குடும்ப தகராறில் லாரிக்கு அடியில் படுத்து உறங்கிய ஐ.டி. ஊழியர் உயிரிழப்பு

குடும்ப தகராறில் லாரிக்கு அடியில் படுத்து உறங்கிய ஐ.டி. ஊழியர் உயிரிழப்பு
X

மதுரை ஐ.டி. ஊழியர் உயிரிழப்பிற்கு காரணமான லாரி.

மதுரையில் குடும்ப தகராறில் லாரிக்கு அடியில் படுத்து உறங்கிய ஐ.டி. ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வீட்டுக்கு வீடு வாசல் படி என்பார்கள் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு தொடர்பாக ஏற்படும் சண்டையை. எல்லா குடும்பங்களிலும் சண்டைகள் அடிக்கடி ஏற்படுவது இயல்பு. அப்படி ஏற்படும் போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். அப்படி நடக்காமல் இருவரும் மாறி மாறி வெறுப்பை வளர்த்துக்கொண்டால் குடும்பம் பிரிவது மட்டுமல்லமால் குழந்தைகளையும் வாழ்நாள் முழுவதும் பாதிக்கிறது. அதேபோல் கணவன் மனைவி இடையே சண்டை நடைபெறும் போது, திடீரென யாராவது ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்.

அதுவுமே அடிக்கடி தமிழகத்தில் தான் அதிகம் நடக்கிறது. கணவனிடம் சண்டை போட்டு மனைவி உயிரை மாய்த்துக் கொள்வதும், மனைவியிடம் சண்டை போட்டு கணவன் உயிரை மாய்த்து கொள்வதும் அதிகமாக நடக்கிறது. அப்படியான சம்பவம் தான் மதுரையில் நடந்திருக்கிறது.மதுரை அய்யர்பங்களா அய்யாவுத்தேவர் நகரைச் சேர்ந்த ஆனந்தகுமார் (வயது42).

இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஐடி ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தேவி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், ஆனந்தகுமார் தனது மனைவியுடன் மதுரையில் இருந்து ரயில் மூலம் நாகர்கோவிலுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார் . இதற்காக கடந்த சனிக்கிழமை இரவு மதுரை ரயில் நிலையத்திற்கு இருவரும் சென்றனர். அப்போது ஆனந்தகுமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கணவரிடம் கோபித்துகொண்டு தேவி, மட்டும் ரயிலில் புறப்பட்டு நாகர்கோவில் சென்றார்.

இதனால் ஆனந்தகுமார் வீட்டுக்குச் செல்லாமல் ரயில் நிலையத்தின் முன்பகுதியில் ரயில்வே கட்டுமான பணிக்கான பொருட்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் அடிபகுதியில் படுத்து உறங்கி இருக்கிறார். அந்த சமயத்தில், லாரி டிரைவர் சிவா என்பவர், கட்டுமான பொருட்களை கொண்டு செல்வதற்காக அதிகாலை 2 மணியளவில் லாரியை இயக்கி உள்ளார். அப்போது, ஐடி ஊழியர் ஆனந்தகுமார் லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக மதுரை மாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி, லாரி டிரைவர் சிவா மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். உயிரிழந்த ஐடி ஊழியர் ஆனந்தகுமார் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
காளான் சாப்பிட்டாலே உடம்புல என்னென்ன மாற்றம் நிகழும் தெரியுமா....?