பெண் வன்கொடுமை வழக்கில் தி.மு.க. எம்.எல். ஏ. மகன், மருமகள் கைது

பெண் வன்கொடுமை வழக்கில் தி.மு.க. எம்.எல். ஏ. மகன், மருமகள் கைது
X

கைது செய்யப்பட்ட ஆண்டோ மதிவாணன்- மெர்லின்.

பெண் வன்கொடுமை வழக்கில் தி.மு.க. எம்.எல். ஏ. மகன், மருமகள் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், பல்லாவரம் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன் மற்றும் மருமகளை தனிப்படை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் (தி.மு.க) மகன் ஆண்டோ மதிவாணன் திருவான்மியூரில் வசித்து வருகின்றார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இவரது வீட்டில் ஒரு இளம்பெண்ணை வேலைக்கு வைத்துள்ளனர். இப்பெண் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர். 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்வானவர். இப்படி இருக்கையில் ஆண்டோ மதிவாணன் வீட்டில் பணிக்கு வந்த இரண்டே நாட்களில் அவர் வேலை செட்டாகவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் அவரை அனுப்பாமல் தொடர்ந்து வேலை வாங்கியுள்ளனர்.

இது குறித்து அப்பெண் கூறுகையில், "என்னை அடித்து துன்புறுத்தினார்கள். செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டார்கள்" என்று கூறி உடலில் ஏற்பட்டுள்ள காயத்தை காண்பித்தார். இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவிய நிலையில் அரசியல் கட்சிகளும், சமூக செயற்பாட்டு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்

"ஆண்டோவின் துணைவியார் மெர்லின் ஒரு மன நோயாளியைப் போல் தொடர்ந்து அந்த பட்டியலின சிறுமியை துன்புறுத்தி இருக்கிறார். நிர்வாணப் படுத்துவது, உடலில் சூடு போடுவது, கரண்டியால் மார்பில் அடிப்பது, தீக்காயங்கள் ஏற்படுத்துவது, ரத்தக்காயங்கள் ஏற்படுத்துவது, சாதி ரீதியாக இழிவாகப் பேசுவது, பொருளாதார ரீதியாக எதுவும் இல்லாதவள்தானே என்று இழிவு படுத்துவது என்கிற முறையில் மிகக் கொடூரமாக சித்திரவதைகளை செய்துள்ளார். ஆண்டோவும் ஓரிருமுறை தாக்கியுள்ளார். காலை முதல் இரவு வரை மிகக் கடுமையாக வேலைகள் கொடுப்பது, சமைப்பது முதல் துணி துவைப்பது வரை வீட்டில் இருக்கிற அனைத்து வேலைகளையும் அந்த சிறுமியின் மீது இரக்கம் இல்லாமல் திணித்திருக்கிறார்கள்.

இந்த முறையில் 8 மாத காலங்கள் எண்ணிப் பார்க்க முடியாத சித்திரவதையை அந்தச் சிறுமி அனுபவித்திருக்கிறார்.இந்த கொடூர குற்றவாளி ஆண்டோ மதிவாணன் அவரது துணைவியார் மெர்லின் ஆகிய இருவரையும் எஸ்சி எஸ்டி வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, வழக்கு விசாரணையை விரைந்து நடத்தி முடித்து, குற்றவாளிகளுடைய தண்டனையை உறுதி செய்திட வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உளவியல் ரீதியான கலந்தாய்வுகளை ஏற்பாடு செய்திட வேண்டும். அவருடைய உயர்கல்விக்கான செலவுகளை அரசே ஏற்க வேண்டும். எஸ்சிஎஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் அனைத்து நிவாரணங்களையும் அரசு உடனடியாக வழங்கிட வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

அதேபோல நீலம் பண்பாட்டு மையம், நாம் தமிழர் கட்சி, அ.தி.மு.க, பா.ம.க, அ.ம.மு.க. என பல்வேறு கட்சிகளும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .என்று வலியுறுத்தியிருந்தன. இதனை தொடர்ந்து, பல்லாவரம் எம்.எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா மீது காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ய முயன்றனர். ஆனால் அவர்கள் அதற்குள் தலைமறைவாகிவிட்டனர்.

மறுபுறம், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 2 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. எனவே, காவல்துறை தனிப்படைகளை அமைத்து இருவரையும் தேடி வந்தநிலையில், இன்று ஆந்திராவில் அவர்களை கைது செய்துள்ளது. அவர்கள் விரைவில் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று காவல்துறை தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags

Next Story
ai and business intelligence