திருமண ஆசை காட்டி 190 பெண்களிடம் பல ஆயிரம் பணம் மோசடி செய்தவர் கைது
கைது செய்யப்பட்ட நரேஷ் புரி.
மேட்ரிமோனி ஆப் மூலமாக சுமார் 190 பெண்களிடம் மோசடியில் ஈடுபட்ட 45 வயது நபரை கோவை போலீசார் கைது செய்துள்ளனர். சுங்கத்துறை அதிகாரி, தொழில் அதிபர் எனக் கூறிக்கொண்டு கடந்த 2 ஆண்டுகளாக திருமணம் ஆன பெண்களிடம் கைவரிசை காட்டி வந்துள்ளார் இந்த மோசடி மன்னன்.
மேட்ரிமோனி உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் சுங்கத்துறை அதிகாரி எனக் கூறிக்கொண்டு சுமார் 190 பெண்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு 45 வயதான நரேஷ் புரி என்பவர் ஏமாற்றியுள்ளார். ஆன்லைனில் விவாகரத்து மற்றும் கணவனை இழந்த பெண்களை குறிவைத்து ஆசை வார்த்தை கூறி பெண்களிடம் பணத்தை கறந்துள்ளார். இந்த மோசடி சம்பவம் தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்
மேட்ரிமோனி வெப்சைட்டில் 45 வயதான நரேஷ் புரி போலியாக ஒரு அக்கவுண்டை ஓபன் செய்துள்ளார். அதில் உள்ள சுயவிவர பகுதியில், தான் ஒரு தொழில் அதிபர் என்றும் பல லட்சம் வருமானம் இருப்பதாகவும் அளந்து விட்டுள்ளார். இந்தி மட்டுமே தெரிந்த அவர், இந்தி பேசும் பெண்களை பார்த்து பேசி வந்துள்ளார். அதிலும் திருமணமாகி விவாகரத்து ஆன பெண்கள் மற்றும் கணவனை இழந்த பெண்களை குறிவைத்து அவர்களிடம் பேசியுள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர்களுடன் இனிக்க இனிக்க பேசிவிட்டு அதன்பிறகு தலைமறைவாகிவிடுவாராம். திருமணம் ஆகாத பெண்கள் என்றால் அதிகம் கேள்வி கேட்பார்கள் என்பதால் இவர் திருமணம் முடிந்து தனியாக இருக்கும் பெண்களை டார்கெட் செய்துள்ளார். 2 ஆண்டுகளில் சுமார் 190 பெண்களை நரேஷ் புரி ஏமாற்றியிருக்கிறார். மோசடி செய்து பெண்களிடம் பேச வேண்டும் என்பதற்காக தனியாக ஒரு சிம் கார்டையும் போனையும் பயன்படுத்தி வந்துள்ளார். தன்னை நேரில் சந்திக்க விரும்பும் பெண்களை பெங்களூர் வர சொல்வதை வாடிக்கையாக கொண்ட புரி.. கடைசி நேரத்தில் தனது பர்ஸ் தொலைந்துவிட்டது.. நெருக்கடியில் இருக்கிறேன் எனக் கூறி பணம் போட்டுவிடுமாறு கூறுவாராம்.
இதை நம்பி பெண்கள் ஆயிரக்கணக்கில் பணம் போட்டுவிட்டதும் அடுத்த நொடியே போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தலைமைறைவு ஆகிவிடுவாராம். 2 வருடங்களாக இப்படி பெண்களை ஏமாற்றி பல ஆயிரம் ரூபாய் மோசடி செய்து வந்த புரி.. அண்மையில் கோவையை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகார் மூலம் சிக்கியுள்ளார். கோவையை சேர்ந்த பெண் ஒருவர் விவாகரத்து ஆன தனது மகளுக்காக புரியிடம் பேசியிருக்கிறார். பெங்களூரு கே.எஸ்.ஆர் ரயில்வே ஸ்டேஷனில் அவர்களை சந்தித்த புரி, 10 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். அதன்பிறகு தலைமறைவாகியுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த பெண் அளித்த புகாரின் பேரில் தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில்தான் நரேஷ் புரி சிக்கியுள்ளார்.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றும் நபர்கள் தங்களது கைவரிசையை காட்டிக்கொண்டு தான் இருப்பார்கள். அந்த வகையில் தான் நரேஷ்புரியும் மேட்ரிமோனி மூலம் நவீன மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவரை போன்றவர்களை பிடிப்பதற்காக காவல் துறையின் சைபர் கிரைம் போலீசாரும் நவீன யுத்திகளை கையாளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu