லேப்டாப் பைக்குள் 2வயது குழந்தை சடலம்!
பக்கத்து வீட்டு வாசல் கதவில் தொங்க விடப்பட்டிருந்த லேப்டாப் பைக்குள் 2 வயது பெண் குழந்தையின் சடலம் இருந்தது பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. கிரேட்டர் நொய்டா பகுதியில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரேட்டர் நொய்டா பகுதியைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் உடுத்தப்பட்ட ஆடைகள் தொங்கவிடப்படும் ஹேங்கரில் இருந்த லேப்டாப் பைக்குள் 2 வயது சிறுமியின் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த சிறுமி அதே தெருவில் வசித்து வரும் குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது அந்த பகுதியில் பேரதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. இதுகுறித்து அந்த பகுதி காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிரேட்டர் நொய்டாவில் கடந்த 3 தினங்களுக்கு முன் காணாமல் போன அதே தெருவைச் சேர்ந்த 2 வயது குழந்தையை காவல்துறையினர் உதவியுடன் தேடி வந்துள்ளனர் குழந்தையின் பெற்றோர். இந்நிலையில் அந்த குழந்தை பக்கத்து வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
மான்சி என்று பெயருடைய அந்த குழந்தை பக்கத்து வீட்டில் லேப்டாப் பேக்கில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்.
மாயமான பக்கத்து வீட்டுக்காரர் மீது சந்தேகம் எழுந்த நிலையில், அவரது வீட்டை சோதனையிட்ட போது, அவர் கழற்றி போட்டிருந்த துணிகள் தொங்கவிடப்பட்ட இடத்தின் மீது சந்தேகம் எழ, அங்கு பரிசோதித்த போது குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
2 வயது மான்சியின் உடலை பத்திரமாக மீட்ட காவல்துறை அதிகாரிகள் அதனை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, உடற்கூறு ஆய்வுக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதன்மூலம் குழந்தை எப்படி இறந்தார், எப்போது இறந்தார், குழந்தையின் மீது காயங்கள் ஏதும் உள்ளனவா என்பன உட்பட பல விசயங்களைக் கண்டறியமுடியும்.
மான்சிக்கு 2 வயது ஆகிறது அவரது பெற்றோர் அருகிலுள்ள கம்பெனியில் தினக்கூலியாக வேலை செய்து வருகின்றனர். மான்சிக்கு 7 மாத தம்பி ஒருவரும் இருக்கிறார். சம்பவத்தன்று அருகிலுள்ள கடைத்தெருவுக்கு சென்ற மான்சியின் அம்மா, திரும்பி வந்து பார்க்கும்போது மான்சியைக் காணவில்லை. உடனே அவரது தந்தைக்கு அழைத்து சொல்லி குழந்தையை அக்கம்பக்கத்தில் தேடினர். கிடைக்காத நிலையில், வேலைக்கு போகாமல் தொடர்ந்து தேடி வந்திருக்கிறார்கள்.
பின்னர் மான்சியின் தந்தை ஷிவ்குமார் அருகிலுள்ள ராகவேந்த்ரா என்பவரது வீட்டில் துர்நாற்றம் வீசுவதை அறிந்து அவரது வீட்டுக்கு செல்ல முயன்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்க்க முடிவு செய்துள்ளனர். காவல்துறை உதவியுடன் வீட்டுக்குள் சென்று பார்க்கையில் அங்கே லேப்டாப் பைக்குள் குழந்தையின் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சடலம் இருந்த வீட்டின் உரிமையாளர் காணாமல் போய்விட்ட நிலையில், அவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தனிப்படை அமைக்கப்பட்டு அவரைப் பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நொய்டா காவல்துறை அதிகாரி ராஜீவ் தீக்ஸித் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu