முந்திரி பருப்பு அனுப்புவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்தவர் கைது

முந்திரி பருப்பு அனுப்புவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்தவர் கைது
X
கைது செய்யப்பட்ட முகமது ரபீக்.
முந்திரி பருப்பு அனுப்புவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

முந்திரி பருப்பு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருவதாக கூறி ரூபாய் 40,50,000/- பணம் மோசடியில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்தவரை மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி நடுக்குப்பன் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரின் மகன் தேவராஜ் (வயது53). இவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் முந்திரி பருப்பு வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் தூத்துக்குடி கிரகோப் தெருவைச் சேர்ந்த சார்லஸ் மகன் தாமஸ் பியோ என்பவர் மூலம் அறிமுகமான தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு புல்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சாதிக் மகன் முகமது ரபிக் (42) என்பவர், தான் கடலூர் மாவட்டத்தில் முந்திரி பருப்பு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருவதாகவும் தன்னிடம் ரூபாய் 42,00,000/- மதிப்புள்ள 50 டன் முந்திரி பருப்பு இருப்பதாகவும் பணத்தை அனுப்பி வைத்தால் உடனடியாக சரக்கை அனுப்பி வைப்பதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார்.

இதனை நம்பி மேற்படி தேவராஜ் 10.05.2021ம் தேதி ரூபாய் 50,000/- பணமும், 11.05.2023 அன்று ரூபாய் 42,00,000/- பணமும் என மொத்தம் ரூபாய் 42,50,000/- பணத்தை அவரது வங்கி கணக்கிலிருந்து முகமது ரபிக் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட முகமது ரபிக் சரக்கை அனுப்பாமல் ஏமாற்றியுள்ளார். இதனால் தேவராஜ் பணத்தை முகமது ரபிக்கிடம் பலமுறை திருப்பி கேட்டதில் அவர் ரூபாய் 2,00,000/- பணம் மட்டுமே திருப்பி அனுப்பி விட்டு மீதி தொகையை திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதனையடுத்து தேவராஜ் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட குற்ற பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி மாவட்ட குற்ற பிரிவு ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர் அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், மோகன் ஜோதி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு, முகமது ரபிக் என்பவரை இன்று (08.01.2024) கைது செய்தனர். பின்னர் அவரை தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் - IV ல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைத்தனர்.

மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself