பெண் சாமியார் திடீர் கைது: போலீசார் முன்பு சாமி ஆடியதால் பரபரப்பு
பெண் சாமியார் பவிதா
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே வீலிநாயக்கன்பட்டி கிராமத்தில், தவயோகி என்பவர் ஆசிரமம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஓராண்டுக்கு முன்பு, ஆசிரமத்தில் திருட்டு சம்பவம் நடைபெற்றதை அடுத்து, அதற்கு உதவி செய்வதாகக்கூறி, திண்டுக்கல்லைச் சேர்ந்த பவிதா வேளாங்கண்ணி - 45 என்பவர் வந்துள்ளார். தன்னை சிபிஐ அதிகாரி எனக்கூறி தவயோகி சாமியாருக்கு அறிமுகமாகி உள்ளார்.
இதனையடுத்து, பெண் சாமியாரான பபிதாவுக்கு சொந்தமாக ஆத்தூர் சித்தரேவு பகுதியில், ஒரு இடம் இருப்பதாகவும் அந்த இடத்தில் முதியோர் இல்லம் நடத்தலாம் எனவும் கூறி, தவயோகியிடம் இருந்து, 11 லட்சம் ரூபாயை வாங்கியதாக கூறப்படுகிறது அதில் வங்கியின் மூலமாக 5.5 லட்சம் அவருக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
மேலும், கொடைக்கானலில் ஒரு இடம் உள்ளதாகவும் அந்த இடத்தில் ஆசிரமம் கட்டலாம் என்றும் கூறி, பவிதா பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, தவயோகி தனது ஆசிரமத்தில் இல்லாத நேரத்தில், அங்குள்ள சுந்தரேசன் என்பவரின் உதவியோடு, 35 பவுன் நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களான பத்திரங்களை, பவிதா எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, தவயோகி - பவிதா இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, ஆசிரமத்தில் புலித்தோல் இருப்பதாக போலீசில் பவிதா புகார் கொடுத்தார். காவல்துறையின் விசாரணையில் இருந்து தப்பிக்க, தவயோகி தலைமறைவானார்.
அந்த சமயத்தில், ஏற்கனவே தவயோகியிடம் பெண் சாமியார் பவிதா பெற்றிருந்த பவர் ஆஃப் அட்டார்னி என்று சொல்லப்படும் தற்காலிக உரிமையாளர் என்ற அடிப்படையில், ஆசிரமத்தை பவிதா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, பவிதாவின் பவர் ஆப் அட்டர்னி அதிகாரத்தை ரத்து செய்த தவயோகி, நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 35 பவுன் நகை மற்றும் நிலம் வாங்கி தருவதாக கூறி வாங்கப்பட்ட 11 லட்ச ரூபாய் பணம் மோசடி செய்ததாக, அதில் கூறப்பட்டு இருந்தது. அந்த புகாரில் அடிப்படையில், நிலக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, 2 வழக்குகளில் கீழ் பெண் சாமியார் பவிதா வேளாங்கண்ணியை தேடிவந்தனர்.
இந்நிலையில், திண்டுக்கல்லில் உள்ள மேற்கு ஆரோக்கிய மாதா தெருவில் வசித்து வரும் அவருடைய வீட்டில் பதுங்கியிருந்த பெண் சாமியார் பவிதா வேளாங்கண்ணி மற்றும் அவரது உதவியாளரும் சகோதரியுமான பட்ரோஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர் .
விசாரணையில், சி.பி.ஐ அதிகாரி என பல இடங்களில் மோசடியில் ஈடுபட்டு வந்ததும், மற்றும் இந்து யுவ மோட்சா பரமாச்சாரியார் என்ற அமைப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் தன்னை காளி என்றும் காளியின் மறு உருவம் என்றும், விசாரணையின் போது, அவர் சாமி ஆடியதால் காவல்துறையினர் அதிர்ச்சியுற்றனர். இதனை அடுத்து நிலக்கோட்டை குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu