மனைவியை அடித்து கொலை செய்து விட்டு நாடகமாடிய பீகார் இளைஞர் கைது

மனைவியை அடித்து கொலை செய்து விட்டு நாடகமாடிய பீகார் இளைஞர் கைது
X

கைது செய்யப்பட்ட மீத்லேக்குமார்.

கிருஷ்ணகிரி அருகே மனைவியை அடித்து கொலை செய்து விட்டு நாடகமாடிய பீகார் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா பேரிகை காவல் நிலையத்திற்கு உட்பட்ட தாசன்புரம் கிராமத்தில் தனியார் கல்குவாரி கிரசர் ஒன்று உள்ளது.

இந்த தொழிற் சாலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒம்கார் மண்டேல் மகன் மீத்லேக்குமார் (வயது 24) என்பவர் லாரி டிரைவராக வேலைக்கு சேர்ந்து உள்ளார்.

இவருக்கு திருமணமாகி ராஜில்குமாரிஸ் (22) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் காமன் தொட்டியில் உள்ள ஒருவாடகை வீட்டில் குடும்பமாக இருந்து கொண்டு மீத்லேக்குமார் தினமும் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் அவரது மனைவி வீட்டின் அருகே உள்ள பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபரிடம் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாக தெரிகிறது.இதுகுறித்த தகவல் மீத்லேக்குமாருக்கு தெரிய வந்து, தனது மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை கண்டித்து வந்தார். அதைபொருட்படுத்தாத ராஜில்குமாரிஸ் மீண்டும் செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது.

இதன் காரணமாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் தனது மனைவியை தீர்த்து கட்ட வேண்டும் என்று முடிவு செய்த மீத்லேக்குமார் நேற்று முன்தினம் இரவு தனது மனைவியிடம் அன்பாக பேசி தான் வேலை செய்யும் கிரசர் தொழிற்சாலைக்கு லாரியில் அழைத்து சென்றுள்ளார்.

அங்கு கணவன், மனைவியும் இருவரும் லாரியை விட்டு இறங்கி பேசிகொண்டே சென்றனர். அப்போது மீத்லேக்குமார் வண்டியில் இருந்து இரும்பு கம்பியை எடுத்து மனைவியின் நெற்றியிலும் தலையிலும் அடித்து கொலை செய்தார். இறந்த தனது மனைவியின் உடலை தரதரவென இழுத்து சென்று தொழிற்சாலையில் உள்ள 400 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் போட்டு விட்டு அங்கிருந்து எதுவும் நடக்காதது போல் சாதாரணமாக வீட்டிற்கு வந்துள்ளார்.

பின்னர் அவர் மறுநாள் காலை தனது நண்பரிடம் தனது மனைவியை காணவில்லை என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து மீத்லேக்குமார் தனது நண்பருடன் சூளகிரி போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் செய்தனர். அப்போது போலீசார் மாயமான ராஜில்குமாரிஸ் குறித்து அவரது கணவரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

இதில் மீத்லேக்குமார் தனது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கொலை செய்து விட்டு தொழிற்சாலையில் உள்ள பள்ளத்தில் உடலை போட்டு விட்டதாக கூறினார்.

உடனே போலீசார் மீத்லேக்குமாரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு ராஜில்குமாரிசின் உடலை கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கைதான மீத்லேக்குமாரை போலீசார் ஓசூர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி