/* */

மதுரை தி.மு.க.வில் முட்டல், மோதல்:அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆவேச பேச்சு

மதுரை தி.மு.க.நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விருந்தை மூத்த நிர்வாகிகள் புறக்கணித்தனர். அந்த விருந்தில் அமைச்சர் ஆவேசமாக பேசினார்.

HIGHLIGHTS

தி.மு.க.வில் எப்போதும் மதுரை மாவட்டம் கட்சி தலைமைக்கு பெரும் சவாலாகவும், தலைவலியாகவும் இருக்கும். கருணாநிதி உயிரோடு இருந்த போதே இதே நிலைதான். இருபது ஆண்டுகளுக்கு முன்பு எல்லாம் கருணாநிதி மகன் அழகிரி மதுரை மாவட்ட தி.மு.க.வை தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார். அப்போது அவருக்கும் மறைந்த சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனுக்கும் இடையே தான் மோதல் இருக்கும். இடையில் தற்போது தி.மு.க.சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினராக இருக்கும் பொன்.முத்துராமலிங்கத்துக்கும் அழகிரிக்கும் இடையே அரசியல் மோதல் இருந்தது. அதனால் பொன்.முத்துராமலிங்கம், கருணாநிதி உயிரோடு இருந்த போதே தி.மு.க.வில் இருந்து விலகி வைகோ தனியாக ம.தி.மு.க.தொடங்கியபோது அதில் இணைந்தார்.

பின்னர் பொன்.முத்துராமலிங்கம் ம.தி.மு.க.வில் இருந்து விலகி மீண்டும் தி.மு.க.வில் இணைந்தார். தற்போது அவர் தி.மு.க. சொத்து பாதுகாப்பு உறுப்பினராக இருக்கிறார். மதுரை மாவட்ட தி.மு.க. கோஷ்டி மோதல் பிரச்னையில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்டார். இதில் அழகிரி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்தது. பின்னர் அந்த வழக்கில் அனைவரும் விடுதலை ஆனார்கள். இடையில் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் மறைவுக்கு பின் சில ஆண்டுகள் கழித்து அவர் மகனும் தற்போதைய நிதி அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் அரசியலுக்கு வந்தார். அவருக்கு தி.மு.க. ஐடி பிரிவில் பதவியை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலில் அழகிரியும் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். அழகிரி இப்போது அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருக்கிறார். தற்போது மதுரை மாவட்ட தி.மு.க.வில் தொடர்ந்து கோஷ்டி மோதல் நீடித்து வருகிறது. கட்சிக்கு திடீர் என்று வந்து எம்.எல்.ஏ. ஆகி தற்போது நிதி அமைச்சராக பழனிவேல் தியாகராஜன் வளர்ந்து இருப்பது ஏற்கனவே பல காலமாக தி.மு.க.வில் இருக்கும் மூத்த நிர்வாகிகளால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. குறிப்பாக பொன்.முத்துராமலிங்கம், மாவட்டச் செயலாளர்கள் தளபதி, மணிமாறன், அமைச்சர் மூர்த்தி ஆகியோர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக அணி திரண்டு உள்ளனர் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த மோதல் அவ்வப்போது கட்சி கூட்டங்களில் பகிரங்கமாக எதிரொலிக்கும். ஆனால் முதல்வர் ஸ்டாலின் ஆதரவு இருப்பதால் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எதிர் அணியினரை சமாளித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் மூர்த்தி தனது மகன் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தி, பெரிய விருந்து வைத்தார் என்று தமிழகம் முழுவதும் பேசப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வியாழக்கிழமை அன்று நடத்திய பிரியாணி விருந்தும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க. தலைவராக 2-வது முறையாக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று இருப்பதை கொண்டாடும் வகையில் மதுரை மடீட்சியா அரங்கில் பிரியாணி விருந்து நடந்தது. இந்த விருந்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஏற்பாடு செய்து இருந்தார். அவர் விருந்து ஏற்பாடு செய்தது மதுரை மாவட்ட தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு பிடிக்க வில்லை.அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் மாவட்ட நிர்வாகிகளுக்கும் இருந்த முட்டல், மோதல் இந்த விருந்திலும் எதிரொலித்தது. அமைச்சர் மூர்த்தி, பொன்.முத்துராமலிங்கம், மாவட்ட செயலாளர்கள்தளபதி, மணிமாறன் உள்பட பலர் இந்த விருந்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். கட்சி நிர்வாகிகள் யாரும் இந்த விருந்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று ரகசியமாக அவர்கள் உத்தரவும் பிறப்பித்து இருந்தாகவும் கூறப்படுகிறது. இதனால் கட்சி நிர்வாகிகளும் விருந்தை புறக்கணித்தனர்

