தூத்துக்குடி அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது
கைது செய்யப்பட்ட ரகுராஜன்.
தூத்துக்குடியில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி வெளிநாட்டு வேலைக்கான போலி பணி நியமன ஆணை கொடுத்து ரூபாய் 4 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஹை ஸ்கூல் தெருவைச் சேர்ந்த நெப்போலியன் மகன் பசும்பொன் முத்துராமலிங்கம் (வயது38) என்பவர் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் வைத்திருந்த வெளிநாட்டு வேலைக்கான விளம்பர போஸ்டரை பார்த்து நியூசிலாந்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்று கருதி அதில் உள்ள தொலைபேசி எண்ணை அழைத்து சிவகங்கை மாவட்டம் டி.புதூர் ஆக்ஸ்போர்டு நகரைச் சேர்ந்த காசி மகன் ரகுபதிராஜன் (48) என்பவரிடம் தொடர்பு கொண்டார்.
ரகுபதிராஜன் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் ரூபாய் 4 லட்சம் ஆகும் என்று கூறி பாஸ்போர்ட்டில் போலியான Work permit Stamping மற்றும் Work ஆர்டர் அனுப்பி பசும்பொன் முத்துராமலிங்கத்தை நம்ப வைத்து ஏமாற்றி அவரிடமிருந்து கடந்த 21.01.2022 ம் தேதி முதல் 19.05.2023 வரை மொத்தம் ரூபாய் 4 லட்சம் பணத்தை பெற்று கொண்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பாமலும் பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி மோசடி செய்துள்ளார். இதுகுறித்து தான் ஏமாற்றப்பட்டதையறிந்த மேற்படி பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் புகார் அளித்துள்ளார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சிவசுப்பு மேற்பார்வையில் மாவட்ட குற்ற பிரிவு ஆய்வாளர் அந்தோணியம்மாள், உதவி ஆய்வாளர் முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், ராஜ்குமார், மோகன்ஜோதி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு,ரகுபதிராஜனை சிவகங்கை மாவட்டம் டிபுதூர் ஆக்ஸ்போர்டு நகரில் வைத்து கைது செய்து தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் - IV ல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைத்தனர்.
மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மேற்படி ரகுபதிராஜன் இதே போன்று பலரையும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி ரூபாய் 2 கோடி பணத்தை மோசடி செய்து ஏமாற்றியுள்ளது தெரியவந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu