திருச்சியில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய போலீஸ் டி.எஸ்.பி. கைது
கைது செய்யப்பட்ட போலீஸ் டி.எஸ்.பி. ஆல்பர்ட்.
திருச்சியில் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போலீஸ் டி.எஸ்.பி.யை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருச்சி அருகே உள்ள பூலாங்குடியை சேர்ந்தவர் சிங்கமுத்து. இவரது மனைவி கீதா (வயது 45 ).இவர் பத்திரப்பதிவு ஆவண எழுத்தர் ஆக வேலை செய்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டில் திருவெறும்பூரைச் சேர்ந்த குமார் என்பவருக்கு வீட்டுமனை பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளார். குமார் பதிவு செய்த வீட்டுமனை சுந்தரம் என்பவருக்கு சொந்தமானது என்று சுந்தரம் புகார் அளித்ததின் பேரில் திருச்சி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு தனிப்பிரிவு போலீசார் கடந்த 2021 ஆம் ஆண்டு குமார் மற்றும் எட்டு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும் 2021 ஆம் ஆண்டு பத்திர எழுத்தர் கீதாவை விசாரித்து போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். மேற்படி வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் தற்போது திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பத்திர எழுத்தர் கீதாவை மீண்டும் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
பத்திர எழுத்தர் கீதாவை விசாரணை செய்த திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் டி. எஸ்.பி. ஆல்பர்ட் (வயது 53 )என்பவர் கீதா மீது குற்றப் பத்திரிகையில் பெயர் சேர்க்காமல் இருப்பதற்கும், மேற்படி வழக்கில் இருந்து விடுவிப்பதற்கும் தனக்கு தனியாக ஒரு லட்சம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத பத்திர எழுத்தர் கீதா இதுபற்றி திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டி.எஸ்.பி. மணிகண்டனிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று மதியம் 3 மணியளவில் டி.எஸ்.பி. ஆல்பர்ட் பத்திர எழுத்தர் கீதாவிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் லஞ்ச பணத்தை வாங்கிய போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர் ராணி மற்றும் போலீசார் அடங்கிய படையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். ஆல்பர்ட் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
ஒரு லட்சம் லஞ்சம் வாங்கியதாக டிஎஸ்பி கைது செய்யப்பட்டு இருப்பது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu