பிரணவ் ஜூவல்லர்ஸ் நகை கடை உரிமையாளரின் சொத்து ஆவணங்கள் பறிமுதல்

பிரணவ்  ஜூவல்லர்ஸ் நகை கடை உரிமையாளரின் சொத்து ஆவணங்கள் பறிமுதல்
X
திருச்சி பிரணவ் ஜூவல்லர்ஸ் நகை கடை உரிமையாளரின் சொத்து ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருச்சி பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடை உரிமையாளரின் சொத்து ஆவணங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் பிரணவ் ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் மதன் என்பவர் நகைக்கடை நடத்தி வந்தார். இந்த நகை கடையில் வாங்கும் நகைகளுக்கு செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என அறிவித்ததோடு ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால் இரண்டு ரூபாய் வட்டி வீதம் மாதந்தோறும் ரூ. 10,000 வழங்குவதோடு பத்து மாதம் முடிவில் 106 கிராம் தங்கம் வழங்குவதாகவும் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்தனர்.

இதை நம்பிய மக்கள் நகைக்கடையில் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். அந்த வகையில் பல கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டதாக கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதம் அளித்ததை போன்று வட்டி பணம் மற்றும் நகைகளை அவர்களால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதனால் முதலீடு செய்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அவர்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் நகை கடை மூடப்பட்டது. அதன் உரியைாளர் உள்பட முக்கிய நிர்வாகிகள் தலைமறைவானார்கள். இதுகுறித்து திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மொத்தம் 635 பேர் புகார் செய்தனர். இதனையொட்டி திருச்சி, மதுரை,சென்னை,தஞ்சாவூர், நாகர்கோவில் ஆகிய இடங்களில் இருந்த பிரணவ் ஜுவல்லர்ஸ் நகைக்கடைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது 22 கிலோ வெள்ளி, 1900 கிராம் தங்கம், ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 711 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நகைக்கடை உரிமையாளர் மதன் ,அவரது மனைவி கார்த்திகா, மேலாளர் நாராயணசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். முதலில் மேலாளர் நாராயணசாமி கைது செய்யப்பட்டார். மதன் மதுரை கோர்ட்டில் சரணடைந்தார்.

அவரை போலீசார் கோர்ட் அனுமதியுடன் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தினார்கள். கடந்த ஒரு வார காலமாக நடைபெற்ற இந்த விசாரணையின்போது மதனை போலீசார் திருச்சி, சென்னை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர்.அதில் அசையா சொத்துக்களாக எங்கெங்கு சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன, அதற்கான ஆவணங்கள் எங்கெங்கு வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி அது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். அதன் பின்னர் மதுரை கோர்ட்டில் மதனை ஆஜர் படுத்தி போலீசார் மீண்டும் அவரை சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!