ஆருத்ரா நிதி நிறுவன மோசடி: இயக்குனர் ராஜசேகரை சென்னைக்கு அழைத்து வர முடிவு

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி: இயக்குனர் ராஜசேகரை சென்னைக்கு அழைத்து வர முடிவு
X
துபாயில் கைது செய்யப்பட்ட ஆருத்ரா நிதி நிறுவன இயக்குனர் ராஜசேகரை சென்னைக்கு அழைத்து வர போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோயமுத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற பெயரில் ஆருத்ரா தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.

இங்கு ரூ 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ 36 ஆயிரம் வரை வட்டியாக வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டது. இதை பலரும் நம்பி அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் அந்த நிறுவனமோ 1,09,255 பேரிடம் ரூ 2,438 கோடி வரை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 10-க்கும் மேற்பட்டோரை அடுத்தடுத்து கைது செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக அந்த நிறுவனத்திற்கு சொந்தமான வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ 96 கோடி முடக்கப்பட்டது. மேலும் ஆருத்ரா நிறுவனத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 125 க்கும் மேற்பட்ட சொத்துகளும் முடக்கப்பட்டன.

இது ஒரு புறம் இருக்க அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் ராஜசேகர் உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்குத் தப்பி சென்றுவிட்டதாக தகவல் வெளியானது. அவர்களை பிடிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கினர். மேலும் இன்டர்போல் மூலம் கைது செய்ய ரெட் கார்னர் நோட்டீஸும் விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் சர்வதேச போலீஸார் (இன்டர்போல்) உதவியுடன் ராஜசேகரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அபுதாபியில் கைது செய்தனர். இந்த நிலையில் ராஜசேகரை சென்னைக்கு அழைத்து வர தமிழக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் துபாய் சென்றுள்ளனர். துபாய் நீதிமன்ற அனுமதியுடன் ராஜசேகரை அழைத்து வர இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!