இதனால் இந்த விருந்து நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆவேசமாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சரிடம் அனுமதி பெற்று தான் இந்த விருந்தை நடத்துகிறேன். கடந்த சில நாட்களாக மதுரையில் கட்சியில் கிடைக்கும் தகவல்கள் எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. சிலர் இந்த விருந்தை தாங்களும் புறக்கணித்து விட்டு, மற்றவர்களையும் கலந்து கொள்ளக்கூடாது என்று மிரட்டுகிறார்கள். இதற்கு நான் கவலைப்பட போவதில்லை. பிறப்பினால், வாய்ப்பினால், கல்வியினால், அனுபவத்தினால், உழைப்பினால், திறமையினால் நான் உலக அளவில் பல முக்கியமான பொறுப்புகளில் அனுபவம் பெற்றவன். அதனால், யாருக்கும் நான் சும்மா ஜால்ரா அடிக்க மாட்டேன். என்றைக்குமே சுய மரியாதையை நான் இழக்கவே மாட்டேன்.

செய் நன்றி மறந்தவர்களுக்கு என்றாவது ஒரு நாள் வீழ்ச்சி ஏற்படும். அரசியல், பொதுவாழ்வை விட்டு நான் விலகும் வரை, என்றைக்கும் அவரை போய் பார்க்காதே, அந்த நிகழ்ச்சிக்கு போகாதே, அவர் பெயரை போடாதே என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் நான் பெரிய மனிதன். எனக்கு இது எல்லாம் தேவையில்லை. எனது தந்தை பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் மறைந்தபோது, என்னை தலைவர் கருணாநிதி அழைத்து, என்னுடன் நீ இருக்க வேண்டும் என்றார். ஆனால் அந்த சூழ்நிலையில் அவரது அழைப்பை என்னால் ஏற்க முடியவில்லை. அன்றைக்கு நான் அவருடன் இருந்திருந்தால் அமைச்சர் வாய்ப்பு அப்போதே வந்து இருக்கும். ஆனால் அந்த வாய்ப்பை நான் வேண்டாம் என்றேன். எத்தனை பேர் அமைச்சர் பொறுப்பை வேண்டாம் என்று கூறுவார்கள்?. நான் யாருடனும் போட்டியிடும் ஆள் இல்லை. நான் தனிப்பாதையில் சென்று கொண்டு இருக்கிறேன். இது எனக்கு போதும். இதற்கு மேல் நான் கீழ் இடத்திற்கு இறங்க முடியாது. நான் பெரிய மனிதராக இருக்க ஆசைப்படுகிறேன்இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆவேசமாக பேசியது தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பாக இருந்தது. இந்த கூட்டம் பற்றியும் அதில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய கருத்து பற்றியும் கட்சி தலைமையிடம் புகார் செய்ய எதிர் அணியை சேர்ந்த சிலர் சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக மதுரையில் கட்சியினர் பேசிக்கொள்கிறார்கள்.

Updated On: 14 Oct 2022 2:46 PM GMT

Related News

Latest News

 1. கோவை மாநகர்
  கோவையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து லாரி சேதம்
 2. லைஃப்ஸ்டைல்
  தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறும் மேற்கோள்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  தமிழில் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்லும் அழகியல்
 4. லைஃப்ஸ்டைல்
  வயசு மேல வயசு வந்து வாழ்த்துகிற நேரமிது..!
 5. லைஃப்ஸ்டைல்
  கவிதை அலங்காரத்தில் அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 6. ஈரோடு
  டி.என்.பாளையம் வனச்சரகத்தில் நாளை யானைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
 7. குமாரபாளையம்
  சாலை விபத்தில் இளைஞர் பலி : உடல் உறுப்புக்கள் தானம்..!
 8. வீடியோ
  Opening - Mass Entry செம்ம Vibe-ஆ இருக்கு !#saamaniyan...
 9. ஈரோடு
  சத்தியமங்கலம்: கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1,300 கிலோ ரேஷன் அரிசி...
 10. வீடியோ
  Ramarajan,Ilaiyaraaja Combination -னே Blockbuster தான் !#ramarajan...