கோவையில் கார் வெடித்து தீப்பிடித்த வழக்கில் 5 பேர்கைது
தீப்பிடித்து எரிந்த கார்.
கோவை கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக மாறிக்கொண்டு வருகிறது. மத ரீதியாக அடிக்கடி இங்கு மோதல்கள் நடக்கின்றன. 1998 ஆண்டு கோவையில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் 35 ஆண்கள், 10 பெண்கள், ஒரு குழந்தை உட்பட மொத்தம் 46 பேர் பலியானார்கள். மேலும் ஆயிரக்கணக்கான பேர் காயம் அடைந்தனர். மொத்தம் 13 இடங்களில் குண்டுகள் வெடிக்கப்பட்டன. இந்த குண்டுவெடிப்புகளுக்கு இஸ்லாமிய இயக்கம் ஒன்றின் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் கைது செய்யப்பட்ட பலர் இன்றும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் கோவையில் பல இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இப்படி கோவை மாநகர் சில காலமாகவே பதற்றமாகவே உள்ளது.
வெடித்து தீப்பிடித்த கார்
இந்த நிலையில் தான் கோவை மாநகரத்தின் முக்கிய பகுதியான கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் 2நாட்களுக்கு முன்பு கார் ஒன்று வெடித்து தீப்பிடித்தது. இதில் காரில் இருந்த ஒருவர் உடல் கருகி செத்தார். தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உடனடியாக கோவைக்கு விரைந்தார். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த 6 தனிப்படைகளை அமைத்தார்.காரில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. மேலும், விபத்து ஏற்பட்டபோது பயங்கர வெடி சத்தம் கேட்டதும், கார் உருக்குலைந்து கிடந்ததையும் பார்க்கும் போது காரில் வெடிகுண்டுகள் இருந்திருக்கலாம் என்ற கோணத்திலும் தனிபடை போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதனால் சம்பவ இடத்தில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு நிபுணர்களும் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினார்கள். தீயில் கருகி கிடந்த காரின் உடைந்த பாகங்கள், எரிந்த நிலையில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள், ஆணிகள்,பால்ரஸ் குண்டுகள் ஆகியவற்றையும் போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் உடல் கருவி இறந்தவர் கோவை உக்கடம் ஜி.எம்.நகரைச் சேர்ந்த ஜமேஷா முபின்(25) என்று தெரியவந்தது.
5பேர் கைது
இதைத்தொடர்ந்து ஜமேஷா முபின்வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கிருந்து வெடி பொருட்களை போலீசார் கைப்பற்றினார்கள். அதோடு அந்த பகுதியில் உள்ள கடைகள், வீடுகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் முக்கிய தடயங்கள் சிக்கின. காரில் தீப்பிடித்து கருகி உயிரிழந்த ஜமேஷா முபின் சனிக்கிழமை இரவு வீட்டிலிருந்து புறப்பட்டு செல்வதும், அவருடன் 5 பேர் இருப்பதும், அவர்கள் ஒரு மூட்டையை தூக்கி செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தன. அவருடன் இருந்த 5பேர்கள் பற்றி போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.
இந்த நிலையில் ஜமேஷா முபின் வீட்டில் இருந்து வெளியே சென்ற போது அவருடன் இருந்த ஐந்து பேரை போலீசார் அடையாளம் கண்டுபிடித்து இப்போது கைது செய்துள்ளனர். உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோர் தான் அந்த 5பேரும்.
சதி திட்டமா?
கைதாகி உள்ள 5பேரிடமும் போலீசார் அதிரடி விசாரணையை நடத்தி வருகிறார்கள். உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டில் இருந்து இந்த ஐந்து பேரும் தூக்கி சென்ற மூட்டையில் என்ன இருந்தது? அதை எங்கு மறைத்து வைத்து இருக்கிறார்கள்? காரில் சிலிண்டருடன் வெடி மருந்துகள் இருந்ததா?, கோயில் அருகே கார் தற்செயலாக வெடித்ததா அல்லது பெரிய சதி செய்ய திட்டமிட்டு வெடிக்க வைக்கப்பட்டதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் மேலும் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu