திருச்சி பிரணவ் ஜுவல்லரி நகை கடை ரூ.100 கோடி மோசடி கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருச்சியில் ரூ.100 கோடி மோசடி செய்த பிரணவ் ஜுவல்லரி நகை கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வாடிக்கையாளர்கள் (பைல் படம்)
திருச்சி பிரணவ் ஜுவல்லரி நகை கடை மோசடியை கண்டித்து அக்டோபர் ௨௬ம்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரணவ் ஜுவல்லரி என்ற நகைக் கடை தமிழகம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் கிளைகளை உருவாக்கி கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் டெபாசிட்டுகளுக்குகூடுதல் வட்டி தருவதாகவும் ரூ 5 லட்சம் செலுத்தினால் 24% வட்டியாக மாதம் ரூ. 10,000 தருவதாகவும் பழைய நகைகளை டெபாசிட் செய்தால் ஒரு ஆண்டிற்கு பிறகு சேதாரம் செய்கூலி இல்லாமல் புதிய நகை தருவதாகவும் தினம் ரூ 150 நகைசீட்டு கட்டினால் ஆண்டு இறுதியில் 1 பவுன் (8 கிராம்) தங்கம் தருவதாகவும் கடைஊழியர்களை வைத்து சாதாரண ஆட்டோ தொழிலாளர்கள் சுமை தூக்கும் தொழிலாளர்கள் என ஏழை மக்களிடம் ஆசை வார்த்தைகளை கூறிவசூல் செய்தது.
இதனை உண்மை என நம்பி கட்டிய பணம், நகைகளை திருப்பித் தராமல் மேற்கண்ட கடைகளை இழுத்து மூடியுள்ளார்கள். தமிழகம் முழுவதும் இது போன்று 10,000 க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் ரூபாய் 100 கோடிக்கும் மேல் இது போல் மோசடி செய்திருக்கிறார்கள். பணத்தை இழந்த பொதுமக்கள் செய்வதறியாது திண்டாடி கொண்டிருக்கிறார்கள்
இது போன்ற மோசடியான நிதி நிறுவனங்கள் சமீப காலங்களில் புற்றீசல் போல் பெறுகி வருகின்றன. எல்பின்,ஆருத்ரா, நியு மேக்ஸ் , போன்ற நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி மக்கள் பணத்தை சூறையாடிவிட்டன. முதலில் கவர்ச்சிகரமான கூடுதல் வட்டி தருவதாக விளம்பரங்களை செய்வது. பிரபலமான நடிகர், நடிகைகளை வைத்து, தொலைகாட்சி, பத்திரிகைகளில் விளம்பரம் செய்வது முக்கிய சில பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள், முக்கிய அரசு அதிகாரிகள் போன்றவர்களை முன் நிறுத்தி இவர்கள் தங்களது மோசடி திட்டத்திற்கு பயன்படுத்தி கொள்வதும் தங்களது முதலீட்டில் ஒரு பகுதியை இதற்கென செலவு செய்து ஆசையை மக்களிடம் தூண்டி வலை விரித்து வைப்பார்கள். அதில் சாதாரண மக்கள் பலர் சிக்கி தங்களது சொத்தையெல்லாம் இழந்து நடுத்தெருவிற்கு வரும் நிலையை உருவாக்கி விடுகிறார்கள்.
இது போன்ற நிதி நிறுவன மோசடிகளை முன்கூட்டியே தடுப்பதற்கு அரசு, காவல் துறையிடம் எந்த முன்னேற்பாடுமில்லை. நிதி மோசடி நடந்து முடிந்த பின்பு ஏமாந்தவர்களுக்கு அறிவுரை சொல்வதும், பொருளாதார குற்ற பிரிவில் புகார் பெற்று அதன் பேரில் மோசடி நிறுவத்தின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பதும், சிறிது காலத்திலேயே பிணையில் வெளியே வருதும் தொடர் கதையாகிறது. இதில் நேரிடையாக மோசடி நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் சொத்துக்களே கைப்பற்றப்படுகிறது இது மொத்த தொகையில் 15% தான். இவர்கள் பினாமிகள் பெயரில் வைத்திருக்கும் சொத்துக்களை காவல்துறையின் புலனாய்வு கணக்கில் எடுப்பதில்லை.
மேலும் ஒன்றிய அரசின் "மத்திய ரிசர்வ் வங்கியின் "நிதி கையாளும் சட்டத்திற்குட்பட்டு பல சீட்டு கம்பெனிகள், நிதி நிறுவனங்கள் இயங்குவதில்லை குறிப்பாக Deposit insurance and Crdit gerantee carparation (Dic gc) ல் அனைத்து நிதி நிறுவனங்களும் பெறப்படும் டெபாசிட்டுகளை காப்பீடு செய்ய வேண்டும் என நிதிகையாளுதல் ஒழுங்கு முறைச் சட்டம் சொல்கிறதுஆனால் அரசு காவல்துறை இது போன்று எந்த கண்காணிப்பும் செய்வதாக தெரியவில்லை.
இன்றைக்கும் பல நகைக்கடைகள், சீட்டு கம்பெனிகள் ,MLM நிறுவனங்கள் பலவகைகளில் மக்களிடம் டெபாசிட் தொகைகளை எந்த வரைமுறையும் இன்றி வசூல் செய்து வருகிறார்கள்.
தமிழக அரசு,காவல்துறை இவைகளை கண்காணிக்க வேண்டும் , விசாரனை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் தமிழக அரசு இதற்கென தனிச்சட்டத்தை இயற்ற வேண்டும்.
பிரணவ் ஜுவல்லரி நிறுவனத்திடம் பணம் கட்டியும், நகைகளை கொடுத்தும் ஏமாற்றப்பட்ட மக்களுக்கு இழந்தவற்றை மீட்டு தர மாவட்ட நிர்வாகம் , காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனகோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டக் குழுவின் சார்பில் வருகின்ற 26/10/2023 காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu