஆபத்து- தேர்தல் வியூகத்தில் ஸ்டாலின் அதிரடி.

DMK Tamil News -லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில், தி.மு.க., இப்போதே பூத் கமிட்டி அமைத்து வருகிறது.

DMK Tamil News -'ஸ்டாலின் தான் வராரு... விடியல் தரப்போறாரு...' என்ற ஸ்டைல் கோஷத்துடன், ஆட்சியை கைப்பற்றிய முதல்வர் ஸ்டாலின், இதுவரை நிர்வாக ரீதியாக எந்த தவறும் செய்யவில்லை. மிகவும் மதிநுட்பம் நிறைந்த ஆட்சியை தான் வழங்கி வருகிறார். ஆனால் தி.மு.க.,வின் சில அமைச்சர்கள், பேச்சாளர்கள், முக்கிய நிர்வாகிகளின் செயல்பாடுகளை சமூக ஊடகங்களில் 'கிழிகிழி'யென கிழிக்கின்றனர். இதனால் மனம் உடைந்த முதல்வர் ஸ்டாலினே... 'தினம் எந்த வம்பு வந்து சேருமா? என்ற அச்சத்துடன் உறங்கச் செல்வதால்...துாக்கம் வரவில்லை... என் உடம்பே மெலிந்து விட்டது. உங்களை மூன்றாவது கண் கண்காணித்துக் கொண்டுள்ளது. கவனமாக நடந்து கொள்ளுங்கள்,' என்று கட்சியினருக்கு சொன்ன அறிவுரையைக்கூட யாரும் பின்பற்றியதாக தெரியவில்லை.

இந்நிலையில், எதிர்கட்சியான அ.தி.மு.க., இருக்கிறதா? இல்லையா? என்ற நிலை தான் தமிழகத்தில் உள்ளது. ஆனால் எதிர்பாராத சூறாவளியாக பா.ஜ., உருவெடுத்துள்ளது. தினம், தினம் அண்ணாமலை கொடுக்கும் குடைச்சல், தி.மு.க., அரசை கலகலக்க வைக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

வெறும் நான்கு எம்.எல்.ஏ.,க்களை மட்டும் வைத்துக் கொண்டு, இவ்வளவு குடைச்சல் கொடுக்கும் பா.ஜ., லோக்சபா தேர்தலில் சில சீட்டுகளை கைப்பற்றி வி்ட்டால், தீராத தலைவலி உருவாகி விடும் என தி.மு.க., கருதுகிறது. அந்த கட்சி நினைப்பதிலும் ஒரு நியாயம் உள்ளது. பா.ஜ.,வின் வளர்ச்சி, தி.மு.க.,விற்கு மிகப்பெரிய நெருக்கடியை தரும்.

தற்போதைய சூழலில், வரும் லோக்சபா தேர்தலில் சில தொகுதிகளையாவது கைப்பற்ற வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் குறைந்தபட்சம் எதிர்கட்சி அந்தஸ்த்தையாவது கைப்பற்ற வேண்டும் என பா.ஜ., திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. பா.ஜ.,விற்கு எதிராக இன்று களத்தில் நிற்கும் ஒரே கட்சி தி.மு.க., மட்டுமே. எனவே லோக்சபா தேர்தல் களத்தில், பா.ஜ.,வை சைபர் என்ற நிலைக்கு தள்ளினால் மட்டுமே தி.மு.க., நிம்மதியாக ஆட்சி நடத்த முடியும் என்ற நிலை தமிழகத்தில் உள்ளது என்பதை அக்கட்சி தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தெளிவாகவே புரிந்து வைத்துள்ளார்.

இதனால் தேர்தல் வேலைகளை, இப்போதே தொடங்க திட்டமிட்டுள்ளார். இதன் முதல் பணியாக உள்கட்சி தேர்தல் முடிந்து புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றதும், அவர்களுக்கு முதல் பணியினை வழங்கி விட்டார். தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள் வாரியாக வார்டு தோறும் பூத்கமிட்டி அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

தற்போது பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு பூத் கமிட்டிக்கும், ஒரு ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்படுகிறார். இந்த ஒருங்கிணைப்பாளர்களை கொண்ட ஒரு குழு உருவாக்கப்படுகிறது. இக்குழுவிற்கு தலைமைப்பொறுப்பாளர் நியமிக்கப்படுகிறார். இப்படி இதன் வட்டம் விரிவடைந்து கொண்டே செல்வதோடு, ஒரு நேர்த்தியான தொடர்பு கொண்ட தகவல் தொடர்பு செயின் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னரே, இவர்களுக்கான பணிகள் வழங்கப்படும். செய்யும் பணிகளுக்கு ஏற்ற வகையில், பலனும் கிடைக்கும் என்ற உத்தரவாதமும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆக பா.ஜ.,வை தலையெடுக்க விடக்கூடாது என தி.மு.க.,வும், தி.மு.க.,வை வீழ்த்தி சில தொகுதிகளை கைப்பற்றியே ஆக வேண்டும் என பா.ஜ.,வும் வரிந்து கட்டி களம் இறங்கி உள்ளதால், இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையிலேயே கூட லோக்சபா தேர்தல் பரபரப்பு தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பு நாளுக்கு நாள் வலுவடைந்து வரும். அரசியல் களம் தொடர்ச்சியாக களை கட்டும் என்பது மட்டும் உறுதி.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!