ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி
ஜெயக்குமார்.
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என முடிவு செய்ய முடியவில்லை என தென் மண்டல போலீஸ் ஐஜி கண்ணன் கூறினார்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங், திசையன்விளை அருகே கடந்த 4ஆம் தேதி தனக்கு சொந்தமான தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமார் தனது வீட்டை சில மர்ம நபர்கள் கண்காணித்து வருகின்றனர் என்றும் அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் புகார் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்ததாக தெரியவந்தது.
ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயக்குமார் மரணம் கொலையா? தற்கொலையா? என்ற சந்தேகம் நிலவி வரும் நிலையில் சந்தேக மரணம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயக்குமார் தனசிங்கின் உடல் எரிந்த நிலையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இதன் முதற்கட்ட அறிக்கை போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள், உடல் எரிந்து கிடந்த இடத்தில் ஆய்வு செய்து டார்ச் லைட் ஒன்றை கண்டறிந்தனர். தனிப்படைகளைச் சேர்ந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் தென் மண்டல ஐ.ஜி கண்ணன் தலைமையில் நெல்லையில் இன்று நெல்லை சரக டிஐஜி, காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய காவல்துறை அதிகாரிகள், ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஐஜி கண்ணன் கூறியதாவது:-
ஜெயக்குமார் தனசிங் எழுதியாக 2 கடிதங்கள் கிடைத்தன. மரண வாக்குமூலம் எனக் குறிப்பிடப்பட்ட ஒரு கடிதம் எஸ்.பி-க்கு எழுதப்பட்டது, ஆனால் எஸ்.பியிடம் அந்த கடிதம் அதுவரை வந்து சேரவில்லை. இன்னொன்று, அவர் தனது சகோதரி மகனுக்கு எழுதியதாக ஒரு கடிதம். கடிதத்தில், தனக்கு சிலரால் அச்சுறுத்தல் இருப்பதாக கூறியுள்ளார். கடந்த 4ஆம் தேதி ஜெயக்குமார் தனசிங்கின் சடலம் கருகிய நிலையில் கிடைத்தது. அதனை தற்கொலை என சொல்ல முடியாததால் சந்தேக மரணம் என குறிப்பிட்டு விசாரணை நடத்தி வருகிறோம். ஜெயக்குமார் உடல் கருகி இருந்தது. முதுகு மற்றும் பின்புற கால் பகுதியில் மட்டும் எரியாமல் இருந்தது. உடலில் கம்பி லூசாக சுற்றப்பட்டிருந்தது. அவரது உடலோடு 15 செ.மீ * 50 செ.மீ அளவுள்ள ஒரு கடப்பா கல் கட்டப்பட்டிருந்தது. பாத்திரம் கழுவப் பயன்படும் ஸ்க்ரப்பர் வாயில் இருந்தது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் தலா ஒரு டி.எஸ்.பி தலைமையில் 10 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் இன்னும் வரவில்லை. இடைக்கால உடற்கூராய்வு அறிக்கை வந்துள்ளது. மேலும், ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த 32 பேரையும் அழைத்து விசாரித்து அவர்களிடம் வாக்குமூலம் பெற்று விசாரணை நடத்தியுள்ளோம். அறிவியல் பூர்வமான விசாரணையும் ஒருபக்கம் போய்க்கொண்டிருக்கிறது. விரல் ரேகை நிபுணர்கள், சைபர் நிபுணர்களையும் கொண்டு விசாரித்து வருகிறோம். டி.என்.ஏ சோதனை முடிவு இன்னும் கிடைக்கவில்லை. எல்லா வகையிலும் சிறப்பான முறையில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.
போஸ்ட் மார்டம் முதற்கட்ட அறிக்கையில் கொலையா, தற்கொலையா என்பது பற்றியெல்லாம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே தான் சந்தேக மரணம் என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம். இந்த வழக்கில் பல விஷயங்களில் தெளிவு கிடைக்க வேண்டியுள்ளது. அறிவியல்பூர்வ ஆதாரங்கள் வந்ததும் இறுதியாகச் சொல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu