பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் காக்கா தோப்பு பாலாஜிக்கு வரும் 25ம் தேதி வரை நீதிமன்றக் காவல்
காக்கா தோப்பு பாலாஜி
பிரபல வடசென்னை தாதா மற்றும் கூலிப்படை கும்பல் தலைவன் காக்கா தோப்பு பாலாஜிக்கு வரும் 25ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது இதனையடுத்து பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
பிரபல வடசென்னை தாதா காக்கா தோப்பு பாலாஜி சென்னை போலீஸாரால் விழுப்புரம் அருகே நேற்று மாலை கைது செய்யப்பட்டார். போலீஸார் கைது முயற்சியில் தப்பி ஓடிய காக்கா தோப்பு பாலாஜிக்குக் கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சென்னையின் பிரபல தாதாக்களில் ஒருவர் காக்கா தோப்பு பாலாஜி (39). 1990களில் சாதாரணமாக சிறு சிறு அடிதடிகளில் ஈடுபட்ட பாலாஜி, பின்னர் வியாசர்பாடி நாகேந்திரன் தொடர்பால் தொடர் கொலைகள், ஆட்கடத்தல், கொலை முயற்சி போன்ற வழக்குகளால் பிரபலமானார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடுத்துள்ள ஏழு கிணறு பகுதியில் உள்ள காக்கா தோப்பு என்கிற பகுதியில் பிறந்து வளர்ந்ததால் சக ரவுடிகளால் காக்கா தோப்பு பாலாஜி என அழைக்கப்பட்டு, போலீஸ் ரெக்கார்டிலும் காக்கா தோப்பு பாலாஜி ஆனார். ரவுடிகளுக்கு இடையே நடந்த கொலைகள், கூலிப்படைகளை ஏவிக் கொல்லுதல் போன்ற காரியங்களால் சென்னையின் பல காவல் நிலையங்களில் காக்கா தோப்பு பாலாஜி மீது பல வழக்குகள் உள்ளன.
ஒரு கட்டத்தில் சிறையே வாழ்க்கையாகிப்போன பாலாஜி சிறைக்குள் இருந்தே ஸ்கெட்ச் போட்டு வெளியில் கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்டுகளுக்கு ஏற்ப கூலிப்படைகளை ஏவிக் கொலை செய்துவந்ததும் தெரியவந்தது. இடையில் செம்மரக் கடத்தலிலும் ஈடுபட்டதால் பணம் கொட்ட ஆரம்பித்தது. அடிக்கடி போலீஸ் கைது சிறைவாசம் என்றாலும் வெளியில் வந்தபின் தலைமறைவாகி தனது வேலையைத் தொடர்வது வாடிக்கையாக இருந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே ரவுடி சி.டி.மணியுடன் காரில் வரும்போது அவர்களைக் கொல்லும் முயற்சி நடந்தது. கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. காரை எதிர் திசையில் செலுத்தி, நூலிழையில் இருவரும் தப்பிச் சென்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் சி.டி.மணியை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து காக்கா தோப்பு பாலாஜியும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்த்த நிலையில், நேற்று விழுப்புரத்தில் வைத்து பாலாஜியை போலீஸார் கைது செய்தனர். கைது சம்பவத்தின்போது தப்பி ஓட முயன்ற பாலாஜி வழுக்கி விழுந்ததில் கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்த போலீஸார் மாவுக்கட்டு போட்டபின் அழைத்துச் சென்றனர்.
இதனையடுத்து இன்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 25 ம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.காக்கா தோப்பு பாலாஜி மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu