திருச்சியில் இருசக்கர வாகனத்தில் வீலிங் சாகசம் செய்த 3 இளைஞர்கள் கைது
திருச்சி நகரில் இருசக்கர வாகனத்தில் வீலிங் என்கிற சாகசம் செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாநகரில் பொது மக்களின் உயிருக்கு அச்சம் விளைவிக்கும் வகையில் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் அஜாக்கிரதையாகவும் விபத்து ஏற்படுத்தும் வகையில் இரு சக்கர வாகனங்களில் வீலிங் எனப்படும் சாகசங்களில் ஈடுபட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி திருச்சி மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைகளில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டியும், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் வரும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணி பஜார் பெரியசாமி டவர் அருகில் டைமண்ட் பஜாரை சேர்ந்த உசேன் பாஷா (வயது 24 )என்பவர் வீலிங் சாகசத்தில் ஈடுபட்டபோது அவரை கைது செய்து வாகனம் கைப்பற்றப்பட்டு உள்ளது.
அதேபோல காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பால்பண்ணை டூ செந்தண்ணீர்புரம் சர்வீஸ் ரோட்டில் வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட தாராநல்லூரை சேர்ந்த ராஜேஷ் (வயது 21 )என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அதேபோல அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குழுமாயி அம்மன் கோவில் கரை ரோட்டில் கமலா நிகேதன் பள்ளி அருகில் வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட கல்லாங்காட்டை சேர்ந்த அஜய் (வயது 34 )என்பவரையும் போலீசார் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
மேற்கண்ட மூன்று நபர்களும் இரு சக்கர வாகனத்தில் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும் ஆபத்தான நிலையிலும் வாகனம் ஓட்டி சாகசம் செய்ததற்காக மேற்படி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் திருச்சி நகரில் இதுபோன்று இருசக்கர வாகனத்தில் சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொண்டும் வாகனங்களை பறிமுதல் செய்தும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் காமினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu