செங்கல்பட்டு இரட்டை கொலை, என்கவுன்டரில் நடந்தது என்ன? பகீர் பின்னணி
செங்கல்பட்டில் அப்பு கார்த்தி மற்றும் மகேஷ் ஆகிய இரண்டு பேரை, மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று, நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தது. இதனையடுத்து, கொலைக்கான காரணம் குறித்தும், கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்தும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவந்தனர். செங்கல்பட்டு நகர காவல் நிலையம் வாசலில் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உணவு சமைத்து சாப்பிட்ட கொலையாளிகள்
இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள, திருப்புலிவனத்தில் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மாதவன் தனது கூட்டாளிகளுடன் தனது உறவினர் வீட்டில் தனது தந்தை மாணிக்கம் உதவியுடன் பதுங்கி இருந்துள்ளார். இரவு உணவை அவர்கள் சமைத்து உண்டுள்ளனர். இதனை அடுத்து, முகமது மொய்தீன் மற்றும் தினேஷ் ஆகியோர் அங்கிருந்து இருங்குன்றம் பள்ளி மலைப்பகுதிக்கு சென்று பதுங்கி உள்ளனர்.
என்கவுன்டர் ஏன் நடந்தது?
இந்த சூழலில் திருப்புலிவனத்தில் மாதவன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, முகமது மொய்தீன் மற்றும் தினேஷ் ஆகியோரை காவல் துறையினர் மாமண்டூர் பாலாறு அருகே உள்ள இருங்குன்றம் பள்ளி மலைப்பகுதியில் பிடிப்பதற்காக, நேற்று காலை சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளாலும் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து தற்காப்புக்காக காவல் துறையினர், அவர்கள் இருவரையும் என்கவுன்ட்டர் செய்யும் நிலை ஏற்பட்டது. இந்த என்கவுன்ட்டரில் இருவரும் உயிரிழந்தனர். ஆய்வாளர் ரவி குமார் தலைமையிலான போலீசார் இந்த என்கவுண்டர் சம்பத்தில் ஈடுபட்டனர். இதில் சுரேஷ்குமார் மற்றும் பரத்குமார் ஆகிய இரண்டு காவலர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது அவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலைக்கான காரணம்
மகேஷ் மற்றும் அப்பு கார்திக்கின், நண்பர் ஹரி கிருஷ்ணன் என்பவருக்கும், தினேஷின் தங்கை பவித்ராவுக்கும் காதல் இருந்துள்ளது. இதனை தினேஷ் எதிர்த்துள்ளார். அப்புகார்த்திக், மகேஷ் இருவரும் ஹரிகிருஷ்ணனுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இதனால் இவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக 2018-ல் ஒரு வழக்கு உள்ளது. இந்த முன்விரோதத்தில் இந்தக் கொலை நடந்துள்ளது .
இந்நிலையில் கடந்த புதன்கிழமை இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது அப்பொழுது அப்பு கார்த்திக் தீனா என்கிற தினேஷ், ஆஜராக கூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் தினேஷ் தனது கூட்டாளிகளுடன் இந்த சம்பவத்தை அரங்கேற்றி உள்ளார். காதல் விவகாரம் இரட்டைக் கொலை மற்றும் இரண்டு என்கவுண்டரில் முடிந்துள்ளது.
பின்னணியில் இருப்பது யார்?
சமீபகாலமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நாட்டு வெடிகுண்டுகள் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கு பின்னணியில் குன்றத்தூர் வைரவன் என்ற பிரபல ரவுடி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஜெசிக்கா என்ற பெண், பிரபல நாட்டு வெடிகுண்டு தயாரிப்பாளர் திருப்போரூர் அசோக் என்பவரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீது நாட்டு வெடிகுண்டு தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த மே மாதம் திருப்போரூர் பகுதியில் இவர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் எதிர்பாராத விதத்தில் வெடித்ததில், அவருடைய ஒரு கண் பார்வை முற்றிலும் செயல் இழந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு தற்போது குண்டாஸ் போடப்பட்டு சிறையில் இருக்கிறார்.
அசோக் கைது செய்யப்பட்ட பிறகு ஜெஸ்ஸிகா நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவத்தில் ஜெஸ்சிகா நாட்டு வெடிகுண்டு செய்து கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
முகம் சிதைக்கப்பட்டு கொலை
செங்கல்பட்டு நகர அதிமுக செயலாளராக இருந்தவர் குமார் என்கிற குரங்கு குமார். 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதி முகம் சிதைந்த நிலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது சம்பந்தமாக 8 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் முக்கிய குற்றவாளியாக ரவி பிரகாஷ் கைது செய்து காவல்துறையினர் அப்போது சிறையில் அடைத்தனர். இதனையடுத்து, திமுகவில் இணைந்து செங்கல்பட்டு நகர மன்ற துணைத் தலைவராக வெற்றி பெற்றார். ஜனவரி 6 2012 ஆம் ஆண்டில், ரவி பிரகாஷ் 20 பேர் கொண்ட கும்பலால் முகம் சிதைக்கப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அப்பு கார்த்தி சம்பந்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரவிபிரகாஷ் கொலை செய்யப்பட்ட அதே நாளில் அப்பு கார்த்தியும் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அப்பு கார்த்தியும் வெடிகுண்டு வீசி முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காவல்துறை சொல்வது என்ன?
நேற்று என்கவுன்டர் ஏன் நடைபெற்றது என்று, போலீசார் தரப்பில் விசாரித்தபோது, இருகுன்றப்பள்ளி என்ற இடத்தில் போலீஸார் பிடிக்க முயன்றபோது இவர்கள் போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டு வீசியும், கத்தியால்வெட்டியும் தாக்க முயன்றனர். இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் ரவிக்குமார் 4 ரவுண்டுகள் சுட்டதில் தினேஷ், பிஸ்கட் மொய்தீன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
மாதவன் மற்றும் இந்தக் கொலையில் தொடர்புடைய ஜெஸ்ஸிகா என்பவரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம். ரௌடிகளை ஒடுக்கு குண்டாஸ் சட்டங்களையும் ஏவி வருகிறோம். நாட்டு வெடிகுண்டுகள் எங்கிருந்து கிடைக்கிறது என்றும் விசாரித்து வருகிறோம் என்று, போலீசார் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu