பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
சவுக்கு சங்கர்
பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர். இவர் தனது யூடியுப் சேனல் மூலம் தமிழக அரசின் நடவடிக்கைகள் குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் அவரது குடும்பத்தினர் பற்றி கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களையும் விமர்சனம் செய்து வந்தார்.
இவரது யூடியூப் சேனலுக்கு லட்சக்கணக்கான பார்வையாளர்கள் இருந்து வருகிறார்கள். இதற்கிடையில் சமீபத்தில் காவல்துறையில் உள்ள பெண் போலீசார் பற்றி இவர் அவதூறாக கருதும் வகையில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இது தொடர்பாக பெண் போலீசார் போலீசில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து சவுக்கு சங்கர் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தேனியில் வைத்து அவரை கைது செய்த போலீசார் அவர் மீது கஞ்சா பதுக்கி வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சிஎம்டிஏ அதிகாரியின் புகாரின் பேரில் சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சங்கர் என்கிற சவுக்க சங்கர் (வயது 48 ) த/பெ ஆச்சிமுத்து , மதுரவாயல் ,சென்னை என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு தற்போது கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் சங்கர் என்கிற சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் காவல் சட்டத்தின் சிறையில் அடைக்க உத்தரவிட்டு உள்ளார். இதற்கான குண்டர் தடுப்பு சட்ட காவல் அறிக்கை கோயம்புத்தூர் சிறையில் உள்ள சங்கர் என்கிற சவுக்கு சங்கர் என்பவருக்கு இன்று சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவு சைபர் டைம் பிரிவு மூலமாக சார்வு செய்யப்பட்டுள்ளது.
அவர் மீது சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வழக்கு உட்பட ஏழு வழக்குகளில் மூன்று வழக்குகள் விசாரணையிலும் இரண்டு வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டும் மீதமுள்ள இரண்டு வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக குற்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் மீது தான் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அந்த வகையில் சவுக்கு சங்கர் தொடர்ந்து வெளியில் வந்தால் குற்ற செயலில் ஈடுபடுவார் என கருதி அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu