வாரிசு சான்றிதழுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது

வாரிசு சான்றிதழுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது
X

கைது செய்யப்பட்ட விஏஓ செந்தில் குமார்.

வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் தாளக்குடியை சேர்ந்த நாராயணசாமி என்பவரது மகன் ரத்தினகுமார் (வயது 40.) இவரது மனைவி தேவி. தேவியின் தகப்பனார் (மாமனார்) ரவிச்சந்திரன் என்பவர் கடந்த 2002 ஆம் ஆண்டு காலமாகியுள்ளார். அவரது பெயரில் உள்ள சொத்துக்களை விற்பதற்காக ரவிச்சந்திரன் வாரிசு சான்றிதழ் வேண்டி திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 22.8.2024 அன்று விண்ணப்பம்செய்துள்ளார்.

காலமான ரவிச்சந்திரன் வசித்த திருச்சி பீமநகர் பகுதிக்கு உண்டான கோ. அபிஷேகபுரம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்திற்கு இவரது விண்ணப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது. ஒரு வாரம் ஆகியும் எந்த தகவலும் கிடைக்கப் பெறாதால் ரத்தினகுமார் நேற்று 28 8 2024 மதியம் ஒரு மணி அளவில் கோ.அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலகம் சென்று அங்கே இருந்த விஏஓ செந்தில்குமாரை (வயது 50) சந்தித்து தனது விண்ணப்பத்தின் நிலை குறித்து கேட்டுள்ளார்.

அதற்கு விஏஓ செந்தில் குமார் வாரிசு சான்றிதழ் கிடைப்பதற்கு தனக்கும் தனது உயர் அலுவலர்களுக்கும் சேர்த்து மொத்தம் 15000 ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் பெற்று தருவதாக கூறியுள்ளார். ரத்தினகுமார் தன்னால் அவ்வளவு பணம் தர இயலாது என்று கூறிய காரணத்தால்,விஏஓ செந்தில்குமார் உங்களது மனுவை மேல் நடவடிக்கைக்கு அனுப்பி விடுகிறேன் அதற்காக எனக்கு மட்டும் தனியாக 3000 கொடுத்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ரத்தினகுமார் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் அலுவலகத்தில் டிஎஸ்பி மணிகண்டனிடம் அளித்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரத்தினகுமாருக்கு அளித்த ஆலோசனையின் படி இன்று 29 8 2024 மதியம் 12 மணியளவில் ரத்தினகுமார் செந்தில் குமாரிடம் இருந்து 3000 ரூபாய் லஞ்சம் பெற்ற போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன், காவல் ஆய்வாளர்கள் சேவியர் ராணி , பிரசன்ன வெங்கடேஷ் ,பாலமுருகன் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார்.

விஏஓ செந்தில்குமார் முதலில் 15,000 கேட்டது தொடர்பான மேல் விசாரணையை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அருகில் உள்ள வட்டாட்சியர் மேற்கு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தினர். இதில் தாசில்தார் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story