தமிழ்நாட்டில் ஆன் லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல்
ஆன்லைன் சூதாட்டம்.கோப்பு படம்.
தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி ஒரு பக்கம் பல ஆக்கப்பூர்வமான பலன்களை தந்தாலும் மறு பக்கம் மக்களை வீழ்ச்சி பாதைக்கு அழைத்து செல்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் ஒன்று தான் ஆன்லைன் சூதாட்டம். இணைய தளங்களில் ஆன்லைன் சூதாட்டம் பரவிக் கிடக்கிறது.போதைப் பொருட்கள் போன்று தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆன்லைன் சூதாட்டம் ஆட்டிப் படைக்கிறது.இந்த சூதாட்டம் 2014-ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது.இந்த சூதாட்டத்தில் பணத்தை இழந்து நூற்றுக்கணக்கானோர் தற்கொலை செய்து உயிரை விட்டுள்ளனர்.சிலர் பணத்தேவைக்காக குற்றவாளிகளாக மாறி விட்டனர்.
செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப்களில் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடுகிறார்கள்.முதலில் விளையாடத் தொடங்கியதும் சிறிய அளவு பணம் கிடைக்கும்.அடுத்து மேலும் பணம் கிடைக்கும் என்ற ஆசையில் தொடர்ந்து விளையாடும் போது பணம் முழுவதும் பறிக்கப்படும். இழந்த பணத்தை மீட்க வேண்டும் என்று சிலர் வெறி கொண்டு விளையாடுவார்கள். அப்படி பட்டவர்கள் பல லட்சம் ரூபாயை இழந்து நடுத்தெருவுக்கு வந்து விடுவார்கள்.இதனால் அவர்கள் இறுதியில் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். சிலர் திருட்டு போன்ற குற்றச்செயல்களில் இறங்கிவிடுகிறார்கள்.தமிழகத்தில் பல குடும்பங்கள் ஆன்லைன் சூதாட்டத்தால் நாசமாக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் சூதாட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் மக்கள் மத்தியில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்ற கருத்து வலுபெற்றது. அதோடு நிறைய பொது நல வழக்குகளும் கோர்டில் தொடரப்பட்டன. அரசியல் கட்சியினரும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைவிடுத்தனர். இந்த நிலையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 2021 பிப்ரவரியில் சட்டமன்றத்திலும் தடை சட்டம் இயற்றப்பட்டது.ஆனால் இந்ததடைச் சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த தடைச்சட்டம் செல்லாது என்று கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி அன்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதனால் மீண்டும் ஆன்லைன் சூதாட்டம் வேகம் எடுத்தது.
ஆன்லைன் சூதாட்டத்தால் பல உயிர்கள் பலியானது. இதனால் தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்றபிறகு ஆன்லைன் சூதாட்டம் பெருங்கேடு என்பதை அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. தமிழக அரசு புதிய தடை சட்டம் இயற்றுவதற்கு பதில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக சட்ட அமைச்சர் அறிவித்தார். அதன்படி தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அடுத்து ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் இயற்ற அரசுக்கு பரிந்துரைக்க வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. தமிழக அரசு அமைத்த வல்லுனர் குழு அறிக்கை தாக்கல் செய்தது.
மேலும் ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பாக பொதுமக்களிடம் அரசு கருத்துக் கேட்டது. இந்த நிலையில் தான் ஆன்லைன் தடை சட்டத்திற்கு கடந்த செப். 27ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.பின்னர் கடந்த வாரம் நடந்த சட்டமன்ற கூட்டத்தில் இந்த தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யவும், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது பற்றியும் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது. இந்த தடை சட்டம் மூலம் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கவகை செய்யப்பட்டுள்ளது. பின்னர் கவர்னரின் ஒப்புதலுக்காக இந்த சட்டம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் இந்த சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு விரைவில் சட்டமாக அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu