திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே மார்க்கெட் கட்டிடம் மீது டீசல் குண்டு வீச்சு
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பின்புறமுள்ள காளியம்மன் கோவில் தெரு மாநகராட்சி மார்க்கெட் எதிரில் அப்பகுதியை சேர்ந்த குற்ற வழக்கில் தொடர்புடையவர் உள்பட2 பேர் நேற்று மாலை அமர்ந்து, மது அருந்தியுள்ளனர். அப்போது, ஏரியாவுக்குள் 'பெரிய ஆளாக என்னசெய்யலாம்' என்று தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவர்கள், அங்கிருந்த சரக்குஆட்டோவில் இருந்து டீசலை டியூப் போட்டு பிடித்து, மதுபாட்டிலில் ஊற்றி டீசல் குண்டாக மாற்றி எதிரில் இருந்த மாநகராட்சி மார்க்கெட்கட்டிடம் மீது வீசியுள்ளனர்.
இதில் அந்த பாட்டில் கட்டிடத்தைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த தகரத்தின் மீது விழுந்து டீசல் தீப்பற்றி எரிந்துள்ளது.இதைப்பார்த்து அப்பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.இதற்கிடையே அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்சிவராமன் மற்றும் போலீசார் அப்பகுதியில் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர். தொடர்ந்து, அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இச்சம்பவத்தால் நேற்று மாலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் நடமாட்டம் மிகுந்த சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள மார்க்கெட் பகுதியில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவம் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தீபாவளி நேரம் என்பதால் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் வியாபார ரீதியாக பொதுமக்கள் அதிகமாக திருச்சிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்த நேரத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதால் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu